இந்திய நீர்ப்பாசனத்தின் முன்னோடி ஆர்தர் காட்டன்: காவிரி, கங்கைக்கு அவர் செய்தது என்ன?

தஞ்சாவூர் கல்லணை

பட மூலாதாரம், V. Veeraprakasham

படக்குறிப்பு, தஞ்சாவூர் கல்லணை
    • எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழ்

ஓடுகின்ற தண்ணீரில் அணையை கட்ட முடியும் என்கிற தொழில்நுட்பத்தை தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர். அதன் வெளிப்பாடுதான் பழமையான கல்லணை. அடிக்கடி வெள்ளம் ஏற்படும் காவிரி ஆற்றில் கட்டப்பட்ட, கல்லணையை ஆராய வந்து, அதைக் கண்டு வியந்து போய் அதை 'கிராண்ட் அனைகட்' (Grand Anicut) என்று சொன்னவர் ஆர்தர் காட்டன். பல நீர்ப்பாசன கட்டுமானங்களை புனரமைத்து, முறைப்படுத்தியவர்.

தமிழ்நாட்டில் உள்ள கல்லணை, வீராணம் ஏரி, காளிங்கராயன் அணைக்கட்டு ஆகிய மூன்றும் சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையத்தின் (ஐசிஐடி) உலகப் பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகளுக்கான விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இந்தியாவுக்கு வழங்கப்படும் 4 சர்வதேச விருதுகளில் 3 தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளன. இந்த மூன்றில் இரண்டோடு தொடர்புடைய ஒருவரைப் பற்றித்தான் இந்த கட்டுரையில் பார்க்க உள்ளோம். டெல்டா பாசனத்தை வடிவமைத்தவர், தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திராவையும் வளப்படுத்த அடித்தளம் அமைத்தவர், பொறியாளர்கள் கொண்டாடும் பொறியாளர் என அவரின் சிறப்புகளை அடுக்குகிறார்கள் பொதுப்பணித்துறை பொறியாளர்கள். அவர்தான் சர் ஆர்தர் காட்டன் என்கிற ஆங்கிலேய பொறியாளர்.

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் பென்னி குக்கை தெரியும். ஆர்தர் காட்டன் அப்படி என்ன செய்தார் தெரியுமா?

வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்லணை, காவிரி ஆற்றின் குறுக்கே, கரிகால சோழனால், கி.பி. 2-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மிகப்பழமையான இந்த அணை, உலகின் 4வது பழமையான நீர்மாற்று அமைப்பு அல்லது நீர் ஒழுங்குபடுத்தும் கட்டமைப்பாகும். இப்போதும் பயன்பாட்டில் உள்ள பழமையான கட்டமைப்பாகும். அது இப்போதும் பயன்பாட்டில் இருக்க முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் ஆர்தர் காட்டன் என்கிறார்கள் பொதுப்பணித்துறையினர்.

கல்லணையைப் பார்த்து வியப்பு

தஞ்சாவூர் கல்லணை

பட மூலாதாரம், V. Veeraprakasham

படக்குறிப்பு, கல்லணை

இது குறித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் முன்னாள் செயற்பொறியாளர் தி.த.சண்முகவடிவேல் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''நிர்வாகத்திற்கு பொருளாதாரம் வேளாண்மைதான் என்று ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியினர் உணர்ந்தனர். இதையடுத்து தஞ்சாவூர் பாசனப் பகுதிகள் 1801ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து 1822ம் ஆண்டு தஞ்சாவூர் மட்டுமின்றி கோவை, நெல்லை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாசன முறைகளை ஆய்வு செய்ய வந்த இளம் பொறியாளர்தான் ஆர்தர் காட்டன்.''

பொறியாளர் தி.த.சண்முகவடிவேல்

பட மூலாதாரம், Er T T Shanmugavadivel

படக்குறிப்பு, பொறியாளர் தி.த.சண்முகவடிவேல்

''அவர், நரம்பு மண்டலம் போல் உள்ள காவிரியின் கிளை ஆறுகளின் பாசன அமைப்புகளை ஒழுங்குபடுத்தினார். இதனால் அவரை டிசைனர் ஆப் டெல்டா, ஆர்க்கிடெக் ஆப் டெல்டா என்றும் அழைக்கின்றனர்.

இங்கிலாந்த்தில் எச்.சி காட்டன் என்பவருக்கு 1803ம் ஆண்டு மே 15ம் தேதி 10வது குழந்தையாக பிறந்தவர். தனது 15வது வயதில், கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் உதவியாளராக பணியில் சேர்ந்தவர்.

பின்னர் மூத்த பொறியாளர்களுக்கு உதவியாளராகினார். நீர்ப்பாசன தொழில்நுட்பம் குறித்த தனது ஆர்வம், அர்ப்பணிப்பு, தேடலால் இள வயதிலேயே பொறியாளராக்கியது. தொடர்ந்து 1829ம் ஆண்டு நீர்ப்பாசனத்தை மேம்படுத்தும் தனி பொறுப்பை ஏற்றார்.''

கல்லணையை வலுவாக்கினார்

சர் ஆர்தர் காட்டன்

பட மூலாதாரம், Er T T Shanmugavadivel

படக்குறிப்பு, சர் ஆர்தர் காட்டன்

இவர் பிறந்த ஆண்டான 1803ம் ஆண்டு கால்டுவெல் என்கிற பொறியாளர் கல்லணையை ஆய்வு செய்துள்ளார். அதற்கு பிறகு அங்கு வந்த ஆர்தர் காட்டன் கல்லணையின் மணல் தேங்கியிருப்பதை கண்டு, மணற்போக்கி அமைத்து, அப்போதிருந்த கட்டுமானத்தை வலுவாக்கி, 1840ம் ஆண்டு கல்லணை மேல் பாலத்தை கட்டியதும் அவர்தான்.

காவிரி ஆற்றில் வரும் மிகை நீரால் வரும் வெள்ளத்தால், ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க ஆய்வு செய்தார். ஆய்வின் முடிவில் திருச்சிக்கு மேற்கே முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் பிரியும் இடத்தில் கொள்ளிடம் ஆற்றில் 1836ம் ஆண்டு 2 லட்ச ரூபாய் செலவில் கதவணை கட்டினார். இதைக் கட்டியதுதால்தான், டெல்டா பாசனப் பகுதிக்கு இப்போதும் பெரிதும் பயனளித்து வருகிறது,'' என்கிறார் பொறியாளர் சண்முக வடிவேல்.

காவிரி பாசனத்திற்கு மட்டுமல்ல சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி என்றழைக்கப்படும் வீரநாராயண ஏரிக்கும் தண்ணீர் செல்ல வழி வகுத்துள்ளார் ஆர்தர் காட்டன். கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் நீர்த்தேக்கம் கி.பி 9ம் நூற்றாண்டில் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் உருவாக்கப்பட்டது.

வீராணத்திற்கும் தண்ணீர்

இதற்கு எப்படி காட்டன் வழி வகுத்தார் என்பது குறித்து பொறியாளர் தி.த.சண்முகவடிவேல் கூறுகையில்,''கொள்ளிடம் கதவணையில் திறக்கப்படும் தண்ணீர் முழுவதும் கடலுக்கு சென்று வீணாகி விடக்கூடாது என்பதற்காக, 1840ல் ஆண்டு சிதம்பரம் அருகே அணைக்கரை பகுதியில் முக்கொம்பு போலவே ஒரு கதவணையைக் கட்டுகிறார்.

இங்கு தேக்கப்படும் தண்ணீர் வடக்கு ராஜன் வாய்க்கால், தெற்கு ராஜன் வாய்க்கால் பாசனத்திற்கு செல்கிறது. வடவாறு மூலம் வீராணம் ஏரிக்கு சென்று இன்றைக்கும் சென்னை மக்களின் தாகம் தீர்த்து வருகிறது. அணைக்கரை கதவணை மூலம் 1.40 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது,'' என்கிறார்.

