மதுரையில் சமத்துவபுரம் புனரமைப்பு பிரச்னை: மாற்று இடம் கொடுக்காமல் வீடுகள் இடிக்கப்படுவதாக புகார்

சமத்துவபுரம் புனரமைப்பு பிரச்னை

மதுரை மாவட்டத்தில் மாற்று இடம் கொடுக்காமல் சமத்துவபுர வீடுகள் இடிக்கப்படுவதாக புகார் எழுந்தது. மக்களின் எதிர்ப்பை அடுத்து வீடுகள் இடிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

புனரமைப்புப் பணி குறித்து கடந்த ஒரு மாதகாலமாக மக்களிடம் தெரிவித்து வந்தததாக இப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் கூறுகிறார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் குட்லாடம்பட்டி அருகே பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இந்த சமத்துவபுரம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கடந்த 1998-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு மொத்தம் 100 வீடுகள் உள்ளன. அத்துடன், சமுதாய நலக்கூடம், நூலகம், பகுதிநேர ரேஷன் கடை, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

இந்த சமத்துவபுரத்தில் புனரமைப்பு பணிகளை செய்வதற்கு தமிழக அரசு சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளது. அதன்படி குடியிருப்புகள், தார்ச்சாலை, மேல் நீர் தேக்க தொட்டி, ரேஷன் கடை, அங்கன்வாடி, விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகள் புதுப்பிக்கப்பட இருக்கின்றன.

வீடுகள் புதுப்பிக்கப்பட இருக்கின்றன என்பது மிகுந்த மகிழ்ச்சியாய் அமைந்தாலும், குடியிருப்புகளை இடித்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

"தற்போது குடியிருந்து வரும் குடியிருப்பு வாசிகளுக்கு உரிய அடைக்கலம் எதுவும் கொடுக்காமல் அவர்களின் உடைமைகள், சொத்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல் சுமார் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன" என்கிறார் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி.

"வீடுகளை புனரமைத்து கொடுக்கிறோம் என்கின்ற பெயரில் அங்கு வசித்து வரும் குடியிருப்புவாசிகளிடம் எந்தவொரு முன்னறிவிப்பும் தெரிவிக்காமல் வீடுகளை இடித்து வருகிறார்கள். அதேபோல் வீட்டுக்காரர்கள் முன்னிலையில் வீடுகளை இடிக்கவில்லை." என்கிறார் ஈஸ்வரி.

"வீடுகளை இடிக்க வரும்பொழுது வீட்டுக்காரர்கள் அங்கு இல்லை என்றால் வீட்டினுள்ளேயே பொருட்கள் இருந்தாலும் அதை பற்றி பொருட்படுத்தாமல் வீடுகளை இடிகிறார்கள். அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் தற்காலிகமாக தங்க சொல்கிறார்கள் 100 குடும்பங்கள் எவ்வாறு தங்க முடியும்? அவர்களின் உடைமைகளுக்கும் சொத்துக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது யார்?"

சமத்துவபுரம் புனரமைப்பு பிரச்னை

குடியிருப்புகளில் புனரமைப்பு பணி மேற்கொள்ளும்போது முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும், உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும், மாற்று இடம் அளிக்க வேண்டும், மக்களின் உரிமைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்கிறார் சிபிஐ(எம்.எல்.) மதுரை மாவட்ட செயலாளர் மதிவாணன்.

"வாடிப்பட்டி சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் எந்த முன்னறிவிப்பும் இன்றி இடிக்கப்படுகின்றன. வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வீட்டின் கூரை இடிக்கப்படப் போவது பற்றி தெரிவிக்கவில்லை. எழுத்துப்பூர்வமான அறிவிப்பில்லை. அதிகாரிகள் யாரும் மக்களிடம் அறிவிக்கவோ, மக்களைச் சந்திக்கவோ இல்லை. ஒப்பந்தம் எடுத்துள்ளவர்கள் தங்கள் மனம்போல வீடுகளை இடிகிறார்கள்."

"வீட்டில் குடியிருப்பவருக்கு எவ்வித முன்னறிவிப்பும் தராமல், பொருட்களைப் பாதுகாத்துக்கொள்ள, மாற்று ஏற்பாடு செய்துகொள்ள வாய்ப்பளிக்காமல் வீட்டை இடிப்பது அங்கே குடியிருந்து வரும் குடியிருப்பு வாசிகளுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மேலும் இதுநாள் வரை அவர்கள் சேமித்து வைத்த சொத்துக்களின் பாதுகாப்பு நிலை குறித்து மிகுந்த கவலை அடைந்து இருக்கிறார்கள்" என்றார் மதிவாணன்.

சமத்துவபுரம் புனரமைப்பு பிரச்னை

"கிராம ஊராட்சிகள் தற்காலிகமாக நூறு குடும்பங்களை தங்க வைப்பதற்கு இடமும் நிதியும் கொடுக்க வாய்ப்பில்லை" என்கிறார் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வெங்கடேசன்.

"சமத்துவபுரத்தில் உள்ள குடியிருப்புகள் புனரமைக்கப்பட இருக்கிறது என்பது குறித்து கடந்த ஒரு மாதமாக வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் மூன்று அதிகாரிகள் குழுவினர் ஒவ்வொரு குடியிருப்புவாசிகள் இடமும் நேரடியாக தெரிவித்தனர். தற்பொழுது குடியிருப்புகள் இடிக்கப்பட்ட பிறகு எங்களுக்கு எந்த தகவலும் சொல்லவில்லை என சொல்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. 100 குடும்பங்களுக்கு மாற்று இடம் கொடுத்து தங்க வைப்பதற்கு கிராம ஊராட்சியில் நீதியும் இடமும் இல்லை. குடியிருப்பு வாசிகளின் உடைமைகள், சொத்துக்கள் பாதுகாப்பிற்கு அந்த குடியிருப்புவாசிகள் முழுமனதோடு ஒற்றுமையுடன், ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்றார்.

காணொளிக் குறிப்பு, தண்ணீருக்குத் தவிக்கும் ராஜஸ்தான் மாநிலம் பார்மரின் கதை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: