கேரளாவில் தீப்பிடித்து எரியும் கிணற்றுத் தண்ணீர் - என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images
இன்றைய (மார்ச் 16) தமிழ் நாளிதழ்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் கிணறுகளில் தீப்பிடித்து எரிவது குறித்து அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தினத்தந்தி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில்,
''பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி மற்றும் கூட்ட நாடு பகுதியில் உள்ள கிணறுகளில் உள்ள தண்ணீரில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இது குறித்து அரசு அதிகாரிகளுக்கும் தீயணைப்பு துறை மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் விவரம் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட கிணறுகளில் இந்த மாதிரி தீப்பிழம்புகள் காணப்பட்டு வருகிறது.
காரணம் என்ன?
ஒரு சில கிணறுகளில் பெட்ரோல் வாசம் அடிக்கிறது. ஒரு சில கிணறுகளில் மினரல் வாட்டரின் அம்சம் உள்ளது என கூறப்படுகிறது. அதேநேரத்தில் அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இருந்து கிணறுகளில் பெட்ரோல் கலந்து இருக்கலாம், அதன் மூலமும் தீப்பிடித்து எரிய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்கள்.
பாலக்காடு மாவட்டத்தில் கேரளாவிலேயே மிக அதிகமாக வெயில் கொடுமை அதிகரித்து உள்ளது. வெயில் கொடுமையால் ஏற்பட்ட சூட்டின் விளைவாய் தீ பிடித்து இருக்குமா என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். உண்மையான காரணம் என்ன என்று இதுவரை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
கிணற்றில் தீ எரிவதை பார்க்க பொது மக்கள் பலரும் அங்கு வந்து செல்கிறார்கள்.'' என்று கூறப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் செல்போன் பார்க்க கட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images
அரசு ஊழியர்கள் பணி நேரங்களில் அலுவலகத்திற்குள் செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த 4 வாரத்தில் வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தி இந்து தமிழ் திசை நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில்,
''தமிழ்நாடு சுகாதாரத்துறை திருச்சி மண்டல அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் டி.எஸ்.ராதிகா. இவர் பணியிடத்தில் செல்போனில் வீடியோ பதிவு செய்ததாகவும், அப்போது செல்போனை பறிமுதல் செய்த உயர் அதிகாரி மற்றும் காவலரை தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, கடந்த ஜனவரி 29ம் தேதி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தனது பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி ராதிகா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், ''அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் செல்போனை பயன்படுத்துவது இயல்பான ஒன்றாக மாறி வருகிறது. அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத்துவது, செல்போனில் வீடியோ பதிவு செய்வது நடத்தை மீறலாகும்.
அலுவலகத்தில் ஊழியர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக செல்போன் பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது. அவசர காலத்தில் அதிகாரிகள் அனுமதியுடன் அலுவலகத்திற்கு வெளியே சென்று செல்போன் பேச அனுமதிக்கலாம்.
எனவே, அரசு அலுவலகங்களில் அலுவலக நேரங்களில் செல்போன், செல்போன் கேமராக்களை பயன்படுத்துவதை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பாக அனைத்து அதிகாரிகளுக்கும் சுகாதாரத்துறை செயலர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் மற்றும் தமிழக சுகாதார போக்குவரத்து இயக்குனர் ஆகியோர் உத்தரவு மற்றும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
அந்த உத்தரவு மற்றும் சுற்றறிக்கையை மீறும் அரசு ஊழியர்கள் மீது அரசு ஊழியர்கள் நடத்தை விதி 1973-ல் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பணி நேரத்தில் செல்போன் மற்றும் செல்போன் கேமராக்களை பயன்படுத்துவதை வரைமுறைப்படுத்த வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்.
அதில் கள அலுவலர்கள், குறிப்பிட்ட பணிக்காக ஒதுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு விதி விலக்கு அளிக்கலாம். இந்த உத்தரவை 4 வாரத்தில் நிறைவேற்ற வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக ஏப். 13-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். இவ்வாறு தி இந்து தமிழ் திசை செய்தியில் உள்ளது.
ஆறுகளைப் பாதுகாக்க ரூ. 20, 000 கோடியில் திட்டம்

பட மூலாதாரம், Getty Images
இந்தியா முழுவதும் காவிரி உள்ளிட்ட 13 பெரிய ஆறுகள் மற்றும் 202 கிளை ஆறுகளைப் பாதுகாக்க ரூ. 20,000 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தினகரன் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில்,
''வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், இது குறித்த விரிவான திட்ட அறிக்கையை நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டு, பேசுகையில், 'நாடு முழுவதும் 13 முக்கிய ஆறுகளுடன், கிளை நதிகளான சுமார் 202 ஆறுகளையும் பாதுகாப்பது தொடர்பான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. துணை ஆறுகளை பாதுகாக்காமல் இந்த திட்டப்பணிகளை வெற்றியடைய முடியாது.
ஜீலம், சட்லஜ், செனாவ், ரவி, பியாஸ், யமுனா, பிரம்மபுத்ரா, லூனி, நர்மதா, கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா, காவேரி ஆகிய 13 முக்கிய ஆறுகளை பாதுகாக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆறுக்கும் அதன் பரப்பிற்கு ஏற்றவாறு தனித்தனி பாதுகாப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
மாநில அரசுகள் செயல்படுத்தும்
இந்த13 ஆறுகளுக்கு இடையே 667 சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் தோட்ட மாதிரிகள் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளன. இத்திட்டமானது நர்மதாவில் இருந்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம் ஆரம்ப வெற்றியடைந்ததால், யமுனா, நர்மதா, ஜீலம் உட்பட நாட்டின் 13 முக்கிய ஆறுகளை பாதுகாக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் 24 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் வழியாக பாயும் இந்த ஆறுகளை பாதுகாப்பதற்காக வரும் ஆண்டுகளில் சுமார் 20,000 கோடி ரூபாய் செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு திட்டத்தையும் மாநில அரசுகள் செயல்படுத்தும்.
ஒன்றிய அரசு திட்ட செயல்பாட்டினை கண்காணிக்கும். இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், எதிர்கால சவால்களைச் சமாளிப்பது உட்பட, கேப்-26ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
காடுகளின் பரப்பை அதிகரிக்க
கார்பன் உமிழ்வை வரும் 2030ம் ஆண்டுக்குள் 1 பில்லியன் டன்கள் குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின்படி 13 ஆறுகளின் இருபுறமும் தோட்டங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் 7,417 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காடுகளின் பரப்பை அதிகரிக்க முடியும்.
அடுத்த 10 ஆண்டுகளில், சுமார் 50.21 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுவதற்கு இத்திட்டம் உதவும். மேலும் ஆண்டுக்கு 1,887 கன மீட்டர் மற்றும் 64,000 சதுர மீட்டர் நிலத்தடி நீர் ரீசார்ஜ் மற்றும் 64,000 சதுர மீட்டர் மண் அரிப்பை ஒவ்வொரு ஆண்டும் குறைக்கும்'' என்று மத்திய அமைச்சர் கூறியதாக தினகரன் நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