ஆந்திராவில் தொடர்ந்த சேவை

கல்லணை

பட மூலாதாரம், V.Veeraprakasham

படக்குறிப்பு, கல்லணை

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒருங்கிணைந்த மதராஸ் மகாணமாக இருந்த தற்போதைய ஆந்திராவிலும் இவரது சேவை தொடர்ந்துள்ளது. ''கிருஷ்ணா நதியின் குறுக்கே விஜயவாடாவிலும், கோதாவரியின் குறுக்கே தவளேஸ்வரம் எனும் இடத்திலும் 1873ம் ஆண்டு அணைகளைக் கட்டினார். இதன் மூலம் 10 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. இந்த கட்டுமானத்தை கல்லணையை அடிப்படையாக கொண்டு கட்டியது என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.

டெல்டா தொடங்கி கங்கை வரை இவர் ஆற்றிய பணிகளைத் தொகுத்து இவரது மகள் லேடி ஹோப் என்பவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் இன்னும் விரிவாக இருக்கின்றது,'' என்கிறார் சண்முகவடிவேல்.

காவிரியின் குறுக்கே மேட்டூரில் அணை கட்ட வேண்டிய தேவையை 1835ம் ஆண்டு மைசூர் சமஸ்தானத்திடம் அறிவுறுத்தியுள்ளார் ஆர்தர் காட்டன். நீர்ப்பாசனம் குறித்து நூல்களையும் எழுதியுள்ளார். ஆர்தர் காட்டனின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் ராஜமுந்திரி, கல்லணை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவருக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தனது இறுதிக்காலத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்து 96 வயதில் காலமானர்.

மேட்டூர் அணைக்கு மட்டுமல்ல முல்லைப் பெரியாறு அணைக்கும் முதலில் வரைவுத் திட்டத்தை அளித்தவரும் இவர்தான். எனவே அவரது பணிகளையும் பயன்களையும் எதிர்கால சந்ததிகளும் அறியும் வகையில் அவரது பிறந்த நாளை அணைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்து, அரசு விழாவாக நடத்த வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள் சங்கத் தலைவர்கள்.

அணைகள் பாதுகாப்பு தினம் - அரசு விழா

பி.ஆர்.பாண்டியன்

பட மூலாதாரம், P.R.Pandian

படக்குறிப்பு, பி.ஆர்.பாண்டியன்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பிபிசி தமிழிடம் கூறுகையில், 'ஆறுகள் இணைப்பு பற்றி இந்தியாவில் முதலில் வரைவுத் திட்டங்களை வழங்கியவர் ஆர்தர் காட்டன். நீர்ப்பாசனத்திற்கு மட்டுமின்றி சென்னை துறைமுகம், சென்னையில் ரயில் தண்டவாளம் அமைத்தல் உள்ளிட்ட பிற பணிகளிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என்று போற்றப்படும் ஆர்தர் காட்டனுக்கு, திருச்சி முக்கொம்பு அல்லது கல்லணை பகுதியில் அவருக்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அந்த மகத்தான மனிதரின் சாதனைகளை, எதிர் கால தமிழ் சமூகம் அறிந்து கொள்ள வழி வகை செய்ய வேண்டும்.

அவரது நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு சென்னையில் பொதுப் பணித்துறை அலுவலகத்தில் சிலை அமைக்க வேண்டும். ஆர்தர் காட்டன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழ்நாடு பாடநூல் கழகம் புத்தகமாக வெளியிட வேண்டும்,'' என்கிறார்.

காணொளிக் குறிப்பு, முதியோர் நலனுக்காக டெல்லி அரசு மேற்கொண்ட அதிரடி முயற்சி- உண்மை என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: