தோனி விரித்த வலையில் வீழ்ந்த கோலி: தும்பை விட்டு வாலைப் பிடித்த சிஎஸ்கே - எளிதான வெற்றி இழுபறியானது ஏன்?

பட மூலாதாரம், BCCI/IPL
ஐ.பி.எல். தொடரில் பேட்டிங் சொர்க்கபுரியான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மீண்டும் ஒரு ரோலர் கோஸ்டர் மேட்ச் நடந்து முடிந்தது. இரு அணிகளுமே 200 ரன்களுக்கு மேல் குவித்த இந்த போட்டிகளில் கடந்த முறை எதிரணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை கட்டுப்படுத்த முடியால் தோல்வியைத் தழுவிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இம்முறை சேஸிங்கில் கோட்டை விட்டுள்ளது.
227 ரன்களைத் துரத்திய அந்த அணி, கேப்டன் டுப்ளெஸ்ஸி - மேக்ஸ்வெல் ஜோடி களத்தில் இருந்த போது எளிதில் வெற்றிபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க அவர்கள் அவுட்டான பிறகு தடம் புரண்டது.
பெங்களூரு மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 250 ரன்களைக் குவித்தாலும் கூட வெற்றி உறுதியில்லை என்பதை நேற்றைய ஆட்டமும் நிரூபித்தது. நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்த தவறுகளே, எளிதாக பெற்றிருக்க வேண்டிய வெற்றியை கடினமாக்கிவிட்டது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த கேப்டன் டுப்ளெஸ்ஸி - மேக்ஸ்வெல் ஆகிய இருவருக்கும் சில கேட்ச்களை சென்னை வீரர்கள் கோட்டை விட்டது ஒரு கட்டத்தில் சென்னை அணியின் வெற்றியையே கேள்விக்குறியாக்கிவிட்டது. பின்னர் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக கடைசியில் ஒருவழியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியைப் பதிவு செய்தது.
டெவோன் கான்வேயின் அதிரடி சரவெடி ஆட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு பிரதான காரணம் தொடக்க வீரர் டெவோன் கான்வேயின் அதிரடி ஆட்டம் தான். நடப்புத் தொடரில் சிறப்பாக தொடங்கி நல்ல பார்மில் இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கத்திலேயே நடையைக் கட்ட ரன் ரேட்டை டெவோன் கான்வே பார்த்துக் கொண்டார்.
இரண்டாவது ஓவரிலேயே ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிவிட்ட அவர், ஆட்டமிழக்கும் வரை அதிரடியை தொடர்ந்தார். எந்தவொரு கட்டத்திலும் அவர் நிதானம் காட்டவே இல்லை. 45 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 83 ரன்களைக் குவித்த கான்வே, சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் ஆட்டத்தின் 16-வது ஓவரில் ஹர்ஷல் படேல் வீசிய கிளீன் போல்டாகி ஏமாற்றம் தந்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
சி.எஸ்.கே.வுக்கு வந்ததும் பக்கா டி20 வீரராகிவிட்ட ரஹானே
டெஸ்ட் வீரர் என்று முத்திரை குத்தப்பட்டு சர்வதேச போட்டிகளில் இந்திய அணியில் இருந்தும், ஐ.பி.எல். தொடரில் மற்ற அணிகளாலும் புறக்கணிக்கப்பட்ட அஜிங்கியா ரஹானே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்த பிறகு நடப்புத் தொடரில் அசத்தி வருகிறார். ருதுராஜ் அவுட்டானதும் களம் கண்ட அவர், பேட்டிங்கிற்கு உகந்த ஆடுகளத்தில் முதல் பந்தில் இருந்தே மட்டையை சுழற்றினார்.
அவரது மட்டையில் இருந்து 3 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் பறந்தன. ரஹானேவா இது என்று ரசிகர்கள் ஆச்சர்யப்படும் வகையில் விஜய்குமார் வைஷாக் வீசிய வேகப்பந்தில் பிரமாண்ட சிக்சர் ஒன்றையும் அவர் விளாசினார். 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்த ரஹானே ஹசரங்கா பந்துவீச்சில் போல்டானார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதேபோன்று தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இருபது ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் 4-வது வரிசை பேட்ஸ்மேனுக்கு ரஹானே பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளது.
பீல்டிங்கின் போதும், எல்லைக்கோடு அருகே நின்றிருந்த அவர், மேக்ஸ்வெல் அடித்த ஒரு சிக்சரை அபாரமாக துள்ளிக் குதித்து ஒற்றைக் கையால் பிடித்த போது, எல்லைக்கோட்டை கடந்து செல்வதை உணர்ந்து கொண்டு பந்தை உள்ளே எறிந்துவிட்டார். பந்து சிக்ராகிவிடும் என்று எதிர்பார்த்திருந்த டுப்ளெஸ்ஸியும் மேக்ஸ்வெல்லும் ஒரு ரன் மட்டுமே எடுத்தனர். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 ரன்களை ரஹானே சேமித்துக் கொடுத்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
கழற்றிவிட்ட ஆர்.சி.பி. அணியைக் கதற விடும் ஷிவம் துபே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரஹானே 'கிளாசிக்' என்றால் ஷிவம் துபே தடாலடி ஆட்டக்காரர். தொடர்ச்சியாக நிலையான ஆட்டத்தை கொடுக்காவிட்டாலும் கூட, தன்னை கழற்றி விட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி என்றால் மனிதர் எப்படி இருந்தாலும் பார்முக்கு வந்துவிடுகிறார்.
நேற்றைய ஆட்டத்தில் 5 சிக்சர்கள் 2 பவுண்டரிகளை விளாசிய அவர் 25 பந்துகளில் 52 ரன்களை குவித்து அசத்தினார். அதில் ஒரு சிக்சர் 111 மீட்டர் தூரம் பறந்து சென்று பிரமாண்டமான ஒன்றாக அமைந்தது.
முன்னாள் அணியான பெங்களூருவுக்கு எதிராக ஆடிய போட்டிகளில் 98 பந்துகளை சந்தித்துள்ள ஷிவம் துபே 181 ரன்களை விளாசியுள்ளார். அவற்றில் 14 சிக்சர்கள் அடங்கும். மற்ற அணிகளுக்கு எதிராக ஷிவம் துபேவின் சராசரி 20.29 ரன் என்றால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக அவரது சராசரி 96.50-ஆக மலைக்க வைக்கிறது. அதுபோலவே, மற்ற அணிகளுக்கு எதிராக அவரது ஸ்ட்ரைக் ரேட்124, பெங்களூருவுக்கு எதிராக 183.80 என்கிறது புள்ளிவிவரம்.

பட மூலாதாரம், BCCI/IPL
ஷிவம் துபே ஆட்டமிழந்ததும் வெகுவாக ஆர்ப்பரித்து விராட் கோலி அதனை கொண்டாடிய விதமே துபே விக்கெட்டை ஆர்.சி.பி அணி எந்த அளவுக்கு எதிர்பார்த்திருந்தது என்பதை வெளிக்காட்டியது. கோலியின் விதிகளை மீறிய இந்த ஆர்ப்பரிப்பு அவருக்கு தண்டனையை பெற்றுத் தந்துள்ளது. நேற்றைய ஆட்டத்திற்கான கோலியின் ஊதியத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தோனி விரித்த வலையில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்த கோலி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இமாலய இலக்கை நிர்ணயித்திருந்ததால் முதல் பந்தில் இருந்தே அடித்தாடும் முடிவுடன் கோலி வந்திருந்தார். முதல் பந்தையே கிரீசை விட்டு வெளியே சென்று பவுண்டரி அடித்த அவர், அடுத்த பந்தில் 2 ரன்களையும் சேகரித்தார்.
எல்லா பந்துகளையும் எல்லைக்கோட்டிற்கு விரட்ட, கோலி காட்டிய தீவிரத்தால் சென்னை அணி கேப்டன் தோனி "கவ் கார்னர்" திசையில் பீல்டரை நிறுத்தி மிட்விக்கெட் திசையில் காலியாக விட்டிருந்தார். முதல் ஓவரின் நான்காவது பந்தை அறிமுக வீரர் ஆகாஷ் சிங் நல்ல லெங்த்தில் வீசிய பந்தை கோலி மிட் விக்கெட் திசையில் விரட்டியடிக்க முயல, துரதிர்ஷ்டவசமாக எந்து எட்ஜாகி அவரது கால்காப்பில் பட்டு ஸ்டம்பில் விழுந்துவிட்டது. கோலி 6 ரன்களில் திருப்திப்பட வேண்டியதாயிற்று.

பட மூலாதாரம், BCCI/IPL
தோனி திட்டங்களை தவிடுபொடியாக்கிய டூப்ளெஸ்ஸி-மேக்ஸ்வெல் ஜோடி
ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட போதிலும் கேப்டன் டுப்ளெஸ்ஸியும், மேக்ஸ்வெல்லும் கொஞ்சமும் நிதானம் காட்டவே இல்லை. களத்தில் நிலைநிறுத்திக் கொண்டு விட்டு பின்னர் விளாசலாம் என்ற பார்முலா எல்லாம் அவர்களிடம் இல்லை. இருவருமே தொடக்கம் முதலே பவுண்டரியும், சிக்சருமாக விளாசத் தொடங்கிவிட்டனர்.
இருவரின் அதிரடியால் பெங்களூர் அணி 6 ஓவர் பவர் பிளே முடிவில் 75 ரன்களைத் திரட்டிவிட்டது. இந்த ஜோடி பத்தே ஓவர்களில் 126 ரன்களைக் குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மிரள வைத்துவிட்டது. இந்த ஜோடியின் ருத்ர தாண்டவத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஸ்கோர் 12-வது ஓவரிலேயே 141 ரன் என்ற நிலையை எட்டிவிட்டது.

பட மூலாதாரம், BCCI/IPL
பவர் பிளே முடிந்துவிட்டதா இல்லையா என்பதே தெரியாத வகையில் இருவரின் அதிரடியும் தொடர்ந்ததால், ஏழாவது ஓவரில் இருந்து சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு வந்து எதிரணியின் ரன் ரேட்டை கட்டுப்படுத்தும் தோனியின் திட்டம் பலிக்கவில்லை. ரவீந்திர ஜடேஜா, தீக்ஷனா, மோயீன் அலி என ஒருவரைக் கூட மேக்ஸ்வெல் - டுப்ளெஸ்ஸி ஜோடி விட்டுவைக்கவைல்லை.
டூப்ளெஸ்ஸி, மேக்ஸ்வெல் வீழ்ந்ததும் தடம் புரண்ட ஆர்.சி.பி.
டுப்ளெஸ்ஸி - மேக்ஸ்வெல் ஜோடி களத்தில் இருந்த வரையிலும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றிபெறத் தேவையான ரன் ரேட்டைக் காட்டிலும் அதிகமாகவே பராமரித்து வந்தது. ஒருவழியாக 13-வது ஓவரின் முதல் பந்தில் இந்த ஜோடி பிரிந்தது. தீக்ஷனா வீசிய பந்தை மேக்ஸ்வெல் சிக்சருக்கு தூக்கி அடிக்க, நேரே மேலே பறந்த பந்தை தோனி சிறிதும் பதற்றப்படாமல் அபாரமாக கேட்ச் செய்தார். 36 பந்துகளை மட்டுமே சந்தித்த மேக்ஸ்வெல் 3 பவுண்டரி, 8 சிக்சர்களை நொறுக்கி 76 ரன்களைக் குவித்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
மறுபுறம் தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய கேப்டன் டுப்ளெஸ்ஸியும், மொயீன் அலி வீசிய அடுத்த ஓவரில் 2 சிக்சர்களை விளாசிவிட்டு கடைசிப் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் தடம் புரண்டு விட்டது. தினேஷ் கார்த்திக், இம்பாக்ட் பிளேயராக உள்ளே வந்த சுயாஷ் பிரபுதேசாய் ஆகியோர் சற்று நேரம் அதிரடி காட்டினாலும் அது வெற்றிபெற போதுமானதாக இருக்கவில்லை.
எளிதான கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்ட சிஎஸ்கே
சென்னை அணி எளிதான கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டதே ஆட்டம் இவ்வளவு தூரம் இழுபறியாகக் காரணமாகிவிட்டது. கேப்டன் தோனியே கூட எளிதான கேட்சை தவறவிட்டார். அதுவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தண்ணி காட்டிய ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் டுப்ளெஸ்ஸி கொடுத்த எளிதான கேட்சை தோனி கோட்டை விட்டார். அதனால் கிடைத்த பவுண்டரியுடன் ரன் கணக்கைத் தொடங்கி டுப்ளெஸ்ஸி பின்னர் வெளுத்து வாங்கிவிட்டார். 53 ரன்களில் அவர் மீண்டும் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தீக்ஷனா விட்டுவிட்டார்.
இதேபோல், சென்னைக்கு கிலி கொடுத்த மற்றொரு வீரரான மேக்ஸ்வெல் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை தீக்ஷனா பிடிக்கத் தவறினார். கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய இருவருமே பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு கட்டத்தில் தோல்வி பயத்தை காட்டி விட்டனர். சிறந்த பீல்டர் என்று பெயரெடுத்த ருதுராஜ் கெய்க்வாட்டும் கூட, கடைசியில் இக்கட்டான கட்டத்தில் அச்சுறுத்திக் கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் கொடுத்த எளிதான கேட்சை தவறவிட்டார். இதேபோல், தொடக்கத்தில் மஹிபால் லோம்ராருக்கும் ஒரு கேட்சை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தவறவிட்டது.
பீல்டிங்கில் செய்த தவறுகளால் எளிதாக ஜெயித்திருக்க வேண்டிய மேட்சை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியின் விளிம்பு வரை சென்று பின்னர் ஒருவழியாக மீண்டு வந்து வாகை சூடியிருக்கிறது.

பட மூலாதாரம், BCCI/IPL
கேப்டன் கூல் நிதானம் இழந்தாரா? உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளால் தடுமாற்றம்
கேப்டன் கூல் என்று பெயரெடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி உணர்ச்சிவசப்பட்டதையும் நேற்றைய ஆட்டத்தில் பார்க்க முடிந்தது. டுப்ளெஸ்ஸி - மேக்ஸ்வெல் ஜோடி தோல்வி பயத்தை காட்டிவிட்ட நிலையில், தீக்ஷனா ஓவரில் பெங்களூர் அணி வீரர் ஷாபாஸ் அஹமது ரிவெர்ஸ் ஸ்வீப் முயல, பந்து அவரது கால் காப்பில் பட்டுவிட்டது.
பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்டிருந்தாலும் கூட, வெற்றிக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியே ஆக வேண்டிய நெருக்கடியில் இருந்ததால் தோனி டி.ஆர்.எஸ். அப்பீலுக்குப் போனார். அது தோல்வியில்தான் முடிந்தது. வழக்கமாக, இதுபோன்ற தருணங்களில் தோனி டி.ஆர்.எஸ். முறைக்குச் செல்லவே மாட்டார். பெரும்பாலும் அவரது அப்பீல் சரியாக இருக்கும் என்பதால்தான் டி.ஆர்.எஸ். முறையையே ரசிகர்கள் தோனி ரிவியூ சிஸ்டம் என்று வர்ணிக்கிறார்கள். அப்படிப்பட்ட தோனி, நேற்றைய ஆட்டம் தந்த நெருக்கடிக்கு ஆளாக நேரிட்டதால் இந்த அப்பீலுக்குச் சென்றார் என்பதை உணர முடிந்தது.
அதேபோல், டுப்ளெஸ்ஸி, மேக்ஸ்வெல் ஆகியோருக்கு கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்ட தீக்ஷனா, கடைசிக் கட்டத்தில் தினேஷ் கார்த்திக் கொடுத்த கேட்சை எல்லைக்கோட்டில் பிடித்த போது தோனி முகத்தில் தென்பட்ட நிம்மதியும், மகிழ்ச்சியுமே அவர் உணர்ச்சிவசப்பட்டதை வெளிக்காட்டியது. ஏனெனில், சர்வதேச போட்டிகளில் கூட தோனி இந்த அளவுக்கு உணர்ச்சிவசப்படுபவர் அல்ல.
தினேஷ் கார்த்திக்கிற்கு அவர் ஸ்டம்பிங் செய்த போது விதிகளை மீறியதாகவும் தெரிகிறது. ஏனெனில், பந்து பேட்ஸ்மேனையோ, ஸ்டம்புகளையோ தொடாத போது ஸ்டம்புக்கு முன்னே விக்கெட் கீப்பரின் கைகள் செல்லக் கூடாது என்ற விதிகளை மீறி, தோனியின் கிளவுஸ் முன்னே இருந்தது டி.வி. ரிப்ளேவில் தெளிவாகத் தெரிந்தது. ஆனால், தோனி செய்த தவறை நடுவரோ, எதிரணியோ கவனிக்கத் தவறிவிட்டதாகவே தெரிகிறது.

பட மூலாதாரம், BCCI/IPL
ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் சாதனை சமன்
நேற்றைய ஆட்டத்தில் மொத்தம் 33 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. ஒரே போட்டியில் அதிக சிக்சர்கள் என்ற வகையில் ஏற்கனவே உள்ள சாதனையை நேற்றைய ஆட்டம் சமன் செய்துள்ளது.
இதில் 17 சிக்சர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 16 சிக்சர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளாசின. இரு அணிகளுமே சம அளவில் பவுண்டரிகளை விளாசின.
அவ்வளவு வாண வேடிக்கைக்கு மத்தியிலும் சிக்கனம் காட்டிய முகமது சிராஜ்

பட மூலாதாரம், BCCI/IPL
நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங் சொர்க்கபுரி என்பதால் இரு அணிகளின் பேட்ஸ்மேன்களும் சிக்சர், பவுண்டரிகளாக வெளுத்து வாங்க ஒரே ஒரு பவுலர் மட்டுமே சிக்கனமாக பந்துவீசியிருந்தார். அவர் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முகமது சிராஜ்.
பவர் பிளேவில் 2 ஓவர்களை வீசிய அவர், 14 மற்றும் 19-வது ஓவர்களையும் வீசியிருந்தார். 4 ஓவர்களில் 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருந்தார். இதன் மூலம், நடப்பு ஐ.,பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு வெற்றிகரமான பவுலராக அவர் வலம் வருகிறார். பந்துவீச்சில் முகமது சிராஜ் மட்டுமே அந்த அணிக்கு ஆறுதல் தருகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












