ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: தீர்ப்பை வழங்க உச்ச நீதிமன்றம் சொன்ன 'அடிப்படை' இதுதான்

ஜல்லிக்கட்டு உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சுசித்ரா கே மொஹன்டி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டில் பொங்கல் திருவிழாவின்போது நடத்தப்படும் ஜல்லிக்கட்டு ஏறு தழுவுதல் விளையாட்டை பாரம்பரியத்தின் அங்கமாக அங்கீகரித்த மாநில அரசின் சட்டத்திருத்தத்தை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமனதாக அளித்த தீர்ப்பில், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்ந்து நடைபெறும். மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு திகழ்வதாக மாநில அரசு வாதிட்டதை முழுமையாக ஏற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியால் விலங்குகளுக்கு பெரிய அளவில் துன்பம் விளைவிக்கப்படுவதில்லை என்பதை சுட்டிக் காட்டிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, கம்பாலா மற்றும் மாட்டு வண்டி பந்தயங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிரானவை என்று அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தள்ளுபடி செய்தது.

இது தொடர்பான தமது தீர்ப்பில், ஜல்லிக்கட்டு விளையாட்டு பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்துள்ளதாக உச்ச நீதிமன்றம் கோடிட்டுக் காட்டியுள்ளது.

ஜல்லிக்கட்டு தீர்ப்பு
படக்குறிப்பு, எஸ். ரகுபதி, தமிழ்நாடு சட்ட அமைச்சர்

இந்த தீர்ப்பை தமிழக அரசு பெரிதும் வரவேற்பதாக அதன் சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி கூறியுள்ளார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் விவரம் அதன் இணையதளத்தில் மே 17ஆம் தேதி பதிவேற்றப்பட்ட நிலையில், தீர்ப்பை நேரில் காண தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி டெல்லி வந்திருந்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களை நீதிமன்றத்துக்கு வெளியே உள்ள பூங்காவில் சந்தித்த அவர், இது தமிழக அரசின் இடைவிடாத முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.

தீர்ப்பின் முக்கிய பகுதிகள்

ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம், Getty Images

குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்ற இது போன்ற, பண்பாடு, கலாசாரம் தொடர்பான சட்டங்களில் தலையிட முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தமிழக அரசு இயற்றிய சட்டம் சரியானது தான். அதில் தவறு எதுவும் இல்லை. பாரம்பரியம், கலாசார நிகழ்வுகள் குறித்த முடிவுகளை எடுப்பதில் மாநில சட்டப்பேரவைகள் தான் இறுதியான அதிகாரம் பெற்ற அமைப்புகள். அதில் நீதிமன்றங்களுக்கு என எந்த பார்வையும் இருக்க முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு குறித்த தமிழக சட்டமன்றத்தின் விருப்பங்கள் மற்றும் நிலைப்பாட்டை தங்களால் மாற்ற முடியாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஜல்லிக்கட்டு விளையாட்டை எதிர்த்து மனு அளித்தவர்கள் மற்றும் அதற்கு தமிழகம், மகாராஷ்டிரா அரசுகள் அளித்த பதில்களை முழுமையாக கேட்ட நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய அமர்வு, கடந்த டிசம்பர் 18ஆம் தேதியன்று அதன் தீர்ப்பை ஒத்திவைத்தது.

நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனுராதா போஸ், ரிஷிகேஷ் ராய், ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இந்த வழக்கில், 2017ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு இயற்றிய விலங்குகள் வதை தடுப்பு சட்டத்திருத்தம் அரசமைப்புச் சட்டத்தை மீறியதாக மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இந்த விவகாரத்தை பெரிய அமர்வு தான் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்தது.

அதன் அடிப்படையில் ஐந்து நீதிபதிகள் அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணை நடந்தது.

காரசார வாதங்கள்

ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் கலாசார ரீதியாகவும், பாரம்பரியமாகவும் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதே போல் தமிழகம் முழுவதும் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல அமைப்பான பீட்டா, 2017இல் தமிழக அரசு மேற்கொண்ட சட்டத் திருத்தம் தவறானது என வாதிட்டது.

மனுதாரர்களில் விலங்குகள் நல ஆர்வலர்களில் ஒருவருக்காக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, ஜல்லிக்கட்டு தமிழர் பண்பாட்டின் ஒரு அங்கம் என நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் இல்லை. பாரம்பரியமாக பின்பற்றப்படுவதாலேயே ஒரு செயலை அடிப்படை உரிமை என கருதமுடியாது என்று வாதிட்டார்.

உடன்கட்டை ஏறுதல், விதவை மறுமணம், குழந்தைத் திருமணம் போன்ற பல்வேறு விஷயங்களில் பாரம்பரியம், கலாசாரம் என்ற காரணங்களைத் தாண்டி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதை வழக்கறிஞர் லூத்ரா சுட்டிக்காட்டினார்.

விலங்குகளின் வாழ்க்கை மனித வாழ்க்கையுடன் பிரிக்க முடியாத தொடர்புகளைக் கொண்டுள்ளது. அவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மனித இனத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் வாதிட்டார்.

மற்றொரு மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான், ஜல்லிக்கட்டு காளைகள் மீது அக்கறை செலுத்துவது நல்ல விஷயமாக இருந்தாலும், அதனாலேயே அவற்றுக்கு தீங்கிழக்கலாம் என்பதை ஏற்கமுடியாது என வாதிட்டார்.

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அனைத்து பாதுகாப்புகளையும் அளித்துள்ளதாக காட்டிக்கொண்டாலும், அவற்றை இது போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது அந்த விலங்குககளுக்கு துன்பம் விளைவிக்கும் வகையிலேயே இருக்கும் என வாதிட்டார்.

தமிழக அரசு விளக்கம்

ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம், Getty Images

இந்த விஷயத்தில் போட்டிகளை நடத்த ஏதுவாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இயற்றிய சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி விசாரணையைத் தொடங்கியது.

தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ஜல்லிக்கட்டு வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல. அது மதம், கலாசாரம் மற்றும் பண்பாட்டு ரீதியில் வரலாற்றில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சி என்று கூறப்பட்டிருந்தது.

முன்னதாக, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநில மக்கள் ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் போன்ற விளையாட்டுக்களை நடத்துவதற்கான உரிமையை அரசமைப்புச் சட்டத்தின் ஷரத்து 29(1)-ன் கீழ் வழங்கப்பட்ட உரிமைகளாக கருத முடியுமா என உச்ச நீதிமன்றம், அரசியல் சாசன அமர்விடம் கடந்த 2018ஆம் ஆண்டு கேள்வி எழுப்பியிருந்தது.

தமிழக அரசின் 2017ஆம் ஆண்டு சட்டத் திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், அரசியலமைப்பு சட்டம் சார்ந்த பல சந்தேகங்களை எழுப்பியுள்ளதால், அந்த மனுக்களை ஒரு பெரிய அமர்வு மட்டுமே விசாரிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

அரசமைப்பு சாசனத்தின் ஷரத்து 29(1)-ன் படி ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் போன்ற நிகழ்ச்சிகளுக்கான உரிமைகளை காக்கும் வகையில் மாநில அரசுகள் சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்தவையா என்பதை இந்த பெரிய அமர்வு தீர்மானிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது.

மத்திய அரசின் மிருகவதை தடை சட்டம் 1960-ல் திருத்தம் செய்த தமிழ்நாடு மற்றும் மகாராஷ்ட்ரா மாநில அரசுகள், பொதுமக்கள் ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயங்களை நடத்த அனுமதி அளித்திருந்தன. மாநில அரசுகளின் புதிய சட்ட திருத்தங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பீட்டா தலைமையில் பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பில், இந்த மனுக்களை தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அவற்றில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளைப் பயன்படுத்த அனுமதியளித்து தமிழக அரசு மேற்கொண்ட சட்டத்திருத்தம் செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

தமிழக அரசின் சட்ட திருத்தத்தை பல வழிகளிலும் எதிர்த்த பீட்டா அமைப்பு, காளைகளைப் பயன்படுத்தி விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் விதித்திருந்த தடையை இந்த சட்டம் மீறுவதாகவும் வாதிட்டது.

இதே விவகாரத்தில், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தவும், நாட்டின் எந்தப் பகுதியிலும் மாட்டு வண்டி பந்தயம் நடத்தவும் தடைவிதித்து 2014இல் உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி ஏற்கெனவே தமிழக அரசு ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது. அதை உச்ச நீதிமன்றம் அப்போது தள்ளுபடி செய்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: