பழங்குடியினரை ஏமாற்றும் பாமாயில் ஆலைகள் - பிபிசி புலனாய்வில் அதிர்ச்சி தகவல்

ஒராங் ரிம்பா

பட மூலாதாரம், NOPRI ISMI

    • எழுதியவர், முஹம்மது இர்ஹாம், அஸ்டுடெஸ்ட்ரா அஜெங்க்ராஸ்ட்ரி, அக்னியா அட்ஸ்கியா
    • பதவி, பிபிசி நியூஸ் இந்தோனீசியா

பல்பொருள் அங்காடிக்குச் சென்று ஏதாவது ஒரு பொருளை வாங்குங்கள். அதில் பாமாயில் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அது எங்கிருந்து வருகிறது என்று பார்க்க ஆரம்பித்தால், இறுதியில் இந்தோனீசியாவில் உள்ள ஒரு செம்பனை மரத்தை நீங்கள் காணலாம்.

ஆனால், அதை ஜான்சன் & ஜான்சன், கெல்லாக்ஸ் மற்றும் மொண்டெல்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நிறுவனங்கள், இந்தோனீசியாவின் பூர்வீக பழங்குடி சமூகங்களுக்கு பல மில்லியன் டாலர்கள் வருமான இழப்பை ஏற்படுத்துவது பிபிசியின் கூட்டு விசாரணையில் தெரியவந்துள்ளது.

வேட்டையாட வந்திருக்கும் மட் யாடியின் ஈட்டி தாக்குவதற்குத் தயாராக உள்ளது. ஆனால், பெரும்பாலான நாட்களைப் போலவே இன்றும் அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை.

"முன்பு நிறைய பன்றிகள், மான்கள், மற்றும் முள்ளெலிகள் இருந்தன. தற்போது அரிதாகவே உயிரினங்கள் வாழ்கின்றன" என்று அவர் கூறுகிறார்.

அவர் இந்தோனீசியாவின் கடைசி நாடோடி பழங்குடிச் சமூகமான ஒராங் ரிம்பா சமூகத்தைச் சேர்ந்தவர். பல தலைமுறைகளாக சுமத்ரா தீவில் உள்ள காட்டில் ரப்பர் அறுவடை, வேட்டையாடுதல் மற்றும் பழங்களை சேகரித்து அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

1990களில், ஒரு பாமாயில் நிறுவனம் பணம் மற்றும் வளர்ச்சிக்கான வாக்குறுதிகளுடன் டெபிங் டிங்கிற்கு வந்தது.

ஒராங் ரிம்பா சமூக மக்கள் நம்மிடம் கூறியதன்படி, அந்நிறுவனம் அந்தச் சமூகத்தினரின் மூதாதையர் நிலத்தின் மீதான கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளும்.

அதற்குப் பதிலாக அதில் பாதிக்கும் மேலான நிலங்கள் செம்பனைகள் நடப்பட்டு அவர்களுக்கே திருப்பி வழங்கப்படும். அதிலிருந்து கிடைக்கும் பழங்களை பழங்குடி சமூகத்தினர் அறுவடை செய்து, அந்நிறுவனத்திடம் விற்க வேண்டும். இதன் மூலம் இருதரப்பினருக்குமே லாபம் கிடைக்கும்.

25 ஆண்டுகளைக் கடந்து செம்பனைகள் உயரமாக வளர்ந்து விட்டன. அந்த நிறுவனத்தின் ஆலையில் பிரகாசமான ஆரஞ்சு வண்ணத்திலான பனம் பழங்களில் இருந்து, மில்லியன் டாலர் மதிப்பிலான சமையல் எண்ணைய் சலிம் குழுமத்திற்காக தயாரிக்கப்படுகிறது. Cadbury's chocolate, Pop-Tarts, Crunchy Nut Clusters போன்ற தயாரிப்புகளின் உற்பத்தியாளர்கள் அவர்களிடம் இருந்து எண்ணெய் வாங்குகின்றனர்.

ஆனால், பழங்குடிகளுக்கு வாக்குறுதியளித்த சிறுபகுதி நிலங்களை மாட் யாடி இதுவரை பெறவில்லை.

இன்று அவரது குடும்பம் ஒரு தோட்டத்திற்குள் தற்காலிக குடிசையில் வாழ்கிறது.

"எங்களுக்கு எதுவும் திருப்பித் தரவில்லை, எல்லாவற்றையும் அவர்கள் எடுத்துக் கொண்டனர்" என்கிறார் மாட் யாடி.

மற்றவர்களைப் போலவே, சிட்டி மனினாவும் செம்பனைகளை அறுவடை செய்யும் போது தரையில் விழும் பழங்களை சேகரித்து வாழ்ந்துவருகிறார்.

சிட்டி மனினா

பட மூலாதாரம், NOPRI ISMI

படக்குறிப்பு, சிட்டி மனினா

அவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால், தன் குடும்பத்திற்கு அன்றைய தினத்தில் உணவளிக்க தேவையான அரிசி மற்றும் காய்கறிகள் வாங்கும் அளவுக்கு பழம் கிடைக்கும்.

"இது போதுமானது, ஆனால் அது அதிகம் இல்லை" என்று சிட்டி மனினா கூறுகிறார்.

"இது ஓர் உதாரணம், இது எல்லா இடங்களிலும் நடக்கிறது, நிறுவனங்கள் பேராசை கொண்டவர்கள்” என்கிறார் பழங்குடியினர் சார்பாக செயல்பட்ட இந்தோனீசிய எம்.பி டேனியல் ஜோஹன்.

உலகின் மிக அதிகமான பல்லுயிர் காடுகளின் பரந்த பகுதிகள் செம்பனை பயிரிடுவதற்காக அழிக்கப்பட்டுள்ளன.

ஒரு காலத்தில் காடுகளால் மூடப்பட்டிருந்த இந்தோனீசிய தீவுகளான போர்னியோ மற்றும் சுமத்ராவில், தற்போது செம்பனை தோட்டங்கள் பல மைல்களுக்கு நீள்கின்றன.

உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெறுவது மற்றும் அரசாங்க நிதியுதவியைப் பெறுவதற்காக, இந்த நிறுவனங்கள் தங்கள் தோட்டத்தை பிளாஸ்மா எனப்படும் அடுக்குகளில் கிராம மக்களுடன் பகிர்ந்து கொள்வதாக வாக்குறுதி அளித்தன. நிறுவனங்கள் எந்தவொரு புதிய தோட்டத்திலும் ஐந்தில் ஒரு பகுதியை பழங்குடி சமூகங்களுக்கு வழங்குவது 2007ஆம் ஆண்டு சட்டரீதியாக கட்டாயமானது. இந்த வேலைத்திட்டம், அது செயல்படுத்தப்பட்ட இடங்களில் கிராமப்புற சமூகங்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க உதவியது. ஆனால் பிளாஸ்மா வழங்குவதற்கான வாக்குறுதிகளை நிறுவனங்கள் நிராகரித்ததாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தின் தீவிரம் தெரியாமலேயே இருந்தது. எனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக பிபிசி, புலனாய்வு இதழியல் அமைப்பான தி கெக்கோ ப்ராஜெக்ட் மற்றும் சுற்றுச்சூழல் செய்தித் தளமான மோங்காபே ஆகியவற்றை உள்ளடக்கிய குழு ஒன்றாக இணைந்து இதைக் கண்டறிய முயற்சித்தோம்.

பாமாயில்

அரசாங்க தரவுகளை பகுப்பாய்வு செய்கையில், போர்னியோவின் மத்திய கலிமந்தன் மாகாணத்தில் மட்டும் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய பிளாஸ்மாவை 100,000 ஹெக்டேருக்கு மேல் நிறுவனங்கள் வழங்கத் தவறியது தெரியவந்தது.

பாமாயிலில் இருந்து கிடைக்கும் லாபத்திற்கான பழைய புள்ளிவிவரங்களை வைத்து கணக்கிடுகையில், ஒவ்வோர் ஆண்டும் 90 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இழப்பை பழங்குடிச் சமூகம் சந்தித்துள்ளதாக மதிப்பிட்டுள்ளோம்.

இந்தோனீசியாவின் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் செம்பனை தோட்டங்களில் ஐந்தில் ஒரு பகுதி மட்டுமே இந்த மாகாணத்தில் உள்ளது. விவசாய அமைச்சக தரவுகளை பகுப்பாய்வு செய்தால், இதே நிலை பாமாயில் உற்பத்தி செய்யும் மற்ற மாகாணங்களிலும் இருப்பது தெரியவருகிறது. இதனால் இந்தோனீசியா முழுவதும் ஏற்படும் மொத்த இழப்புகள் ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களாக இருக்கலாம்.

பிரச்னையின் அளவு அதிகாரபூர்வ தரவுகளில் மட்டும் தெரியவில்லை.

வாக்குறுதிகளை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்ட அல்லது தோட்டங்களை சமூகங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்ற தவறிய நிறுவனங்களின் தரவுகளை எங்கள் குழு உருவாக்கியது.

கடந்த ஆறு ஆண்டுகளாக சராசரியாக ஒவ்வொரு மாதமும் பிளாஸ்மா தொடர்பான போராட்டங்கள் நடந்துள்ளதை அந்தத் தரவுகள் வெளிப்படுத்தின.

பாமாயில் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்கள்

2015ஆம் ஆண்டு ஓராங் ரிம்பா பழங்குடிகளுக்கு பிளாஸ்மா வழங்குதை உறுதியளிக்கும் விதமாக உள்ளூர் அரசியல்வாதிகளுடனான ஒப்பந்தத்தில் சலீம் குழுமம் கையெழுத்திட்டது.

ஆனால் 2017 ஜனவரிவரை எந்த நிலமும் வழங்கப்படவில்லை. இரு தசாப்தங்களாக காத்திருந்த பழங்குடியினர் விரக்தியடைந்தனர். இதையடுத்து, அவர்களில் சிலர் நிறுவனத்தின் தோட்டத்தை ஆக்கிரமித்தனர். ஆனால் நிறுவனம் அவர்களின் குடிசைகளை கிழித்தெறிந்தது. பின்னர், தோட்டத்திற்குள் இருந்த பாதுகாப்பு பகுதிக்கு தீ வைத்த கிராம மக்கள், நிறுவனத்தின் அலுவலக கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர். 40க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்து தாக்கியதாக கிராம மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். "கேள்வி கேட்கப்படாமல், நாங்கள் கொடூரமாக தாக்கப்பட்டோம்" என்று ஒருவர் கூறினார். நாசவேலையில் ஈடுபட்டதாக ஏழு பேருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இது குறித்த எங்களின் கேள்விக்கு இந்தோனீசிஷியா காவல்துறை பதிலளிக்க மறுத்துவிட்டது.

செம்பனை தோட்டம்

பட மூலாதாரம், NOPRI ISMI

"அவர்கள் எழுப்பிய அனைத்து எதிர்ப்புகள் மற்றும் சில சமயங்களில் செய்த உயிர் தியாகத்திற்கு இன்னும் எந்தத் தீர்வும் இல்லை. இதற்கு அமைப்பு தோல்வியடைந்து கொண்டிருக்கிறது என்று பொருள்" என ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் டெபிங் டிங்கியை பார்வையிட்ட டேனியல் ஜோஹன் கூறினார்.

அந்தப் போராட்டத்திற்குப் பிறகு, ஒராங் ரிம்பா பழங்குடியினரின் நிலத்தை திருப்பித் தருமாறு சலீம் குழுமத்தை நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியது. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் பழங்குடியினர் காத்திருக்கிறார்கள்.

சலீம் குழுமமும், தோட்டத்தைக் கட்டுப்படுத்தும் அதன் துணை நிறுவனமும் இது குறித்து பதிலளிக்க மறுத்துவிட்டன.

வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாக புகார் எழும்போது, அரசாங்கம் பெரும்பாலும் பேச்சுவார்த்தையையே நம்பியிருக்கிறது. ஆனால் ஓர் ஆய்வில் வெறும் 14 சதவிகித பேச்சுவார்த்தைகள் மட்டுமே ஒப்பந்தத்தில் முடிவதாக தெரிய வந்திருக்கிறது. இந்தோனீசியாவின் மிகப்பெரிய பாமாயில் உற்பத்தி செய்யும் மாகாணமான ரியாவில் உள்ள ஒரு தோட்ட அலுவலகத்தின் தலைவர் சம்சுல் கமர், கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் பிளாஸ்மாவைப் பற்றி ஒரு புதிய புகார் வருவதாகவும், அவருடைய கண்காணிப்பில் உள்ள 77 நிறுவனங்களில் ஒரு சில மட்டுமே போதுமான நிலங்களை வழங்குவதாகவும் கூறுகிறார். பெரும்பாலான பெரிய நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்கள் தங்கள் விநியோகச் சங்கிலிகளில் இருந்து சுரண்டலை அகற்றுவதாக உறுதியளித்துள்ளன.

செம்பனை தோட்டம்

பட மூலாதாரம், NOPRI ISMI

ஆனால், பிளாஸ்மா வழங்கவில்லை அல்லது பிளாஸ்மா லாபம் வழங்கவில்லை என்று குற்றம்சாட்டப்படும் உற்பத்தியாளர்களிடமிருந்து Colgate-Palmolive மற்றும் Reckitt உள்ளிட்ட 13 பெரிய நிறுவனங்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக பாமாயில் வாங்கியுள்ளதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

ஜான்சன் & ஜான்சன் மற்றும் கெல்லாக் ஆகிய இரு நிறுவனங்களும் ஓராங் ரிம்பா நிலத்தில் தோட்டம் வைத்திருக்கும் சலீம் குழுமத்திடமிருந்து பாமாயில் வாங்குகிறார்கள்.

எங்கள் விசாரணைக்கு பதிலளிக்கும் விதமாக, தங்களுக்கு எண்ணெய் வழங்குபவர்கள் சட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நிறுவனங்கள் கூறின. ஆனால் பிளாஸ்மா விதிமுறைகளுக்கு ஒத்துழைக்கத் தவறியதற்காக வெளியேற்றப்பட்ட பல நிறுவனங்களுடன் விநியோக தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தோம்.

ஜான்சன் & ஜான்சன் மற்றும் கெல்லாக் மற்றும் மொண்டெல்ஸ் ஆகிய அனைத்து நிறுவனங்களும் போர்னியோவில் உள்ள ஒரு தோட்டத்தில் இருந்து பாமாயிலை வாங்கிவந்தன. அது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அதன் சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றத் தவறியதற்காக கடந்த பிப்ரவரியில் தற்காலிகமாக மூடப்பட்டது.

பிளாஸ்மா வழக்கில் அரசாங்கம் செயல்படுவதற்கான ஓர் அரிய உதாரணமாக அரசியல்வாதி ஜெய சமய மோனோங், தோட்டத்திலிருந்து வெளியேறும் லாரிகளை தடுத்து நிறுத்த காவல்துறையை குவித்தார்.

"எந்த உறுதியான நடவடிக்கையும் இல்லை என்றால், அவர்கள் அதை புறக்கணிக்க முடியும் என்று நினைக்கிறார்கள்" என்று ஜெய சமய மோனோங் கூறினார். இந்தக் குற்றச்சாட்டுகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், தங்கள் புகார் செயல்முறையைத் தொடங்கிவிட்டதாகவும் ஜான்சன் & ஜான்சன் கூறியது.

குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாகவும், தங்களுக்கு பொருள் வழங்குபவர்களுடன் ஒருங்கிணைத்து அடுத்த கட்டத்தை தீர்மானிப்போம் என்றும் கெல்லாக் கூறியது.

இந்தச் சிக்கலை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கும், எதிர்காலத்தில் இதை எப்படித் தீர்க்கலாம் என்றும் நிபுணர்களைத் தொடர்பு கொண்டதாக மொண்டெல்ஸ் கூறியுள்ளது.

தங்களுக்கு எண்ணெய் வழங்கும் நிறுவனங்கள் போதுமான பிளாஸ்மாவை வழங்குவதை சரிபார்க்க ஒரு செயல்முறையை உருவாக்க உள்ளதாக Colgate-Palmolive நிறுவனம் கூறியது. அரை மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் பரந்த தோட்டங்களைக் கொண்டுள்ள இந்தோனீசியாவின் மிகப்பெரிய பாமாயில் உற்பத்தியாளரான கோல்டன் அக்ரி-ரிசோர்சஸ், பிளாஸ்மா வழங்குவதற்கான சட்டபூர்வ கடமைகளை நிறைவேற்றவில்லை என்று ஒப்புக்கொள்கிறது. அவ்வாறு செய்வதில் உறுதியாக இருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியது. ஆனால் அதற்கான வேலைகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன.

செம்பனை தோட்டம்

பட மூலாதாரம், NOPRI ISMI

உள்ளூர் அரசியல்வாதியால் மூடப்பட்ட போர்னியோவில் உள்ள தங்கள் துணை நிறுவனத்தில் அடுத்த ஆண்டு பிளாஸ்மா வழங்குவதாக அவர்கள் நம்புகிறார்கள்.

"நான் இனி எந்த சாக்குப்போக்குகளையும் கேட்க விரும்பவில்லை, ஏனென்றால் இது மிக எளிமையானது, பிளாஸ்மா என்பது பிரதான தோட்டத்துடன் இணைந்து உருவாக்கப்பட வேண்டும். பிரதான தோட்டம் உள்ளது ஆனால் பிளாஸ்மா தோட்டம் ஏன் இல்லை?" என்கிறார் போர்னியோவைச் சேர்ந்த அரசியல்வாதியான ஜெயா.

உள்நாட்டு விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்ளூர் விநியோகத்தைப் பாதுகாக்கவும் கடந்த ஏப்ரல் மாதத்தில் பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனீசியா தடை விதித்து, பின்னர் நிலைமை சீரானதும் தடையை நீக்கியது.

பாமாயில் உலகளாவிய விலை உச்சத்தை எட்டியதால், இந்த ஆண்டு அவர்களின் லாபம் உயர்ந்துள்ளது.

இந்தோனீசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ஏற்கனவே பாமாயில் பில்லியனர்கள் உள்ளனர். இந்தோனீசியாவுக்கான ஃபோர்ப்ஸின் பணக்காரப் பட்டியலில் கோல்டன் அக்ரி-ரிசோர்ஸைக் கட்டுப்படுத்தும் விட்ஜாஜா குடும்பம் இரண்டாவது இடத்திலும், சலீம் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அந்தோனி சலீம் மூன்றாவது இடத்திலும் உள்ளார்.

ஆனால் ஒராங் ரிம்பா பழங்குடியினரின் காத்திருப்பு தொடர்கிறது.

நிலம் திரும்ப வேண்டும்

பட மூலாதாரம், NOPRI ISMI

பனை மரங்களின் கீழே அமர்ந்து, மூதாட்டி சிலின் நாட்டுப்புறப் பாடலைப் பாடுகிறார். அந்தப் பாடல் வரிகளுக்கு, நம் பேரக்குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் நம் இதயம் நிறைந்திருக்கும் என்று அர்த்தம் என அவர் விளக்கினார்.

"எங்கள் பேரக்குழந்தைகள் உண்மையான வாழ்க்கையை மீண்டும் வாழ, எங்கள் மூதாதையர் நிலம் எங்களுக்குத் திரும்ப வேண்டும், அதுதான் எங்களுக்கு வேண்டியதெல்லாம்” என்கிறார் மூதாட்டி சிலின்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: