இந்தியாவில் தன்பாலின திருமணம் சட்டபூர்வமாகுமா? உச்சநீதிமன்றம் கூறுவது என்ன?

ஒரு பாலின திருமணம் சட்டபூர்வமாகுமா?

பட மூலாதாரம், ANKITA AND KAVITA

படக்குறிப்பு, 17 ஆண்டுகளாக ஒன்றாக வாழும் ஒரே பாலின தம்பதி அங்கிதா கன்னா - டாக்டர் கவிதா அரோரா
    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

ஒரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்கக் கோரும் பல மனுக்கள் மீதான இறுதி வாதங்களை இன்று இந்தியாவின் உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. விசாரணை "பொது நலன் கருதி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்" என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

தன் பாலினத் தம்பதிகள் மற்றும் LGBTQ+ ஆர்வலர்கள் தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். அரசும் மதத் தலைவர்களும் ஒரே பாலின சேர்க்கையை கடுமையாக எதிர்ப்பதால், வாத-பிரதிவாதம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருபவர்களில் டாக்டர் கவிதா அரோரா மற்றும் அங்கிதா கன்னாவும் அடங்குவார்கள். இந்த தன்பாலின தம்பதி திருமணம் செய்து கொள்ள பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள்.

கவிதாவுக்கும் அங்கிதாவுக்கும் முதல் பார்வையில் காதல் ஏற்படவில்லை. இவர்கள் முதலில் உடன் பணிபுரிபவர்களாகவும், பின்னர் நண்பர்களாகவும், பின்னர் காதலர்களாகவும் மாறினார்கள்.

அவர்களது குடும்பங்களும் நண்பர்களும் அவர்களது உறவை உடனடியாக ஏற்றுக்கொண்டனர். ஆனால் தாங்கள் சந்தித்து 17 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும், ஒன்றாக வாழத் தொடங்கி ஒரு தசாப்தத்திற்கு மேலாகியும் தங்களால் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை என்று இந்த மனநல நிபுணர்கள் கூறினர்.

இந்தியாவில் ஒரே பாலின திருமணத்தை அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கிட்டத்தட்ட ஒன்றரை டஜன் மனுக்களில் இவர்களுடைய மனுவும் அடங்கும். ஒன்றாகச்சேர்ந்து குழந்தைகளை வளர்க்கும் தம்பதிகளால் குறைந்தது மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இதை "முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை" என்று கூறி, அதை தீர்ப்பதற்காக, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசனப்பிரிவை அமைத்தார்.

ஒரு பாலின திருமணம் சட்டபூர்வமாகுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் லட்சக்கணக்கான LGBTQ+ மக்கள் வசிக்கின்றனர்

லட்சக்கணக்கான LGBTQ+ மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில் இந்த விவாதம் முக்கியமானது. 2012 இல், இந்திய அரசு அவர்களின் மக்கள்தொகையை 25 லட்சம் என்று கணக்கிட்டிருந்தது. ஆனால் மொத்த மக்கள்தொகையில் குறைந்தது 10% அதாவது 1 கோடியே 35 லட்சத்திற்கும் அதிகமான இத்தகைய மக்கள் இருப்பதாக, உலகளாவிய மதிப்பீடுகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.

பல ஆண்டுகளாக ஓரினச்சேர்க்கையை ஏற்றுக்கொள்வது இந்தியாவிலும் வளர்ந்துள்ளது. 2020 இல் நடத்தப்பட்ட பியூ அமைப்பின் கணக்கெடுப்பில் 37% பேர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். நாட்டில் முதல் முறையாக இந்தக்கேள்வி கேட்கப்பட்ட 2014 இல் 15 சதவிகிதமாக இது இருந்தது. அதாவது 2020 ஆம் ஆண்டிற்குள் 22% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் மாற்றம் இருக்கும்போதிலும், பாலுறவு மற்றும் பாலின ஈர்ப்பு மீதான அணுகுமுறைகள் பெரும்பாலும் பழமைவாதமாகவே இருக்கின்றன. மேலும் பெரும்பாலான LGBTQ+ மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கூட தங்களை வெளிக்காட்டிக்கொள்ள பயப்படுவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் ஒரே பாலின தம்பதிகள் மீதான தாக்குதல்கள் பற்றி அவ்வப்போது தலைப்புச் செய்திகளில் பார்க்கமுடிகிறது.

வரவிருக்கும் நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஒரு சாதகமான முடிவு, ஒரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்கும் உலகின் 35 வது நாடாக இந்தியாவை ஆக்கும். சமூகத்தில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும். தத்தெடுப்பு, விவாகரத்து மற்றும் வாரிசுரிமை போன்ற பல சட்டங்களும் மறுசீரமைக்கப்பட வேண்டியிருக்கும்.

அங்கிதாவும் கவிதாவும் அது நடக்கும் என்று நம்புவதாகக்கூறுகிறார்கள். ஏனென்றால் அது நடந்தால் அவர்களின் திருமணத்திற்கு வழிபிறக்கும்.

அங்கிதா ஒரு மனநல சிகிச்சையாளர். கவிதா ஒரு மனநல மருத்துவர். இருவரும் சேர்ந்து மனநலப் பிரச்சனைகள் மற்றும் கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்காக செயல்படும் ஒரு கிளினிக்கை நடத்துகிறார்கள்.

2020 செப்டம்பர் 23 ஆம் தேதி அவர்கள் திருமணம் செய்து கொள்ள விண்ணப்பித்தனர்.

"திருமணத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்த கட்டத்தில் எங்கள் உறவு இருந்தது. மேலும், கூட்டு வங்கிக் கணக்கு அல்லது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பெறுவது, ஒன்றாகச் சேர்ந்து ஒரு வீட்டை வாங்குவது அல்லது உயில் எழுதுவது போன்ற ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்றாலும் ஒவ்வொரு முறையும் அமைப்புமுறையை எதிர்த்துப் போராடி நாங்கள் சோர்வடைந்தோம்,”என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

"அங்கிதாவின் தாயாருக்கு அவசர அறுவை சிகிச்சை தேவைப்பட்டபோது, ஒரு ’வினையூக்கி’யாக ஒரு சம்பவம் நடந்தது. அவருடன் மருத்துவமனைக்குச்சென்ற கவிதாவால் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட முடியவில்லை. ”நான் அவருடைய மகள் என்றும் சொல்ல முடியவில்லை. மருமகள் என்றும் சொல்ல முடியவில்லை," என்று கவிதா குறிப்பிட்டார்.

ஒரு பாலின திருமணம் சட்டபூர்வமாகுமா?

பட மூலாதாரம், ANKITA AND KAVITA

படக்குறிப்பு, அங்கிதா மற்றும் அவரது பெற்றோருடன் கவிதா

ஆனால் செப்டம்பர் 30 ஆம் தேதி அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மாஜிஸ்ட்ரேட் அலுவலகத்திற்குச் சென்று, தங்கள் திருமணத்தை பதிவு செய்ய முயன்றபோது, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஒரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்கக் கோரியும், தங்கள் திருமணத்தை பதிவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரியும் இவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதேபோன்ற பல மனுக்களை ஒரே பாலின தம்பதிகள் உச்ச நீதிமன்றத்திலும், இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றங்களிலும் தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து உச்ச நீதிமன்றம் ஜனவரி மாதத்தில் இந்த மனுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து, இந்த "முக்கியமான" பிரச்சினையை விவாதிப்பதாகக் கூறியது.

மூத்த வழக்கறிஞர்கள் மேனகா குருசுவாமி மற்றும் அருந்ததி கட்ஜூ மூலம் அங்கிதா மற்றும் கவிதா தாக்கல் செய்த மனுவில், "நாங்கள் விரும்புவது தனித்து விடப்படுவதற்கான உரிமை அல்ல. மாறாக சமமாக ஒப்புக்கொள்ளப்படுவதற்கான உரிமையை" என்று கூறியுள்ளனர்.

”இந்திய அரசியலமைப்பு எல்லா குடிமக்களுக்கும் தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளும் உரிமையை வழங்குகிறது மற்றும் பாலியல் நோக்குநிலையின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை தடை செய்கிறது. ’அரசியலமைப்பு அறநெறி, சமூக ஒழுக்கத்திற்கு மேலானது’ என்பதால் தங்களின் மனு அனுமதிக்கப்பட வேண்டும்,” என்று இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

"நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன், நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்," என்று நீதிமன்றத்தில் ஆறு ஓரேபாலின வழக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவைச்சேர்ந்த வழக்கறிஞர் மேனகா குருசாமி, பிபிசியிடம் கூறினார்.

ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக மாற்றிய 2018 டிசம்பர் தீர்ப்பை ஆய்வு செய்ததில் இருந்து அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

"என்னை மிகவும் ஈர்த்த விஷயம் என்னவென்றால், துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை நீதிமன்றம் வலியுறுத்தியது. அது என் நம்பிக்கையை அதிகரித்துள்ளது," என்று அவர் கூறினார்.

காலனித்துவ காலச் சட்டத்தை ஒதுக்கிவைத்த நீதிபதிகள், "எல்ஜிபிடி மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் அவர்கள் சந்தித்த அவமானம் மற்றும் ஒதுக்கிவைப்புக்காக வரலாறு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றும் கூறினார்கள்.

ஆனால் தன்பாலின திருமணத்திற்கு அரசு மற்றும் மதத் தலைவர்களிடமிருந்து வரும் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டுபார்க்கும்போது மேனகா குருசாமி கடுமையான போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஒரு பாலின திருமணம் சட்டபூர்வமாகுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாலுறவு, பாலியல் நோக்குநிலை மீதான அணுகுமுறைகள் இந்தியாவில் பெரும்பாலும் பழமைவாதமாகவே உள்ளன

இந்த மனுக்களை நிராகரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ஒரு ஆண்- பெண் இடையில் மட்டுமே திருமணம் நடைபெற முடியும் என்று அது கூறியுள்ளது.

"ஒரே பாலினத்தவர்கள் தம்பதியாகவும், பாலியல் உறவுகளுக்காகவும் சேர்ந்து வாழ்வதை கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் என்ற இந்திய குடும்ப அமைப்பின் கருத்துடன் ஒப்பிட முடியாது" என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சட்ட அமைச்சகம் வாதிட்டது.

"மத மற்றும் சமூக விதிமுறைகள் ஆழமாகப் பதிந்துள்ள நாட்டின் முழு சட்டக்கொள்கையையும் மாற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தை கோர முடியாது என்றும் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் விவாதத்திற்கு விடவேண்டும் என்றும்,” அது கூறியது.

ஒரு அரிய ஒற்றுமை நிகழ்வாக, இந்து, முஸ்லிம், சமணம், சீக்கியம் மற்றும் கிரிஸ்துவம் போன்ற இந்தியாவின் எல்லா முக்கிய மதங்களின் தலைவர்களும் ஒரே பாலின சேர்க்கையை எதிர்த்துள்ளனர். ”திருமணம் என்பது வம்சவிருத்திக்கானது, பொழுதுபோக்கிற்கானது அல்ல" என்று அவர்களில் பலர் வலியுறுத்துகின்றனர்.

கடந்த மாதம் 21 ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளும் இந்த விஷயத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஒரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்குவது "குழந்தைகள், குடும்பம் மற்றும் சமுதாயத்தின் மீது பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று அவர்கள் பொதுவெளியில் வெளியிட்ட கடிதத்தில் கூறினார்கள்.

ஒரு பாலின திருமணம் சட்டபூர்வமாகுமா?

பட மூலாதாரம், ANKITA AND KAVITA

படக்குறிப்பு, அங்கிதா - கவிதா ஒரு பாலின தம்பதியர் கவிதாவின் தந்தையுடன் வசிக்கின்றனர்.

தன்பாலின திருமணத்தை அனுமதிப்பது இந்தியாவில் எச்.ஐ.வி-எய்ட்ஸ் நிகழ்வை அதிகரிக்கக்கூடும் என்றும், ’ஒரே பாலின தம்பதிகளால் வளர்க்கப்படும் குழந்தைகளின் உளவியல் மற்றும் உணர்வுபூர்வ வளர்ச்சியை எதிர்மறையாக பாதிக்கலாம்’ என்றும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

ஆனால் 7,000 க்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டின் முன்னணி மனநல அமைப்பான இந்திய மனநல சங்கம் (IPS), கடந்த வார இறுதியில் ஒரு அறிக்கையை வெளியிட்டபோது மனுதாரர்களுக்கு பெரும் ஊக்கம் கிடைத்தது.

"ஓரினச்சேர்க்கை ஒரு நோய் அல்ல," என்று ஐபிஎஸ் ஒரு அறிக்கையில் கூறியது. LGBTQ+ நபர்களுக்கு எதிரான பாகுபாடு ’அவர்களில் மனநலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்’ என்றும் அது தெரிவித்தது.

ஐபிஎஸ் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் 2018 ஆம் ஆண்டில், ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக ஆக்குவதை ஆதரிக்கும் இதேபோன்ற அறிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டது. உச்ச நீதிமன்றம் அதை தனது தீர்ப்பிலும் குறிப்பிட்டது.

நீதிமன்றத்தில் என்ன நடக்கும் என்று அங்கிதா மற்றும் கவிதாவிடம் கேட்டேன்.

"அரசியலமைப்பு, சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மைக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். நீதித்துறை மற்றும் அரசியலமைப்பு மீதான எங்கள் நம்பிக்கை அசைக்க முடியாதது" என்று அங்கிதா கூறினார்.

"எதிர்ப்பு இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். இது மிகவும் எளிதான ஒன்று அல்ல என்றும் தெரியும். ஆனால் நாங்கள் இந்தப் பயணத்தைத் தேர்ந்தெடுத்தோம். இது எங்களை எங்கு அழைத்துச் செல்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்,"என்று கவிதா குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: