ஆந்திர கிராமத்தில் ராஜநாகங்கள் - கொல்லாமல் பாதுகாக்கும் ஊர் மக்கள்

பட மூலாதாரம், EGWS
- எழுதியவர், லாக்கோஜு ஸ்ரீனிவாஸ்
- பதவி, பிபிசி தெலுங்கு சேவைக்காக
ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டம், சீடிகாடா மண்டலில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையின் வனவிலங்கு சங்க அலுவலகத்தைத் தொலைபேசியில் அழைக்கும் பொதுமக்கள் பதற்றத்தோடு, வாய் குழறிப் பேசுவார்கள். அப்படியான அழைப்பு வந்தால், அழைத்தவர் அதிக நச்சு கொண்ட ராஜநாகத்தை பார்த்திருக்கிறார் என்று புரிந்துகொண்டு இந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் ஊழியர்களோடு, குறிப்பிட்ட இடத்துக்கு செல்வார்கள்.
கிழக்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இந்தப் பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் ராஜநாகம் பரவலாகக் காணப்படுகிறது.
அதிக விஷத்தன்மை கொண்ட பாம்புகளில் ஒன்றான ராஜநாகம், 13 முதல் 15 அடி நீளம் வளரக்கூடியது. அது தன்னுடைய தலையை 3 முதல் 4 அடிகள் உயரம் வரை உயர்த்தும்.
இவ்வளவு உயரத்திற்கு ராஜநாகம் தலையை உயர்த்தும்போது பார்ப்பவர்கள் பயந்துவிடுவதாகக் கிழக்குத் தொடர்ச்சி மலை வனவிலங்கு சங்கத்தின் நிறுவனர் மூர்த்தி காந்தி மகாந்தி கூறுகிறார். ராஜநாக பாம்புகள் மீட்கப்பட்ட கிராமங்களுக்குப் பிபிசி சென்றபோது, சோடாவரம் வனச்சரக அலுவலர் ரவிவர்மா மற்றும் மூர்த்தி காந்தி மகாந்தி ராஜநாகம் பற்றிய மேற்கூறிய தகவல்களைக் கூறினர்.
எங்கிருந்து ராஜநாகங்கள் வருகின்றன? மனித வாழ்விடத்திற்குள் வந்த ராஜநாகங்கள் எவ்வாறு மீட்கப்படுகின்றன? மீட்கப்படும் ராஜநாகங்கள் எங்கு விடப்படும்? அந்த ராஜநாகங்கள் மீண்டும் திரும்பிவர வாய்ப்பிருக்கிறதா? ஆகிய கேள்விகளுக்கு ரவிவர்மாவும், மூர்த்தி காந்தி மகாந்தியும் பதிலளித்தனர்.

பட மூலாதாரம், EGWS
சோடாவரம், சீடிகாடா, தேவரப்பள்ளி, மாடுகுளா போன்ற கிழக்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் இருந்தே தங்களுக்குப் பெரும்பாலான அழைப்புகள் வருவதாக அவர்கள் கூறினர். விலங்கியல் துறையில் எம்.பில் படித்த மூர்த்தி காந்திக்கு வனவிலங்குகள் மீது, குறிப்பாக பாம்புகள் மீது குழந்தைப் பருவத்திலிருந்தே ஆர்வம் இருந்துள்ளது. இந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு கிழக்குத் தொடர்ச்சி மலை வனவிலங்கு சங்கத்தை அவர் நிறுவினார்.
பயந்த சுபாவம் கொண்டவை
"ராஜநாகம் இன்று அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றாக உள்ளது. உருவத்தில் பெரிய அளவிலான அவை, தலையை தன்னுடைய உயரத்தின் மூன்றின் ஒரு பகுதிக்கு உயர்த்தும். ராஜநாகம் தன்னுடைய தலையை உயர்த்துகிறது என்றால் தன்னைத் தற்காத்துக்கொள்ள அது முயற்சிக்கிறது என்று பொருள். ஆனால், நாம் பயத்தில் அதைக் கொல்ல முயற்சிக்கிறோம். அப்போதுதான் அது நம்மைத் தாக்கும். ராஜ நாகங்களோடு ஒப்பிடும்போது இந்திய நாகம், பெங்காலி கிரெய்ட் மற்றும் ரசல்ஸ் வைப்பர் வகை பாம்புகள்தான் மக்களை அதிகம் கடிக்கின்றன. பொதுவாகவே ராஜநாகம் பயந்த சுபாவம் கொண்டது. மனிதர்களைக் கண்டவுடன் தப்பிக்கவே அது முயற்சிக்கும்" என்கிறார் மூர்த்தி காந்தி.
"பொதுவாக, ராஜநாகம் நீர் இருக்கும் பகுதிகளில் வாழ்கிறது. அவற்றால் தண்ணீரில் நீந்தமுடியும். கிழக்குத் தொடர்ச்சி மலையின் வனவிலங்கு சங்கம், அந்த மலையில் உள்ள ராஜநாகங்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வருகிறது. கிழக்கு தொடர்ச்சி மலையில் ராஜநாகங்களைக் காப்பாற்றுவதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. இந்த மலையின் பல்லுயிர்களைப் பாதுகாப்பதில் ராஜநாகம் பெரும்பங்கு வகிக்கிறது" என்கிறார் சோடவரம் வனச்சரக அலுவலர் ரவிவர்மா.


பெண் ராஜநாகம் கூடுகட்டும்
ராஜநாகங்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இனப்பெருக்கம் செய்து, ஜூன் இறுதியில் முட்டையிடும். பெண் நாகம் கிளைகள் மற்றும் மூங்கில் இலைகளைக் கொண்டு கூடு கட்டும். இதை வேறு எந்தப் பாம்பும் செய்வதில்லை. அந்தக் கூட்டில் முப்பது முதல் நாற்பது முட்டைகளை இடும் பெண் ராஜநாகம், அடுத்த ஒன்றரை மாதங்கள் உணவுக்காகவும் வெளியே செல்லாமல் அவற்றைப் பாதுகாக்கும். பெண் ராஜநாகம் உணவுக்காக வெளியே சென்றால் முட்டைகளை வேறு மிருகங்கள் தாக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ராஜநாகம் முட்டையிட்டதும், நாங்கள் அதற்கான பாதுகாப்பை ஏற்படுத்துவோம். கிருஷ்ணபாலம் அருகே கடந்த ஆகஸ்ட் முதல்வாரத்தில் 30 ராஜநாக முட்டைகளைப் பார்த்த மக்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். உள்ளூர் மக்கள் உதவியுடன் அவற்றைச் சுற்றி நாங்கள் கொசுவலையைக் கட்டி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினோம் . பின்னர், குஞ்சு பொறித்தவுடன் அவற்றை மனித வாழ்விடங்களில் இருந்து தொலைதூரத்தில் கொண்டு சென்று விட்டோம்" என்று கூறுகிறார் மூர்த்தி காந்தி.
ராஜநாகம் பற்றி பேசிக்கொண்டே தேவரப்பள்ளி மண்டலில் உள்ள நாகய்யபேட்டா கிராமத்தை நாங்கள் அடைந்தோம். அங்கு, கடந்த மாதம் 13 அடி ராஜநாகம் மீட்கப்பட்ட தென்னந்தோப்பிற்கு மத்தியில் இருந்த வீட்டிற்குச் சென்றோம்.
அந்த வீட்டுத் தலைவியான தேமுது, துணிகளைக் காயவைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்த போது 13 அடி நீளமுள்ள ராஜநாகத்தைப் பார்த்துள்ளார்.
மீண்டும் அந்தப் பாம்பு கண்ணில் பட்டதா என்பதை மூர்த்தியிடம் கேட்டு, அவர் இல்லை என்று சொன்னதும் நிம்மதிப்பெருமூச்சுவிட்ட தேமுது, தன்னுடைய வீட்டினுள் ராஜநாகத்தைப் பார்த்த அனுபவத்தை பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.
"நான் பார்த்தபோது அதன் தலை நடுஅறையிலும், வால் சமையலறையிலும் இருந்தது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அப்படியே நின்றுவிட்டேன். உடனே வீட்டு கதவைப் பூட்டிவிட்டு கிழக்குத் தொடர்ச்சி மலையின் வனவிலங்கு சங்கத்தை தொடர்புகொண்டேன். அதை தூரத்திலிருந்து பார்த்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. அருகே பார்த்திருந்தால் அது என்னைக் கடித்திருக்கும். இது மாதிரியான பெரிய பாம்பை நான் பார்த்ததில்லை" என்றார் தேமுது.
"மீட்கப்பட்ட பிறகு அது எங்கு விடப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், மீண்டும் வருமோ என்று பயமாக உள்ளது. இதற்கு முன்பு பாம்பைப் பார்த்தால் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொல்வோம். வனவிலங்கு சங்கத்தின் அறிவுரையின்பேரில் பாம்புகளைக் கொல்வதை நாங்கள் நிறுத்திவிட்டோம்" என்றும் அவர் கூறினார்.
மீட்கப்படும் பாம்புகள் எங்கே விடப்படும்?
"நாங்கள் மூன்று முதல் நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்து, வனத்துறையுடன் இணைந்து பாம்புகளை மீட்கிறோம். மீட்கும் போது பாம்புகளுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்கிறோம். கொக்கிகள், டார்ச், நல்ல ஷூ ஆகியவைதான் எங்கள் கருவிகள். இந்தக் கருவிகளின் உதவியுடன் பாம்புகளை மீட்டு, அவற்றை ஒரு பையில் போட்டு, அதனை எடை பார்ப்போம். நாகய்யப்பேட்டையில் மீட்கப்பட்ட பாம்பு 11 கிலோவிற்கும் அதிகமான எடையிருந்தது" என்கிறார் மூர்த்தி காந்தி.
மீட்கப்பட்ட பாம்புகளுக்கு காயங்கள் ஏதும் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு, தண்ணீர் மற்றும் மூங்கில் மரங்கள் நிறைந்த அருகேயுள்ள பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் அவை விடப்படும் என்றும் மூர்த்தி காந்தி கூறுகிறார்.

பட மூலாதாரம், EGWS
"ராஜ நாகம் கடித்து இறப்பது மிகவும் அரிதானது. இந்திய நாகம், பெங்காலி கிரேட் மற்றும் ரசல்ஸ் வைப்பர் ஆகியவற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். ராஜநாகம் இந்தப் பாம்புகளை வேட்டையாடும் என்பதால் அது மிகவும் அவசியம். இந்த உண்மையை சிறு காணொளிகள் மூலமாகவும் தெரு நாடகங்கள் மூலமாகவும் மக்களிடம் கொண்டு செல்கிறோம். இன்று ராஜநாகத்தைக் கண்டால் அதைக் கொல்லாமல் எங்களை அழைக்கிறார்கள். அதற்கு தேமுது சமீபத்திய உதாரணம்" என்றார் மூர்த்தி காந்தி.
மனிதர்களைப் பார்த்து பயப்படும் ராஜநாகம்
ராஜநாகம் மட்டுமல்ல, எந்தவொரு பாம்பையும் துன்புறுத்துவதும் கொல்லுவதும் வன உயிர் பாதுகாப்புச் சட்டத்தின்படி குற்றம் என்கிறார் வனத்துறை அதிகாரி ரவி வர்மா. இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தின் கூற்றுப்படி, ராஜநாகம் அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
கிழக்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் பசுமையும், குளிர்ச்சியுமான தட்பவெட்ப நிலைதான் இந்தப் பகுதியில் ராஜநாகங்கள் அதிகம் வசிப்பதற்கான காரணம் எனக் கூறும் அவர், அழிந்துவரும் உயிரினங்களைப் பாதுகாப்பது நமது கடமை என்றும் கூறுகிறார்.

பட மூலாதாரம், EGWS
பொதுவாக ராஜநாகங்கள் மனிதப் பார்வையில் படாது, எப்போதாவதுதான் மனித வாழ்விடங்களுக்குள் வருகின்றன எனத் தெரிவித்த ரவி வர்மா, வனத்துறையினரும், கிழக்குத் தொடர்ச்சி மலையின் வனவிலங்கு சங்கத்தினரும் ராஜநாகத்தின் முக்கியத்துவம் குறித்து கிராம மற்றும் பழங்குடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருவதாகவும் பிபிசியிடம் தெரிவித்தார்.
பல்லுயிர் பெருக்கத்திற்கு பங்களிக்கும் ராஜநாகம்
"பொதுவாக விவசாய நிலங்களில்தான் ராஜநாகம் அதிகம் தட்டுப்படுகிறது. விவசாயிகளுக்கு தொந்தரவாக இருக்கும் எலிகளை அது கட்டுப்படுத்துகிறது. அதேபோல, பிற பாம்புகளை உணவுக்காக வேட்டையாடி, பல்லுயிர் சூழலைத் தக்க வைக்க உதவுகிறது" என்கிறார் மூர்த்தி காந்தி.
ராஜநாகங்களைப் பார்த்தால் பதற்றப்படாமல், அவை செல்ல வழிவிடுங்கள். அதேபோல. ராஜநாகத்தின் பார்வையில் ஓடாதீர்கள் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.
"பொதுவாக ராஜநாகங்கள் கடிக்காது. ஒருவேளை கடித்தால் அதன் விஷம் நம்முடைய நரம்பு மண்டலத்தை மோசமாக பாதிக்கும். அதன் விஷம் நம்முடைய உடலுக்குள் நுழைந்த சில நொடிகளிலேயே சுயநினைவை இழந்துவிடுவோம். அதேபோல, சுவாசிப்பது சிரமமாகி இறுதியில் மரணம் நேரும். ராஜநாகக் கடிக்கு இந்தியாவில் மருந்து கிடையாது. தாய்லாந்தில் மட்டும்தான் குறைந்த அளவிலான மருந்து உற்பத்தி செய்யப்படுகிறது" என்கிறார் மூர்த்தி காந்தி.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














