தமிழ்நாடு விவசாயம்: அதிக மகசூலுக்கு மண்வளத்தை அறிவது எப்படி ? பரிசோதனை வழிமுறைகள் என்ன ?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
''ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு''
என்கிறது திருக்குறள். வேள் என்றால் மண் என்பதையும் குறிக்கிறது. மண்ணை பண்படுத்தி, பயிர் செய்யும் முறைமையை 'வேளாண்மை' என்று அழைத்ததாக சொல்கிறார் முதுமுனைவர் இளங்குமரனார். இத்தகைய மண் வளமாக இருந்தால்தான் பயிர் செய்ய முடியும். ஆகையால், வேளாண்மைக்கு முக்கியத்துவம் பெற்ற மண் பரிசோதனையும் செய்வது குறித்து இப்போது பார்க்கலாம்.
வேளாண்பல்கலைக்கழகம் என்ன சொல்கிறது ?
உலகின் இயற்கை வள ஆதாரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மண். ஒரு அங்குல மண் உருவாதற்கு 300-1000 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பயிர் செழுமையாக வளர்ந்து அதிக மகசூல் தர, ஏழு அடிப்படைத் தேவைகள் உள்ளன.
அவை 1.சூரிய ஒளி 2.கரியமில வாயு 3.ஆக்ஸிஜன் 4.தண்ணீர் 5.தாது உப்புகள் 6.மண் பிடிமானம் மற்றும் 7.மண்வெப்பம் ஆகியவையாகும்.
இதில் முதல் மூன்றும் சூரியன், காற்று மூலம் பயிர்களுக்கு கிடைத்துவிடுகிறது. மற்றவை மண்ணிலிருந்து தான் பெற்றாக வேண்டும். அதிகபடியான மழை, காற்று மற்றும் வெப்பம் ஆகிய தாக்குதல்களால் மண்ணிலுள்ள தாதுக்கள் நீக்கப்பட்டு மண் குறைவு ஏற்படுகிறது. எனவே மண் வள மேலாண்மை அதிக மகசூல் பெறவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது என்கிறது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்.
மண்பரிசோதனை ஏன் ?
மண்ணில் உள்ள தழைச் சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய மூன்றும் சரியான அளவில் இருக்க வேண்டும். இதில், தழைச் சத்து பயிர் வளர்ச்சிக்கும் மணிச் சத்து வேர் மற்றும் கதிர் வளர்சிக்கும் சாம்பல் சத்து பூச்சி, நோயில் இருந்து பயிரை பாதுகாக்கவும் செய்கின்றன. இந்த 3 சத்துக்கள் குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பயிர் பாதிக்கப்படும். மகசூல் கிடைக்காது.
அதேபோல், மண்ணில் களர், உவர் தன்மை அதிகமாக இருந்தாலும் பயிருக்கு தேவையான சத்துக்களும் கிடைக்காது. ஆகையால், மண்ணில் உள்ள சத்துகள் அளவையும் களர், உவர் தன்மையையும் கண்டறிய வேண்டியது அவசியமாகிறது.
களர், உவர் தன்மை தமிழ்நாட்ட்டில் 6 - 8.5 சதவீதம் வரை இருக்கலாம். இதை விட கூடுதலாக இருந்தால் களர், உவர் மண் என்றும் 6 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் அமிலத் தன்மை உள்ளதாக கண்டறியப்படும்.
இவற்றைக் கண்டறிந்தால், அதற்கேற்ப மண்ணை பண்படுத்தி, சம சீரான உரமிடலாம். மண்ணுக்கு ஏற்ற பயிரை தேர்வு செய்யலாம். குறிப்பாக உரத் தேர்வு, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகத்தை மேற்கொள்ளலாம்.
இப்படி திட்டமிட்டு சாகுபடி செய்வதன் மூலம், செலவு குறையும் மகசூல் அதிகரிக்கும். மண்ணின் தன்மையை தெரிந்து கொள்ளாமல், தொடர்ந்து ஓரே மாதிரியான சாகுபடி முறைகளை மேற்கொள்வதால் உரிய மகசூல் கிடைக்காது என்கிறார்கள் வேளாண் துறை அலுவலர்கள்.
மண்மாதிரி எடுக்கும் முறை

பட மூலாதாரம், Getty Images
பயிர் சாகுபடி செய்யப்படாத தரிசு நிலத்தில் மாதிரிகளை சேகரிக்க வேண்டும். மரத்தின் நிழல் உள்ள பகுதி, வரப்பு, வாய்க்கால், கிணறு ஓரங்களில் மாதிரி எடுக்க கூடாது.
பயிர் சாகுபடி செய்த 3 மாத இடைவெளியில் மண் மாதிரி சேகரிக்க வேண்டும். உரம். பூச்சி மருந்து இட்ட இடங்களில் எடுக்க கூடாது. பயிர் உள்ள இடத்தில் எடுக்க கூடாது.
மண்மாதிரி சேகரிக்கும் இடத்தில் மேற்பரப்பு மண்ணை அகற்றாமல், இலை, சருகுகளை கைகளால் அப்புறப்படுத்த வேண்டும்.
மண் சேகரிக்கும் போது உரம், பூச்சி மருந்து இருந்த பைகளைப் பயன்படுத்தக் கூடாது.
இதையடுத்து ஆங்கில எழுத்து வி வடிவத்தில் 2.5 செ.மீ ஆழம் வரை வெட்டி எடுக்க வேண்டும். சேகரிக்கும் மண் ஈரமாக இருந்தால், அதை நிழலில் உலர வைக்க வேண்டும்.
ஒரு எக்டரில் 10- 20 இடங்களில் மண் மாதிரியை சேகரித்து, சேகரித்த 12 கிலோ மண்ணை ஒரு வாளியில் கொட்டி கலக்க வேண்டும். அதை அரை கிலோ அளவு வரும் வரை குறைக்க வேண்டும்.
அதை சுத்தமான பாலிதீன் பையில் பேக் செய்து, விவசாயி பெயர், நிலம் அமைந்துள்ள பகுதி, சர்வே எண், ஆய்விற்கி முன்னர் சாகுபடி செய்த பயிர் ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஆய்விற்கு அனுப்ப வேண்டும்.
வேளாண்துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வகங்கள் மற்றும் நடமாடும் ஆய்வகங்கள் உள்ளன. இவற்றில் குறைந்த கட்டணத்தில் மண்பரிசோதனை செய்து கொள்ளலாம்.
பயிருக்கு ஏற்ப மாதிரி மற்றும் கட்டணம்
சல்லி வேர்களைக் கொண்ட நெல், நிலக்கடலை, கேழ்வரகு, கம்பு, சிறுதானிய பயிர்களுக்கு 15 செ.மீ ஆழத்திற்கு மண் மாதிரி எடுக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
ஆணிவேர் கொண்ட பயிர்களான, கரும்பு, வாழை, பருத்தி, மரவள்ளி, காய்கறிப் பயிர்களுக்கு 22 செ.மீ ஆழத்தில் மாதிரி எடுக்க வேண்டும்.
தென்னை, மா உள்ளிட்ட நிரந்தரப் பயிர்கள், தோட்டப் பயிரிகள், மலைப் பயிர்களுக்கு 30 செ.மீ, 60 செ.மீ, 90 செ.மீ ஆழம் என 3 இடங்களில் மண்மாதிரி சேகரிக்க வேண்டும்.
மண்மாதிரி ஆய்வுக் கட்டணமாக பேரூட்டத்திற்கு ரூ. 10, நுண்ணூட்டத்திற்கு ரூ. 10 என மொத்தம் ரூ. 20 மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.
பாசன நீரையும் ஆய்வு செய்யலாம். இதற்கு ஆய்வுக் கட்டணம் ரூ. 20 செலுத்த வேண்டும்.
பரிசோதனை ஆய்வகங்கள்
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மண்பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இரண்டு மாவட்டங்களுக்கு ஒரு நடமாடும் ஆய்வகங்கள் உள்ளன. ஆய்வகங்கள் குறித்த விபரத்தினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணைய தளப் பக்கத்தில் https://bit.ly/3oQcVHW அறிந்து கொள்ளலாம்.
மண் பரிசோதனைக்கு ஆய்வகங்களில் கொடுத்த 24 மணி நேரத்தில் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மண்ணில் உள்ள களர், உவர், உப்பு, சுண்ணாம்பு அளவுகளைக் கண்டறிந்த பிறகு, அந்த மண்ணில் என்ன மாதிரியான பயிர்களை சாகுபடி செய்யலாம். அந்த மண் வகைக்கு ஏற்ப ரசாயன, உயிர் உரங்களை வேளாண் அலுவலர்கள் பரிந்துரை செய்வார்கள்.
களர், உவர் நிலங்களாக இருந்தால், தண்ணீர் நிறுத்தி வடிகட்டுவது, பசுந்தாள் உரப் பயிர்களை வளர்ப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் அளிக்கப்படும்.
ஹெல்த் செக் அப் போல் மண் வள ஆய்வு
ஆய்வு செய்யப்பட்ட மண் குறித்து, மண் வள அட்டை ஒன்றையும் வழங்குவார்கள். அதில், மண்ணின் தன்மை, நிலை, பரிந்துரைகளை குறித்து வழங்குவார்கள்.
அந்தந்த வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் விவசாயிகளின் வயல்களுக்கே சென்று மண் மாதிரிகளை சேகரித்து அனுப்புவார்கள். விவசாயிகள் நேரடியாகவும், உரிய வழிமுறைகளைப் பின்பற்றி மாதிரியை சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பலாம்.
இன்னும் தெளிவாக சொல்வதென்றால், உடல் நலத்தை அவ்வப்போது பரிசோதனை (ஹெல்த் செக் அப்) செய்வது போல், ஒரு வயலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மண்மாதிரி செய்து, மண்ணின் நிலையை கண்டறிந்து சாகுபடி அவசியம் என்கிறார்கள் வேளாண் துறை அலுவலர்கள்.
பிற செய்திகள்:
- தஞ்சாவூர், புதுக்கோட்டையில் களைகட்டும் மொய் விருந்துகள் - கள நிலவரம்
- யுக்ரேன்: ரசாயன ஆயுதங்கள் என்றால் என்ன? ரஷ்யாவால் அதை பயன்படுத்த முடியுமா?
- ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை விதித்த செளதி அரேபியா – காரணம் என்ன?
- ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் வருமா?
- டிராக்டர் பறிமுதலால் தமிழக விவசாயி தற்கொலை - இந்த விதிகள் தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












