மேட்டூர் அணை - காவிரியில் முன்கூட்டியே நீர் திறப்பதால் விவசாயத்துக்கு என்ன பயன்?

M. K. Stalin மு.க. ஸ்டாலின். நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன்

பட மூலாதாரம், M. K. Stalin facebook

படக்குறிப்பு, பாசனத்துக்காக இன்று மேட்டூர் அணையைத் திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அருகில் நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன்.

தமிழ்நாட்டின் பிரதான நதியான காவிரியில் சுதந்திரத்திற்குப் பின் முதல் முறையாக மே மாதத்தில் விவசாயத்திற்கென தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது விவசாயத்திற்கு எந்த அளவிற்குப் பலனளிக்கும்?

தமிழ்நாட்டின் மிகப் பெரிய அணையான மேட்டூர் அணையை இன்று பாசனத்திற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறார். மேட்டூர் அணையைப் பொறுத்தவரை டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம்.

கடந்த ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் சுமார் 100 அடியாக இருந்தால் குறிப்பிட்ட தேதியில் அணை திறக்கப்படும். இல்லாவிட்டால், நீர் நிரம்பிய பிறகே திறக்கப்படும்.

கடந்த சில நாட்களாக காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்துவந்ததால், அணைக்கு வரும் நீரில் அளவு தொடர்ந்து அதிகரித்துவந்தது. இதனால், விரைவிலேயே அணையின் நீர்மட்டம் 115 அடியைத் தாண்டியது. இதன் காரணமாக இன்று அணையின் நீர்மட்டம் 117.76 அடியாகவும் நீர் இருப்பு 89.942 டிஎம்சியாகவும் இருந்தது.

நீர்வரத்து தொடர்ந்து அதிக அளவில் இருப்பதால், தண்ணீர் திறக்கப்பட்டிருந்தாலும், விரைவிலேயே அணை முழுமையாக நிரம்புமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல், குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்படும் நாளாகிய ஜூன் 12ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நீர் திறந்து விடப்படுவது இது இரண்டாவது முறையாகும். இது மட்டுமின்றி, மே மாதத்தில் இவ்வாறு மிக முன்னதாக பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இன்று காலை விநாடிக்கு 3,000 கன அடி என்ற அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. அது மாலைக்குள் படிப்படியாக 10,000 கன அடியாக உயர்த்தப்பட்டது. இதே அளவிலேயே தண்ணீர் ஜுன் மாதம் இறுதி வரை வழங்கப்படும். ஜுலை மாதத்தில் வழங்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியிலிருந்து படிப்படியாக 16,000 கன அடியாக அதிகரிக்கப்படும். ஆகஸ்ட் மாதத்தில் இது விநாடிக்கு 18,000 கன அடியாக உயர்த்தப்படும்.

மேட்டூர் அணை

பட மூலாதாரம், M k stalin facebook page

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 5,22,000 ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கென ஜூன் 12 முதல் செப்டம்பர் 15ஆம் தேதிவரை தண்ணீர் திறக்கப்பட வேண்டும். அதற்கு 125 டி.எம்.சி. நீர் தேவைப்படும். ஆனால், இந்த நீரின் முழுத் தேவையையும் அணையின் நீரைக் கொண்டே பூர்த்திசெய்யப்படுவதில்லை. மேட்டூர் அணையிலிருந்து 99.74 டிஎம்சி நீரும் மீதமுள்ள 25.26 டிஎம்சி தண்ணீர் மழை மற்றும் நிலத்தடி நீர் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படும்.

குறுவை பாசனத்தைப் பொறுத்தவரை, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள 4,91,200 ஏக்கர் நிலத்தில் நடைபெறும். இந்த பாசன நிலங்களுக்கு 93.860 டிஎம்சி தண்ணீரும், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 30,800 ஏக்கர் நிலங்களுக்கு 5.88 டிஎம்சி தண்ணீரும் மேட்டூர் அணையிலிருந்து தேவைப்படும்.

மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்படுவது நன்மையா?

"மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்படுவது பல விதங்களில் சாதகமாக இருக்கும். குறுவைச் சாகுபடியை முன்கூட்டியே துவங்கிவிட முடியும். செப்டம்பர் - அக்டோபரில் பருவமழை ஆரம்பிப்பதற்குள் அறுவடை முடிந்துவிடும். நல்ல மகசூலும் கிடைக்கும்" என்கிறார் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் பாஸ்கர்.

மேலும் மழைக்கு முன்பே சம்பா பயிரும் குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ந்துவிடும். மழை பெய்தாலும் அதைத் தாங்கும். இது தவிர, குறுவை, சம்பா என தொடர்ச்சியாக தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என்கிறார் பாஸ்கர்.

இதையெல்லாம்விட டெல்டா மாவட்டங்களின் ஆற்றுக் கால்வாய்களில் நீண்ட நாள் தண்ணீர் பாய்வதால், அம்மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தகுந்த காலத்திலேயே நீர் கடைமடை பகுதிகள் வரை சென்று சேர முடியும் என்பது போல பல சாதகமான அம்சங்கள் இருக்கின்றன.

இவையெல்லாம் தவிர, மேட்டூர் அணையில் அமைக்கப்பட்டிருக்கும் நீர் மின் நிலையங்களில் இருந்து நீண்ட நாட்களுக்கு மின்சாரம் பெற முடியும். அணையில் உள்ள மின் நிலையங்கள் மூலம் மொத்தமாக 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையின் கீழ் பகுதியில் 7 கதவணை நீர் மின் மொத்தம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

காணொளிக் குறிப்பு, மாசுபாடு இல்லாத நாடாக இந்தியா மாற என்ன தேவை?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :