மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து: ''சன்னதி கடைகளுக்கு ஆவணமில்லை" - ஆர்டிஐ பதிலில் வெளிவந்த உண்மைகள்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து
படக்குறிப்பு, மதுரை மீனாட்சியம்மன் கோயில்
    • எழுதியவர், சே.பிரசன்ன வெங்கடேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் வீர வசந்தராயர் மண்டபத்தில் தொன்மையான "கிரானைட்" ரக 70 தூண்கள் சேதமடைந்துள்ளன. மேலும் விபத்து நடந்த சமயத்தில் வீர வசந்தராயர் மண்டபத்தில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டதற்கான ஆவணங்கள் ஏதும் திருக்கோயில் அலுவலகத்தில் இல்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டதற்கு கோயில் நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் சன்னதியின் உள்ளே 100 சதுர அடி பரப்பளவில் பூஜை பொருட்கள், விளையாட்டு, கைவினைப் பொருட்கள், வளையல் விற்கும் கடைகள், புத்தக கடைகள் என 100க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. சன்னதியின் வெளியிலும் துணிக் கடைகள், பாத்திரக் கடைகள், உணவகங்கள், அழகு சாதனங்கள் விற்கும் கடைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன.

கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இரவு கிழக்கு கோபுர வாசல் அருகேயுள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் தீ் விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போதும் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த டில்லி பாபு என்பவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்.டி.ஐ) திருக்கோயில் நிர்வாகத்திற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி பதில்களைக் கேட்டிருந்தார். 

ஆர்.டி.ஐ ஆர்வலர் டில்லி பாபு
படக்குறிப்பு, டில்லி பாபு

இதன்படி, திருக்கோயிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் முதன்முதலில் எந்த ஆண்டு கடைகள் வாடகைக்கு விட அனுமதி வழங்கப்பட்டது? என்ற கேள்விக்கு, ''சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் கடை வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதற்கான எந்த ஆவணங்களும் திருக்கோவில் அலுவலகத்தில் (விபத்து நடைபெற்ற 2018ஆம் ஆண்டு வரை) இல்லை,'' என கோயில் நிர்வாகம் பதிலளித்துள்ளது.

மேலும், சன்னதிக்குள் கடைகள் வாடகைக்கு விட்டதற்கான ஆவணங்கள் ஏதும் அலுவலகத்தில் இல்லாதபோது, இந்து சமய அறநிலைத்துறை சார்பில் சன்னதியின் உள்ளே செயல்பட்டு வந்த சுமார் 112 கடைகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 64 ஆயிரத்து 65 ரூபாய் வாடகையாக நிர்ணயக்கப்பட்டது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. 

தொன்மையான 70 கற்தூண்கள் சேதம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில், தீ விபத்திற்கு பிறகு எத்தனை? கற்தூண்கள் முழுமையாக இருந்தன? எத்தனை கற்தூண்கள் சேதம் அடைந்திருந்தன? எத்தனை சீலிங் பலகை இருந்தன என எழுப்பிய கேள்விகளுக்கு, ''13 கற்தூண்கள் முழுமையாக இருந்ததாகவும், 70 கற்தூண்கள் சேதம் அடைந்திருந்தன என்றும், சீலிங் பாவு கற்கள் 921 இருந்ததாகவும்,'' பதில் கிடைத்துள்ளது.

மேலும் அனைத்து கற்தூண்களும் "கிரானைட்" ரக கற்களை சார்ந்தது எனவும் கூறப்பட்டுள்ளது. இத்துடன், ''தீ விபத்து ஏற்பட்ட மண்டபத்தின் புனரமைப்பு பணிக்காக புதிதாக பயன்படுத்தப்படும் கற்கள் "சார்னோகைட்" ரக கற்கள்" என கோயில் நிர்வாகம் பதிலளித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக இடிந்து விழுந்த கற்றூண்கள் அப்புறப்படுத்தும் பணிக்காக கோயில், உபயதாரர் நிதியில் இருந்து 30 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும்.'' கோயில் நிர்வாகம் பதிலளித்துள்ளது. 

10 கோடி ரூபாயில் பணிகள்

வீரவசந்தராயர் மண்டப மறுகட்டுமான பணிக்கு திருக்கோயிலில் இருந்து வழங்கப்படும் கருங்கற்களை பயன்படுத்தி தூண்கள், பாவு கற்கள், சிம்மம், உத்திரம், சிம்ம பீடங்கள், கபோதம், கொடிவலை, படாங்கு , நாடக சட்டம் மற்றும் இதர அணிகலன்களை வடிவமைத்து பொருத்தும் பணிக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் ஒப்பந்தம் புள்ளி பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வாடகைக்கு விடப்பட்ட கடைகளால் சர்ச்சை

இந்த விவகாரத்தில் திருக்கோயில் நிர்வாகம் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என்கிறார் ஆர்டிஐ ஆர்வலர் டில்லி பாபு.

இது குறித்து அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. வாடகைக்கு விடப்பட்டதற்கான ஆவணங்கள் எதுவும் திருக்கோயில் அலுவலகத்தில் இல்லை. ஆனால், சன்னதிக்குள் கடைகள் வருவதற்கு யார் அனுமதி கொடுத்தது? அந்த சமயத்தில் அப்போது அதிகாரியாக யார் இருந்தார்கள் போன்ற விவரமும் அறிய இயலவில்லை என கோயில் நிர்வாகம் பதில் அளித்துள்ளது," என்று கூறினார். 

"தீ விபத்து நடைபெற்ற 2018ஆம் ஆண்டுக்கு முன்பு வரை கடைகளுக்கு அனுமதி வழங்கியதற்கு உண்டான ஆவணங்கள் எதுவும் இல்லை எனக் கூறும் கோயில் நிர்வாகம், இந்து சமய அறநிலைத்துறை சட்டப்பிரிவு 34 Aயின் படி வீரவசந்தராயர் மண்டபத்தில் தீ விபத்தின் போது செயல்பட்டுவந்த தோராயமாக 60க்கும் மேற்பட்ட கடைகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ரூ. 64,065 வாடகையை நிர்ணயித்து வாடகை வசூலித்துள்ளது. 

அதுவும் சன்னதிக்குள் 112 க்கும் மேற்பட்ட கடைகள் 68 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே சமயத்தில் வாடகைக்கு விடப்பட்டதாக கோயில் நிர்வாகம் பதிலளித்துள்ளது வெளிப்படைத் தன்மையற்றதாக தெரிகிறது,'' என்கிறார் டில்லி பாபு.

கற்தூண்கள் குறித்து உரிய பதில் இல்லை

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து

மேலும் அவர் கூறுகையில், ''2018ஆம் ஆண்டு தீ விபத்தின்போது சேதமடைந்த 70 கற்தூண்களின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்த கேள்விக்கு கோயில் நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்லை. அதற்கு மாறாக 2018 ஆம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டபோது சேதமடைந்த கற்தூண்களின் அப்போதைய பழைய புகைப்படத்தை மட்டுமே தான் பதிலாக அனுப்பி வைத்துள்ளார்கள்," என்று குறிப்பிட்டார்.

"தற்போது கற்தூண்கள் எங்கே உள்ளது? அதன் நிலை என்ன? என்பது தெரியவில்லை. இது பல்வேறு சந்தேகத்தை எழுப்புகிறது என்று கூறும் டில்லி பாபு ,எதிர்காலத்தில் கோயிலில் இதுபோன்ற விபத்துகள் நடக்கா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,'' என்று வலியுறுத்துகிறார்.

அமைச்சர் பதில் என்ன?

சேகர் பாபு
படக்குறிப்பு, சேகர் பாபு, தமிழக அறநிலையத்துறை அமைச்சர்

"தீ தடுப்பு தொடர்பான தணிக்கைக் கூட்டம் ஒருநாள் கூடியதோடு சரி. 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிமுக ஆட்சி முடியும்வரை தீ தடுப்பு குறித்த எந்தவொரு கூட்டமும் நடத்தவில்லை'' என்று தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேலும் அவர், ''தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, மூன்று முறை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேரடியாக துறைசார்ந்த செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளோடு இணைந்து கள ஆய்வில் ஈடுபட்டுள்ளோம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, அப்போதைய முதலமைச்சர் தலைமையில் தீயணைப்பு துறை சார்பில் "தீ பாதுகாப்பு தணிக்கை" அறிக்கையை தயாரித்தார்கள். அந்த "ஃபயர் ஆடிட்" ஒருநாள் மட்டுமேகூடியது," என்கிறார் அமைச்சர் சேகர் பாபு.

மீனாட்சி அம்மன் கோயில் உட்பட தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய கோயில்கள் அனைத்திலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக "தீ பாதுகாப்பு தணிக்கை" செய்யப்படுகிறது. அந்த தணிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பை பலப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு, தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம்,'' என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

சன்னதிக்குள் இருந்த கடைகளுக்கு 'மாற்று இடம்'

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து

''மீனாட்சி அம்மன் கோவில் சன்னதிக்குள் இருந்த கடைகளுக்கு மாற்று வாய்ப்பாக, சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக புதிய கட்டடம் கட்டிக் கொடுத்து சன்னதி வளாகத்துக்குள் இருந்த கடைக்காரர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன," என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

புனரமைப்பு பணிகள் எப்போது முடியும் ?

மீனாட்சி அம்மன் கோயிலில் எரிந்த நிலையில் இருந்த அனைத்து நிலைகளும் தற்போது செப்பனிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக வீரவசந்தராயர் மண்டபம் புனரமைப்பு பணிக்காக ஒப்பந்தப்புள்ளி நீண்ட இழுபறியில் இருந்தது.

தற்போது அது ஒரு முடிவு பெற்று ஒப்பந்தப்புள்ளி நிறைவடைந்துள்ளது. புனரமைப்பு பணிகளுக்கு தேவையான கற்கள் அனைத்தும் தொய்வின்றி கொண்டு வரப்பட்டுள்ளன. இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் 19 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும்.'' என்றும் தெரிவித்துள்ளார்.

காணொளிக் குறிப்பு, மதுரை அயிரை மீன் குழம்பு மண் மணம் மாறாத முறையில் சமைப்பது எப்படி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: