சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கு பாதிப்பு: ஆசையாக வாங்கிய வீடுகளில் அகதியாக வாழும் மக்கள்

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

பட மூலாதாரம், Save Pallikaranai wetland

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் அன்றாட கழிவுகள் கொட்டப்படும் பெருங்குடி குப்பைக்கிடங்கில் தீ விபத்து ஏற்படுவதும், மாசுபாட்டால் பெருங்குடி அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் உள்ள நீர்நிலைகள் 'ரோஸ்' நிறமாக மாறும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

கடந்த 40 ஆண்டுகளாக சென்னை மாநகரத்தின் குப்பைகளை சுமந்து நிற்கும் பெருங்குடி குப்பைக்கிடங்குக்கு அருகில் வசிக்கும் பலரும் சுவாசக்கோளாறு காரணமாக நிரந்தரமாக நோயாளியாக மாறிவிட்டதாக கலங்குகின்றனர்.

தினமும் சுமார் 4,000 டன் கழிவுகள் பெருங்குடி குப்பைக்கிடங்குக்கு கொண்டுவரப்படுகிறது. மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் கலந்து கொட்டப்படுவதால், குப்பைக்கிடங்களில் சேர்ந்துள்ள குப்பை மேடுகளில் அவ்வப்போது தீ பற்றி எரியும் நிகழ்வுகள் ஒவ்வொரு ஆண்டும் பதிவாகும். இந்த ஆண்டு தீ விபத்தோடு, பள்ளிக்கரணை நீர்நிலையில் இரண்டு முறை தண்ணீர் நிறம் மாறிய சம்பவங்களும் நடந்துள்ளதால், அச்சத்தில் இருப்பதாக குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.

பெருங்குடி குப்பைக்கிடங்கில் 'பயோமைனிங்' என்ற குப்பையை தரம் பிரித்து உரமாக மாற்றும் வேலைகள் நடந்து வருவதாக கூறும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், காற்று மாசுபாடு அதிகரிக்கும் நேரத்தில் மருத்துவ முகாம்கள் செயல்படுவதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில், பெருங்குடி அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்கா மேலும் வளப்படுத்தப்பட்டு, குப்பைக்கிடங்கால் ஏற்படும் மாசுபாடு குறைக்கப்படும் என்கிறார் பிரியா ராஜன்.

மருத்துவக் கழிவுகளும் கழிவுநீரும்

1970ல் பெருங்குடி அருகே சீவரம் கிராமத்தில் ஏழு ஹெக்டர் பரப்பளவில் முதலில் குப்பைக்கிடங்கு அமைந்தது. அது படிப்படியாக விரிவடைந்து, சட்டத்திற்கு புறம்பாக, 136 ஹெக்டராக 2007ல் மாறிவிட்டது. தற்போது அதன் பரப்பளவு சுமார் 300 ஹெக்டரை தாண்டியுள்ளது என்கிறார் எழுத்தாளர் பாக்கியம்.

பள்ளிக்கரணை

பட மூலாதாரம், Save Pallikaranai wetland

பெருங்குடி குப்பைக்கிடங்கு எவ்வாறு நிலம், நீர் மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளது என விரிவாக ஆராய்ந்து 'வளர்ச்சியின் பெயரால் வன்முறை' என்ற நூலில் பாக்கியம் எழுதியுள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''பெருங்குடியில் சமீபத்தில் தீ பற்றி எரிந்தது. அந்த தனலால் சுமார் ஆறு கிலோமீட்டர் வரை வெப்பமும் புகையும் பரவியது. இருள்படிந்ததுபோல் பெருங்குடி காட்சியளித்தது. இந்த புகைமூட்டமும், பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் தண்ணீர் ரோஸ் நிறத்தில் மாறியாதையும் சமூகவலைதளங்களில் பலரும் பகிர்ந்தார்கள். கண்ணுக்குத் தெரியாமல் மோசமான பாதிப்புகளை பெருங்குடி சந்தித்துக்கொண்டு இருக்கிறது. அங்கு கொட்டப்படும் கழிவுநீரும், மருத்துவக் கழிவுகளும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்,'' என்கிறார் பாக்கியம்.

அதேபோல, பல ஆயிரம் கோடி மக்களின் வரிப்பணம் ஒவ்வொரு ஆட்சியிலும் குப்பைக்கிடங்கை சரிசெய்வதற்காக செலவாகிக்கொண்டிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

"சொந்த நிலத்தில் அகதிகளாக வாழ்கிறோம்"

ஆசையாக கனவு இல்லத்தைக் கட்டிய பலரும் கடனில் தத்தளித்துக் கொண்டும் தீராத உடல்நல பாதிப்புகளுடனும் போராடி வருவதாக சொல்கிறார்கள். பெருங்குடியில் உள்ள சாய் நகர் குடியிருப்புவாசிகள் நல சங்கத்தைச் சேர்ந்த பார்த்திபன் பேசுகையில், சென்னை நகரத்தில் தங்களின் சொந்த நிலத்தில் அகதியாய் வாழ்வதாக தெரிவித்தார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

பட மூலாதாரம், Chennai corporation

படக்குறிப்பு, பயோமைனிங் முறையில் குப்பைகளை தரம் பிரித்தெடுத்து உரம் தயாரிக்கப்படுகிறது.

''நாங்கள் அனைவரும் சுற்றுச்சூழல் மாசுபட்டால், எங்கள் சொந்த நிலத்தில், நாங்கள் ஆசையாக வாங்கிய நிலத்தில் அகதியாக வாழ்கிறோம். பலமுறை போராட்டங்கள் நடத்திவிட்டோம். சட்டங்களை இயற்றும் அரசாங்கமே சட்டங்களை மீறினால் யாரிடம் முறையிடுவது? எங்கள் பகுதியில் வசிப்பவர்கள் பலருக்கும் சுவாச பிரச்னைகள் உள்ளது. ஒருசில ஆஸ்துமா நோயாளிகள் பாதிப்பு அதிகமாகும்போது, உறவினர்கள் வீடுகளுக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது,'' என்கிறார்.

1999ல் சாய் நகரில் குடிவந்தபோது, பள்ளிக்கரணை சதுப்புநிலம் அவ்வளவாக பாதிக்கப்படவில்லை என்கிறார். ''நான் இங்கு வந்தபோது, ஒரு சில தென்னந்தோப்புகள் இருந்தன. பசுமையான பகுதி, விதவிதமான பறவைகள் என ரம்மியமாக இருந்தது. நாட்கள் செல்ல செல்ல, குப்பை கிடங்கின் பரப்பளவு அதிகரித்து, ஒரு கட்டத்தில் குப்பைக்கிடங்கின் வாடை எங்களுக்கு பழகிப்போகும் நிலை ஏற்பட்டுவிட்டது,'' என்கிறார் பார்த்திபன்.

வீடு வாங்கியவர்கள் ஒரு சிலர், குறைந்த விலைக்கு கட்டிய வீடுகளை விற்றுவிட்டார்கள் என்றும் ஒரு சிலர் குறைந்த வாடகை என்பதால் குப்பை கிடங்குக்கு அருகில் வசிக்கும் நடைமுறையும் பெருங்குடியில் உள்ளது என்கிறார் பார்த்திபன்.

பள்ளிக்கரணை

பட மூலாதாரம், Save Pallikaranai Wetland

பெருங்குடியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் மோகனுக்கு வயது 66. அவர் 30 வயதாக இருந்தபோது ரூ2.75லட்சத்தை வங்கிக்கடனாக பெற்று வீடு கட்டினார். ''வீட்டு கடனை முடித்ததும், நிம்மதி பெருமூச்சு விடமுடியவில்லை. இங்குள்ள காற்று மோசமான தரத்தில் உள்ளது. இதுபோன்ற பாதிப்புகளை எதிர்காலத்தில் சந்திப்போம் என்று கனவிலும் நினைக்கவில்லை,'' என்கிறார்.

பெருங்குடி, பள்ளிக்கரணை, ஆதம்பாக்கம் போன்ற குடியிருப்பு பகுதியில் இருப்பவர்கள் ஒன்றிணைந்து தமிழ்நாடு சுற்றுசூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கத்தை உருவாக்கினர். ''மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம், வழக்கு போடுவது என பல வித முயற்சிகளை தொடர்ந்து செய்துவருகிறோம். நிலத்தடி நீர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுவாசிக்கும் காற்று, குடிநீர் என எல்லா மாசுபாடுகளையும் எதிர்கொள்வதில், இங்குள்ள பலருக்கும் அடிக்கடி உடல்ரீதியான பாதிப்புகள் இருந்துகொண்டே இருக்கிறது,'' என்கிறார் பார்த்திபன்.

சென்னை மாநகராட்சி

பட மூலாதாரம், Chennai corporation

ஏற்கெனவே தேங்கியுள்ள குப்பையை சரிசெய்ய 'பயோமைனிங்' என்ற முறையில் தரம் பிரிப்பதோடு, தற்போது சென்னை நகரம் முழுவதும் குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்கும் திட்டம் அமலாகியுள்ளது என்கிறார் சென்னை மேயர் பிரியா ராஜன்.

''எல்லாவற்றையும் உடனே சரிசெய்துவிடுவோம் என்று சொல்லவில்லை. ஆனால் தற்போது நாங்கள் எடுத்துள்ள முடிவு என்பது ஒரு நல்ல தொடக்கம். சுமார் 40 ஆண்டுகளாக பெருங்குடி பகுதியில் இருந்துவரும் பிரச்னையை தீர்க்க சென்னை நகரத்தில் எல்லா பகுதிகளிலும் உள்ள மக்களின் பங்களிப்பும் தேவை. குப்பை பிரிக்காமல் கொடுப்பவர்களுக்கு விரைவில் அபராதம் விதிக்கவுள்ளோம். பள்ளிக்கரணையில் சுற்றுச்சூழல் பூங்கா நல்ல முறையில் அமைந்துள்ளது. அதை மேலும் விரிவாக்கம் செய்யவுள்ளோம். அதனால், மாற்றம் சாத்தியம் என்பதைதான் தற்போது பதிலாக தரமுடியும்,''என்கிறார் மேயர் பிரியா ராஜன்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: