நீர்வீழ்ச்சி முதல் டெட் சோன்கள் வரை: ஆழ்கடலின் ரகசியங்கள் என்ன?

பட மூலாதாரம், DAMIR ZURUB
நம் பூமியின் 70 சதவீத பரப்பை கடல் சூழ்ந்துள்ளது. ஆனால், கடலை பற்றி நாம் அறிந்தவை மிக அரிதே. ஆனால், ஆழ்கடலில் முழுவதும் ஆராயப்படாத ஒரு பிரபஞ்சமே உள்ளது, மனித கண்களுக்கு புலப்படாதவையாக அவை உள்ளன. கடல் குறித்து நாம் ஏன் கொஞ்சம் மட்டுமே அறிந்திருக்கிறோம்?....
ஆழ்கடலில் உள்ள அபரிமிதமான அழுத்தம், டைவர்களுக்கும் ஆழ்கடல் உபகரணங்களுக்கும் பெரும் சவாலாக விளங்குகிறது. விண்வெளிக்கு செயற்கைக்கோளளை அனுப்புவது இதைவிட எளிதானதாக உள்ளது. ஆனால், நீர்மூழ்கி ரோபோட்டுகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் மூலம், ஆழ்கடலில் மறைந்திருக்கும் இந்த சாம்ராஜ்ஜியத்தின் ரகசியங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.
ஆழ்கடலில் உள்ள ரகசியங்கள் என்ன? ஆம், அதிக தண்ணீர் இருக்கிறது. கொஞ்சம் துல்லியமாக சொல்ல வேண்டும் என்றால், 1,41,91,20,000 கியூபிக் கிலோமீட்டர் அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. 300 கோடி மக்களுக்கு புரதசக்தியின் முக்கிய ஆதாரமாக விளங்கும் மீன்கள் அந்த தண்ணீரில் இருக்கின்றன. ஆனால், ஆழ்கடலில் மீன்களை தவிர இன்னும் அதிகமானவை இருக்கின்றன. இன்னொரு உலகமான ஆழ்கடலில் அசாதாரணமான பல உயிரினங்கள் வாழ்கின்றன, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆழ்கடலில் இருந்து புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஜெலட்டின் தன்மை கொண்ட ஜெல்லி மீன்கள், அவற்றை நீங்கள் வலைகள் மூலம் பிடிக்க முயன்றால் சிதைந்துவிடும்.

பட மூலாதாரம், TIM GRAY
2020ஆம் ஆண்டில் பெரிய சிஃபோனோஃபோர் அபோலேமியா என்ற உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர், ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட மில்லியன்கணக்கிலான குளோன்களால் ஆனது இந்த உயிரினம், இதன் மெல்லிய, முறுக்கப்பட்ட உடல், நீண்ட லேசான கயிற்றை நினைவுபடுத்துவதாக உள்ளது.
மேலும், கடல்தளமானது, நீங்கள் கற்பனை செய்யக்கூடிய தட்டையான மற்றும் தனிச்சிறப்பில்லாத கடற்பரப்பில் இருந்து வெகுதொலைவில் உள்ளது. ஒட்டுமொத்தக் கடலும் வற்றிவிட்டால், அதன் நிலப்பரப்பு இந்த பூமியில் உள்ள எதுவொன்றுக்கும் இணையாக கண்கவரக்கூடிய ஒன்றாக இருக்கலாம், சில உயரமான சிகரங்கள், ஆழமான பள்ளத்தாக்குகள், நீளமான நதிகளை ஒத்த பெருமையை கொண்டிருக்கலாம்.
ஆழ்கடலில் நீர்வீழ்ச்சிகள்
ஆழ்கடலில் நீர்வீழ்ச்சிகளும் உள்ளன, டென்மார்க் ஸ்ட்ரெய்ட் கேட்டராக்ட் என்பது அட்லாண்டிக் கடலில் கண்டெடுக்கப்பட்ட நீர்வீழ்ச்சியாகும். இங்கு, கிரீன்லாந்து கடலின் குளிர்ந்த நீரும் இர்மிங்கர் கடலின் வெப்பமான நீரும் சங்கமிக்கின்றன. இதில், குளிர்ந்த நீர் கீழே தள்ளப்படுவதால், அது மூன்றரை ஆயிரம் மீட்டர் நீளம்கொண்ட மாபெரும் நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது. கடலின் மேற்பரப்பில் உள்ள யாராலும் இதனை கண்டறிய முடியாது. உலகின் மிக ஆழமான பகுதியான, 11,000 மீட்டர் நீள நீர்வீழ்ச்சியான மரியானா ஆழியுடன் ஒப்பிடும்போது இது ஒன்றும் இல்லை.
ஆழ்கடலில் புகுந்த பிளாஸ்டிக்
2020ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் கண்டறிந்த ஒன்று, உலகுக்கான அபாய ஒலியாக உள்ளது. இந்த உலகில் யாராலும் செல்ல முடியாத கடல் பிளவு ஒன்றில், சுமார் 7,000 மீட்டர் ஆழத்தில் அவர்கள் புதிய ஒட்டுமீன் இனங்களை கண்டறிந்தனர். அவற்றின் வயிற்றில் பிளாஸ்டிக் இருந்தது. அந்த பிளாஸ்டிக்கை யூரிதீன்ஸ் பிளாஸ்டிகஸ் என அழைக்கின்றனர். கடல் குறித்து நாம் அறிதாகவே ஆராயத் தொடங்கியிருக்கும் நிலையில், நம் விளைவுகளால் அதன்மீது ஏற்படும் தாக்கங்களை ஏற்கெனவே உணரத்தொடங்கிவிட்டோம். 2050 ஆம் ஆண்டில் கடலில் மீன்களைவிட அதிக பிளாஸ்டிக்குகள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
காலநிலை மாற்றம்
ஆனால், பிளாஸ்டிக் மட்டுமே பிரச்னை அல்ல. காலநிலை மாற்றம் கடலின் அடிப்படை வேதித்தன்மையை மாற்றுகிறது, கடலை வெப்பமாக்குகிறது, கடல்நீரை அமிலமயமாக்குகிறது. கடல் வாழ்வியலுக்கு துணைபுரியும் ஆக்சிஜன் போதாமையால் 'டெட் சோன்களும்' கடலில் உள்ளன. இவை அனைத்தும் மாசுபாட்டால் வழக்கமாகிவிட்டன.
கடலை பொறுத்தவரையில் மனித செயல்பாடுகளின் விளைவுகள் நம் அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்பதே வேதனையான உண்மை. குறிப்பாக நீங்கள் கடற்கரையிலிருந்து அப்பால் வாழ்ந்தால், கடலில் இருந்து விலகியிருப்பது போன்ற உணர்வு எளிதானது. ஏன் கடலை குப்பைகளை கொட்டும் இடமாக நடத்துகிறோம் என்பதை இது விளக்குகிறது. ஆனால், கடலை நாம் எவ்வாளவு அதிகமாக ஆராய்கிறோமோ, அந்தளவுக்கு அதிகமாக கடல் நமக்கு வழங்கும்.
கடற்பாசிகள் மற்றும் நுண்ணுயிரிகள் போன்ற ஆழ்கடல் வாழ்வின் மரபணுக் குளம், ஆண்டிபயாடிக் எதிர்ப்பின் அவசர சிக்கலைத் தீர்ப்பதற்கான திறவுகோலைக் கொண்டிருக்கக்கூடும். மிக முக்கியமாக, கிரகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் கடல் முக்கியமானது: நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் பாதி, பைட்டோபிளாங்க்டன் மற்றும் கடற்பாசி போன்ற ஒளிச்சேர்க்கை கடல் தாவரங்களால் கிடைக்கிறது.
கடல் நமது காலநிலையை ஒழுங்குபடுத்துகிறது, கிரகத்தைச் சுற்றி சூரிய வெப்பத்தை விநியோகிப்பதன் மூலம் வெப்பநிலையை சமன் செய்கிறது. நாம் அதை உணராமல் இருக்கலாம், ஆனால் நமது நேர்த்தியான சமநிலையான புவியமைப்பில் கடல் வகிக்கும் பங்கினால் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுகிறோம். ஆயினும்கூட, இந்த முக்கிய வாழ்க்கை ஆதாரத்தைப் பாதுகாக்க நாம் இதுவரை மேற்கொண்ட முயற்சிகள், கடலில் ஒரு துளியே.
கண்ணுக்குத் தெரியாத பல மூச்சடைக்கக்கூடிய பள்ளத்தாக்குகள், கண்டுபிடிக்கப்படாத பல உயிரினங்கள் என, இன்னும் நமக்குத் தெரியாத பல விஷயங்கள் கடலில் உள்ளன. ஆனால், புதிய தொழில்நுட்பங்கள் முன்பை விட கடலைப் பற்றி அதிகம் வெளிக்கொண்டு வருகிறது. ஒருவேளை கடலின் ரகசியங்களை அதிகம் அறிந்தால், அதனை சிறப்பாகக் கவனித்துக் கொள்ளலாம்.
(டுர்ஹாம் பல்கலைக்கழகத்தின் டாக்டர் மேத்யூ கேர்டிக்னி மற்றும் பிளைமௌத் பல்கலைக்கழக பேராசிரியர் கெர்ரி ஹோவெல் ஆகியோரின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட 'பிபிசி ஐடியாஸ்' பகுதியிலிருந்து எழுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை.)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













