குடும்ப தகராறால் மனைவி, குழந்தைகள் மீது தாக்குதல்; மகள், மகன் உயிரிழப்பு - இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

20-2-25 இன்றைய நாளிதழ் மற்றும் செய்தி ஊடக இணையங்களில் வெளியான முக்கிய செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

சேலம் கெங்கவல்லி அருகே குடும்பத் தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுநர் அவருடைய மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை தாக்கியதில் மூத்த மகள், இளைய மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று இந்து தமிழ்திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அசெய்தியில், "சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லி அருகே வசித்து வருபவர் அசோக்குமார். அவருடைய மனைவி தவமணி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக அசோக்குமார் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை செவ்வாய்கிழமை தாக்கியதாக" அச்செய்தி கூறுகிறது.

அப்போது பலத்த காயம் அடைந்த அசோக்குமார் - தவமணி தம்பதியினரின் மூத்த மகளும் இளைய மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட தவமணி மற்றும் ஒரு குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

மூணாறு அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: தமிழக மாணவர்கள் மூன்று பேர் மரணம்

கேரள மாநிலம் மூணாறு அருகே புதன்கிழமை தனியார் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்ததில் நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி இளநிலை கணினி அறிவியல் துறை மாணவ, மாணவிகள் 39 பேர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் சுற்றுலா சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மாட்டுப்பட்டி அணையில் இருந்து எக்கோ முனைப்பகுதிக்கு சென்றபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வெனிகா, ஆதிகா என்ற இரண்டு மாணவிகள் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த மாணவர்கள் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவ்வாறு கொண்டு செல்லப்படும் வழியில் சுதன் என்ற மாணவர் உயிரிழந்தார்.

விபத்துக்கான காரணம் குறித்து மூணாறு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூணாறு சாலை விபத்தில் சிக்கி மூன்று தமிழ் மாணவர்கள் மரணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இந்தி திணிப்புக்கு எதிராக அயப்பாக்கம் பெண்கள் கோலமிட்டு போராட்டம்

புதன்கிழமை காலை அன்று சென்னை அயப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு ஹவுஸிங் போர்டில் வசிக்கும் பெண்கள் அனைவரும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோலமிட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

அயப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் வீட்டு வாசல்கள் முன்பு இந்தி திணிப்புக்கு எதிரான முழக்கங்கள் அடங்கிய கோலங்களை இட்டனர்.

"சமீபத்தில், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாடு கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,000 கோடியை வழங்க முடியும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். அவரின் அந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் மாநிலம் முழுவதும் எழுந்த நிலையில் மக்கள் இவ்வாறு கோலமிட்டு தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

பிரசிடென்சி கல்லூரி மாணவர்களும் தங்களின் கல்லூரி வளாகத்துக்கு வெளியே இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்" என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தி திணிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம், அயம்பாக்கம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சென்னை அயப்பாக்கத்தில் மக்கள் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம்

டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு; இன்று பதவி ஏற்பு

டெல்லியில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பிரதமர் மோதி முன்னிலையில் நடைபெறும் பிரமாண்ட விழாவில், அவர் இன்று (வியாழக்கிழமை) பதவி ஏற்கிறார் என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தலில் 48 தொகுதிகளை கைப்பற்றிய பா.ஜனதா, 27 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லி மாநில ஆட்சியை பிடித்தது. புதிய முதலமைச்சர் குறித்து நேற்று முன்தினமும் கட்சி மேலிடத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதனிடையே, புதிய அரசு பதவி ஏற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும், டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்து வந்தது.

மேலும், "கட்சி தலைமை முடிவின்படி, மேலிட பார்வையாளர்களான ரவிசங்கர் பிரசாத், ஓ.பி.தங்கர் ஆகியோர் முன்னிலையில், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் 48 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா உள்ளிட்ட சில மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் டெல்லி மாநில முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டார். 50 வயதாகும் அவர், ஷாலிமார் பார்க் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பந்தனா குமாரியை சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இன்று பகல் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.

டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா புதிய முதலமைச்சருக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார். ரேகா குப்தா டெல்லியை ஆள இருக்கும் நான்காவது பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோர் இந்த பொறுப்புகளை வகித்தனர்" என்றும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

ரேகா குப்தா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, டெல்லியின் நான்காவது பெண் முதலமைச்சராக ரேகா குப்தா இன்று பதவி ஏற்க உள்ளார்

நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சந்தேக நபர் சுட்டுக்கொலை

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சந்தேக நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ளது வீரகேசரி இணையம்.

நீதியமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் என்றும் இவர்கள் வாய்ச்சொல் வீரர்கள் மாத்திரமே என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

"நாட்டின் தேசிய பாதுகாப்பு தற்போது மலினப்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் நடுவீதியில் மனித படுகொலைகள் இடம்பெறுகிறது. இலங்கையில் முதன்முறையாக நீதிமன்றத்துக்குள் நீதிபதி முன்னிலையில் குற்றவாளி கூண்டில் உள்ள சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நீதியமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் கடந்த காலங்களை பற்றியும், தேசிய பாதுகாப்பு பற்றியும் மார்பு தட்டி பேசுவார்கள். தற்போது நிலைமை எவ்வாறு உள்ளது. இவ்விருவரும் பதவி விலக வேண்டும்.

தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உறுப்பினர்கள் வாய்ச்சொல் வீரர்களாகவே உள்ளார்கள். எந்த பிரச்னைகளுக்கும் இவர்களால் தீர்வு முன்வைக்க முடியாது. 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்துக்கு சவால்மிக்கதாக அமையும்" என கூறியதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)