20 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண் - சிறு தடயத்தால் சிக்கியது எப்படி

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், நரேந்திர மோதி ஸ்டேடியம், குஜராத், வெடிகுண்டு மிரட்டல்கள்,

பட மூலாதாரம், Ahmedabad Police

படக்குறிப்பு, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்த ரெனே ஜோஷில்டா கைது செய்யப்பட்ட காட்சி
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

போலி மின்னஞ்சல்கள் மூலம் நாடு முழுவதும் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, சென்னையைச் சேர்ந்த பெண் பொறியாளரை ஆமதாபாத் போலீஸ் கைது செய்துள்ளது.

தனது காதலனை பழிவாங்குவதற்காக டார்க் வெப் மூலம் அப்பெண் போலி இமெயில்களை அனுப்பியதாக, ஆமதாபாத் குற்றப்பிரிவு இணை ஆணையர் கூறியுள்ளார். யார் இந்த பெண் பொறியாளர்? ஒரு சிறிய தவறு மூலம் அவர் சிக்கியது எப்படி?

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஜெனீவா லிபரல் பள்ளிக்கு கடந்த ஜூன் 3 அன்று இமெயில் ஒன்று வந்துள்ளது. பள்ளி வளாகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகக் குறிப்பிட்டு, 'காவல்துறையினர் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். உங்களால் எதுவும் செய்ய முடியாது' என அதில் கூறப்பட்டுள்ளது.

இமெயில் மூலம் மிரட்டல்

தொடர்ந்து, பள்ளியில் சோதனை நடத்தப்பட்டதில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது. அடுத்து வந்த நாட்களிலும் பள்ளிக்கு மிரட்டல் இமெயில்கள் வரத் தொடங்கியுள்ளன.

ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து பிஜே மருத்துவக் கல்லூரிக்கும் இதே தொனியில் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. ஒரு இமெயிலில், 'எங்கள் அதிகாரம் என்ன என்பது தெரிந்திருக்கும்' எனக் குறிப்பிட்டு, 'எங்கள் விமானிக்கு வாழ்த்துகள். நாங்கள் விளையாடவில்லை என உங்களுக்குத் தெரிந்திருக்கும்' எனக் கூறப்பட்டிருந்தது.

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், நரேந்திர மோதி ஸ்டேடியம், குஜராத், வெடிகுண்டு மிரட்டல்கள்,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஜூன் 3 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அதிக மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக, ஆமதாபாத் காவல்துறை தெரிவித்துள்ளது.

13 நாட்களில் தொடர் மின்னஞ்சல்கள்

இது தவிர, ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி அரங்கம், பிஜே மருத்துவக் கல்லூரி உள்பட தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்பட சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளன.

ஆமதாபாத்தைத் தொடர்ந்து டெல்லி, பெங்களூரு, மும்பை மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் உள்ள விளையாட்டு அரங்கம், பள்ளி, மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான மின்னஞ்சல்கள் வந்துள்ளன.

கடந்த ஜூன் 3 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அதிக மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக, ஆமதாபாத் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இமெயிலின் பின்னணி குறித்து ஆமதாபாத் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, பல்வேறு மாநில போலீஸாருடன் ஆலோசித்து வந்தனர்.

யார் இந்த ரெனே ஜோஷில்டா?

இவ்வழக்கில், சென்னையைச் சேர்ந்த 30 வயதான ரெனே ஜோஷில்டா என்ற பெண்ணை கடந்த 21-ஆம் தேதியன்று குஜராத்தில் இருந்து வந்த பெண் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

ரோபோட்டிக்ஸ் பொறியியலில் நிபுணத்துவம் பெற்ற ரெனே ஜோஷில்டா, சென்னையில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். கடந்த 2022 முதல் சென்னையில் உள்ள பிரபலமான பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மூத்த ஆலோசகராக (Senior consultant) பணியாற்றி வந்துள்ளார்.

சென்னை கே.கே.நகரில் ரெனே ஜோஷில்டா வசித்து வந்த வீடு மற்றும் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது தந்தையின் வீடு ஆகியவற்றில் குஜராத் தனிப்படை போலீஸ் ஆய்வு நடத்தியுள்ளது.

விசாரணைக்குப் பிறகு ரெனே ஜோஷில்டா மற்றும் அவரது தந்தை ஆல்வின் ஜோசப் ஆகியோரை குஜராத் மாநிலத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், நரேந்திர மோதி ஸ்டேடியம், குஜராத், வெடிகுண்டு மிரட்டல்கள்,

பட மூலாதாரம், Ahmedabad Police

படக்குறிப்பு, ரெனே ஜோஷில்டா அனுப்பிய மின்னஞ்சல்

ஆமதாபாத் இணை ஆணையர் கூறியது என்ன?

இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த ஆமதாபாத் குற்றப்பிரிவு இணை ஆணையர் சரத் சிங்கால், "திவிஜ் பிரபாகர் என்ற நபரை திருமணம் செய்துகொள்ள ரெனே விரும்பியுள்ளார். ஆனால், அது ஒருதலைக் காதலாக இருந்துள்ளது" எனக் கூறுகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் வேறு ஒரு பெண்ணுடன் திவிஜ் பிரபாகருக்கு திருமணம் நடந்துள்ளது. இதனால் அவரை பழிவாங்கும் எண்ணத்தில் ரெனே ஜோஷில்டா இருந்துள்ளதாக, ஆமதாபாத் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

"திவிஜ் பிரபாகரின் வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் போலி மின்னஞ்சல் முகவரிகளை ரெனே தொடங்கியுள்ளார். இவை திவிஜ் பிரபாகரின் பெயரில் உருவாக்கப்பட்டன" என, பெயர் குறிப்பிடாத ஆமதாபாத் காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தன்னை திவிஜ் பிரபாகரின் மனைவியாக காட்டி போலியான திருமண சான்றிதழை அலுவலக நண்பர்கள் மத்தியில் வாட்ஸ்ஆப் குழுவில் ரெனே பரப்பியதாகவும் பிரபாகருடன் நட்பில் இருந்த பெண்களுக்கும் ரெனே பல்வேறு துன்புறுத்தல்களை அளித்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.

இதற்காக கடந்த 2021 மற்றும் 2022 காலகட்டங்களில் மெய்நிகர் எண்கள் (Virtual number) மூலம் போலி வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை ரெனே உருவாக்கியதாகவும் ஆமதாபாத் போலீஸ் தெரிவித்துள்ளது.

ஆனால், அவரது சமூக வலைதள கணக்குகள், தொழில்முறை சார்ந்த பிம்பம் ஆகியவற்றை ஆய்வு செய்தபோது, இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதற்கான எந்த அறிகுறிகளும் அதில் தென்படவில்லை எனவும் காவல்துறை கூறுகிறது.

முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விபிஎன் தொழில்நுட்பம்... டார்க் வெப்

விபிஎன் (virtual private networks) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டார்க் வெப் மூலம் மின்னஞ்சல்களை ரெனே ஜோஷில்டா அனுப்பியுள்ளார். இதற்காக மறைக்கப்பட்ட இமெயில் முகவரிகளைப் பயன்படுத்தி (encrypted email addresses) தனது அடையாளம் வெளியில் தெரியாதவாறு அவர் பார்த்துக் கொண்டதாக ஆமதாபாத் போலீஸ் கூறியுள்ளது.

சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட மெய்நிகர் எண்களை வாங்கி நூற்றுக்கணக்கான இமெயில்களை அவர் அனுப்பியுள்ளதாக காவல்துறை கூறுகிறது.

குஜராத்தில் உள்ள நரேந்திர மோதி அரங்கத்துக்கு ஒரு போலி மின்னஞ்சலும் ஜெனீவா லிபரல் பள்ளிக்கு நான்கு இமெயில்களும் திவ்ய ஜோதி பள்ளிக்கு மூன்று இமெயில்களும் பிஜே மருத்துவக் கல்லூரிக்கு ஒரு இமெயிலும் ரெனே அனுப்பியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நரேந்திர மோதி ஸ்டேடியத்தின் நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்ட இமெயிலில், 'வெடிகுண்டு வெற்றிகரகமாக பொருத்தப்பட்டுவிட்டது. உங்களால் முடிந்தால் அரங்கத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும்' எனக் கூறப்பட்டிருந்தது.

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், நரேந்திர மோதி ஸ்டேடியம், குஜராத், வெடிகுண்டு மிரட்டல்கள்,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குஜராத்தில் அமைந்துள்ள நரேந்திர மோதி அரங்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டுள்ளன

சிக்கியது எப்படி?

கணினி மென்பொருளில் ரெனே ஜோஷில்டா நிபுணத்துவம் பெற்றவர். டிஜிட்டல் தடயங்களை அழிப்பதற்கு அவர் முயற்சி செய்துவந்த போதும் சிறு கவனக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள வீட்டில் வைத்து அவரைக் கைது செய்ததாக, ஆமதாபாத் குற்றப்பிரிவு காவல் இணை ஆணையர் சரத் சிங்கால் கூறியுள்ளார்.

போலி மின்னஞ்சல்களை அனுப்பவும் உண்மையான மின்னஞ்சல்களை அனுப்பவும் ஒரே கணினியை ரெனே ஜோஷில்டா பயன்படுத்தி வந்துள்ளார். "இதுவே அவர் பிடிபடுவதற்கு காரணமாக இருந்தது. அவரது ஐ.பி முகவரியை சில வாரங்கள் கண்காணித்த பிறகு கடந்த 21 ஆம் தேதி கைது செய்தோம்" என சரத் சிங்கால் கூறியுள்ளார்.

ரெனே ஜோஷில்டாவின் வீட்டில் இருந்து டிஜிட்டல் மற்றும் சில பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறியுள்ள சரத் சிங்கால், "இந்தக் கைது மூலம் மிகப் பெரிய திட்டத்தை முறியடித்துள்ளோம்" எனக் கூறுகிறார்.

தற்போது இந்த வழக்கில் மேலதிக விசாரணைக்காக பிற மாநில காவல்துறைகள், தங்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள ரேனே ஜோஷில்டா மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act), குற்றவியல் மிரட்டல் (criminal intimidation) மற்றும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியது ஆகிய பிரிவுகளின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, ஆமதாபாத் காவல்துறை கூறியுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு