பட்ஜெட் 2022: நதிகள் இணைப்பு நிஜத்தில் நடக்குமா? விவசாயிகள் மாறுபட்ட கருத்து

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜோ. மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில், கோதாவரி -பெண்ணாறு-காவிரி நதிகள் இணைப்பு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாறுபட்ட கருத்துக்களை விவசாயிகள் சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய நாடாளுமன்றத்தில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்தார். அதில், விவசாயம் சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக, ரசாயனம் இல்லாத இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். இதன் முதல்கட்டமாக, கங்கை நதியை ஒட்டி 5 கி.மீ சுற்று வட்டாரத்தில் இயற்கை விவசாயத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.
'ஜீரோ' பட்ஜெட் மற்றும் இயற்கை விவாசயத்தை மேம்படுத்த பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டம். நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற 44, 000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, சிறுதானியங்களை உற்பத்தி, மலைவாழ் பகுதி வேளான் உற்பத்தி பொருட்களுக்கு முக்கியத்தும். எண்ணெய் வித்துக்களை இறக்குமதி செய்வதைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த திட்டம். வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க 2.7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு என்பன உள்ளிட்டவை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

முக்கிய திட்டமாக, கோதாவரி - காவிரி உள்ளிட்ட 5 நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். மாநில அரசுகளின் ஒப்புதல் பெற்ற பிறகு இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டும். குறிப்பாக, கோதாவரி -பெண்ணாறு-காவிரி நதிகள் இணைப்புத் திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. வேளாண் நிலங்களை அளவீடு செய்யவும், விளைச்சல் பகுதிகளை கணக்கீடு செய்யவும் கிசான் ட்ரோன் திட்டம். நில சீர்த்திருத்தின்படி ஒரு நாடு ஒரு பதிவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். நில ஆவணங்கள் மின்னணு முறையில் ஆவணப்படுத்தப்படும். என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்த்த பல திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வரவில்லை. ஆனாலும், நதிநீர் இணைப்பு, இயற்கை விவசாயத்தை முக்கியத்துவம் உள்ளிட்டவை வரவேற்கத்தக்க அம்சங்களாக உள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், வேறு சிலர் பட்ஜெட்டின் சில அம்சங்களுக்கு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

பட மூலாதாரம், T Prumal
பாரதிய கிசான் சங்கத்தின் தேசியச் செயலாளர் த.பெருமாள் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''கோதாவரி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் 750 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் கடலில் கலக்கிறது. கோதாவரி -காவிரி - கிருஷ்ணா-பெண்ணாறு நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து தெரிவித்துள்ளனர். இதை வரவேற்கிறோம். முந்தைய பட்ஜெட்டுகளில் கூட இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என்று மூன்று மாநிலங்களின் பங்களிப்போடு நடைபெறும் திட்டம். மொத்தம் 85 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் மூன்று மாநிலங்களும் தலா 5 ஆயிரம் கோடி பங்களிப்பை வழங்க வேண்டும். மீத தொகையை மத்திய அரசு வழங்கும்.
இந்த திட்டத்தின் அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது நல்ல முன்னேற்றம். இதனால், ஆண்டுதோறும் தண்ணீர் பிரச்சினையை எதிர்கொண்டு வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 250 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.'' என்றார்.
அதே போல், ''எண்ணெய் வித்துகளைப் பொருத்தவரை 60 சதவீதம் வரை இறக்குமதி செய்து வருகிறோம். இதைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவோம் என்பதும் ஆக்கப்பூர்வமான முயற்சி. இன்றைக்கு வேளாண்மையில் இயந்திரமயம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இந்நிலையில், வேளாண் இயந்திரங்களுக்கான வரியை குறைத்துள்ளது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். குறைந்த பட்ச ஆதார விலைக்கு கடந்த பட்ஜெட்டில் 2.58 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது அதை 2.70 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளனர். ஆனால், இது போதுமானதல்ல. விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்திருந்தோம். ஆனால், ஏமாற்றமாக உள்ளது என்கிறார் த. பெருமாள்.

பட மூலாதாரம், PR PANDIAN
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், ''இந்த பட்ஜெட் மேலோட்டமான பார்வையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது போல தோன்றலாம். ஆனால், கடந்த ஆண்டை விட பல மடங்கு வேளாண்மைக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு லட்சம் கோடி ரூபாய் உர மானியத்திற்கு ஒதுக்கப்பட்டது. கடன் இலக்கு மட்டும் 1,50 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நெல், கோதுமை கொள்முதலுக்கு மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போது குறைந்த ஆதார விலை உள்ளிட்டவற்கும் சேர்த்து 2.70 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இது பெரிய ஏமாற்று வேலை.
கோதாவரி - காவிரி உள்ளிட்ட நதிகள் இணைப்புத்திட்டம் குறித்து வாஜ்பாய் ஆட்சிக் காலம் முதல் பேசப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பை முந்தைய பட்ஜெட்டுகளிலும் அறிவித்தனர். இன்னும் நடைமுறைக்கு வராமல், அறிவிப்பாக மட்டும் தொடர்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் மாநில அரசுகளின் ஒப்புதல் பெறுவது, திட்ட செயல்பாடுகள் குறித்த விவரங்களை அரசு தெரிவிக்கவில்லை. மாநில அரசுகளின் ஒத்த கருத்தைப் பெறவில்லை. நதிகளை தேசியமயமாக்காமல், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்னைகளை தீர்க்காமல் இந்த திட்டம் சாத்தியம் இல்லை. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்னைகளை திசை திருப்பும் வகையில் இது உள்ளது. ஆகையால், கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேறுவதற்கான அடிப்படை அம்சங்களுடன் இல்லை.

பட மூலாதாரம், P.R. PANDIAN
அதேபோல் ஜீரோ பட்ஜெட் விவசாயம், இயற்கை விவசாயம் குறித்தும் ஏற்கனவே அறிவித்ததுதான். இதை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவாக இல்லை. ஆகவே, வாய்ஜாலத்தால், மூடி மறைத்து விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது. விவசாயத்தில், 20 சதவீதம் அரசு முதலீடு என்றால், 80 சதவீதம் தனியார் பங்களிப்பு என்கிறார்கள். இது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைக்கு எதிரானது. தனியார்மயத்தை ஊக்குவிப்பதாக உள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை நிதி ஒதுக்கீடு, நீர்ப்பாசன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை எல்லாம் நடைமுறைக்கு வரும் போதுதான் உண்மை நிலை தெரிய வரும் என்கிறார்.
அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முகசுந்தரம் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''இயற்கை விவசாயம் மேம்படுத்தப்படும். நதிகள் இணைப்பு. குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கிறோம். ஆனால், இவை வெறும் அறிவிப்பாக மட்டும் இருக்க கூடாது. உடனே நடைமுறைக்கு வர வேண்டும். இது குறித்த செயல்திட்டங்களை வெளியிட்டு, ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இயற்கை விவசாயத்தில், புதிய எளிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் வேண்டும். இயற்கை வேளாண்மையின் அவசியத்தை எடுத்துச் சொல்லும் வகையில் கிராமவாரியாக பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். அதற்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இல்லை'' என்றார்.

பட மூலாதாரம், Shanmugasundaram
மேலும், வேளாண்துறையில் 80 சதவிகிதம் தனியார் பங்களிப்பு என்பது, கார்ப்பரேட் நிறுவங்களுக்கே சாதகமாகவே இருக்கும். விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் இருக்காது. இந்தியாவில் ஆண்டுதோறும் 20 -30 சதவீத உணவு தானியங்கள் வீணாகின்றன. ஆனால், நாடு முழுக்க தானிய கிடங்குகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இது குறித்தும் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. நாடு முழுக்க கிசான் மண்டிகள் அமைக்கப்படும் என்று பா.ஜ.வின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தனர். இது குறித்த அறிவிப்பும் இல்லை. இவை எல்லாம் ஏமாற்றமாக இருக்கிறது.
சிறு தானியங்கள் உற்பத்தி அதிகரிக்கப்படும். உலகளாவிய அளவில் கொண்டு சேர்க்கப்படும் என்கிற அறிவிப்பு சிறுதானிய உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அறிவிப்போடு நின்று விடாமல், நடைமுறைக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
- கோவை சூயஸ் திட்டம்: தேர்தல் நேரத்தில் சூடுபிடிக்கும் எதிர்ப்புப் போராட்டம்; திமுக நிலை என்ன?
- இந்திய பட்ஜெட் -2022 தேர்தல் பட்ஜெட்டாக இருக்குமா? யாருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?
- இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.3.4 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய மக்கள்: 81 சதவீதம் அதிகரிப்பு
- யேமன் உள்நாட்டுப் போர்: பல நூறு குழந்தை போராளிகள் மரணம்
- நரேந்திர மோதிக்கு தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தால் இலங்கையில் அரசியல் சர்ச்சை
- ஆஸ்திரேலிய ஓபன்: ரஃபேல் நடால் 21 கிராண்ட்ஸ்லாம் வென்று உலக சாதனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












