எருது விடும் விழா: கிருஷ்ணகிரியில் கலவரத்தில் முடிந்த கிராம மக்கள் போராட்டம் - என்ன நடந்தது?

கிருஷ்ணகிரி
    • எழுதியவர், ஏ.எம்.சுதாகர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோபசந்திரம் கிராமத்தில் இன்று எருது விடும் விழா நடைபெறுவதாக ஊர்ப்பொதுமக்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான இளைஞர்களும் நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அழைத்து வரப்பட்டன.

எருது விடும் விழா

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மதுரை, பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது போல், தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எருதுவிடும் விழா நடத்தப்படுவது வழக்கம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் எருதுவிடும் விழாக்களில் குறிப்பிட்ட இலக்கை குறைந்த விநாடிகளில் கடக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

இதே போல், சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் எருதுவிடும் விழாக்களில், காளைகளின் கொம்புகளில் பரிசுத்தொகையைக் கட்டி ஓட விடுவது வழக்கம். சீறி பாய்ந்து செல்லும் காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டுள்ள பரிசுத் தொகையை இளைஞர்கள் பறித்துச் செல்வார்கள்.

கோபசந்திரத்தில் இன்று நடப்பதாக அறிவிக்கபட்டிருந்த எருதுவிடும் விழாவுக்கு முறையாக மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அனுமதி பெறவில்லை . அதனால் விழா நடக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் கொதித்தெழுந்த பொதுமக்கள் அனுமதி வழங்க கோரி கிருஷ்ணகிரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் நடைபெற்றது . இதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பெங்களூர் சாலையில் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன.

சாலை மறியல் பற்றி தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் . அதில் சில மணி நேரங்கள் எருது விடும் விழா நடத்த அனுமதிப்பதாக கூறப்பட்டது . ஆனால் பொதுமக்கள் அதை ஏற்கவில்லை.

மக்கள் போராட்டம்

கலவரம், கல்வீச்சு

அப்போது யாரும் எதிர்பாராமல் திடீரென போராட்டக்காரர்கள் அங்கு நின்ற வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். இதில் எஸ்பி உள்பட 20 போலீசார் காயமடைந்தனர். மேலும் அரசு பஸ்கள் தனியார் பஸ்கள் என 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.

கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தண்ணீரை பீச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களைக் கலைத்தனர். மதியம் ஒருமணியளவில் நிலைமை சீராகி போக்குவரத்தும் தொடங்கியது.

கைது படலம்

பின்னர் கலவரம் , கல்வீச்சில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடங்கியது.

சேலம் சரக டிஐஜி மகேஷ்வரி தலைமையில் வந்த 300 போலீசார் சம்பவ பகுதியில் இருந்த சுமார் 200 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் பெயர் சொல்ல விரும்பாத கோப சந்திரம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் நம்மிடம் கூறும் போது, ``நாங்கள் திருவிழா நடத்துவதற்காக இரண்டு முறை விண்ணப்பித்திருந்தோம் ஆனாலும் இரண்டு முறையும் அனுமதி கொடுத்து விட்டு பின்பு தேதியை மாற்றி நடத்தும்படி கூறி ரத்து செய்து விட்டனர்.

காரணம் ஒரு துறையை சேர்ந்தவர்கள் மட்டும் அனுமதி வழங்குவது இல்லை. கால்நடை பராமரிப்புத்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், மின்சார வாரியத்தினர், தீயணைப்பு துறையினர் இப்படி பலர் கூட்டுத் தணிக்கை செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி அவர் அனுமதி வழங்குவார். இதில் எந்த ஒரு துறை அனுமதி மறுத்தாலும் எங்களுக்கு அனுமதி கிடைக்காது.

இப்படி இரண்டு முறை அனுமதி மறுக்கப்பட்டு நாங்கள் மூன்றாவது முறையாக மனு கொடுத்திருந்தும் நேற்று இரவு 10 மணி அளவில் மீண்டும் விழா நடத்த அனுமதி இல்லை என்று தகவல் வந்தது.

"இருந்தாலும் காலையில் குவிந்த ஊர்ப் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது யாரோ சில சமூகவிரோதிகள் கல்வீச்சில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் அவர்களை கைது செய்யாமல் கோப சந்திரம் தக்ஷிண திருப்பதி கோயிலில் திருவிழாவுக்காக வந்திருந்த வெளியூர் உறவினர்கள் சுமார் 200 பேரை கைது செய்து, சூழகிரி காவல் நிலையம் அருகே உள்ள மணி மஹாலில் அடைத்து வைத்துள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் கலவரம் செய்த சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும்," என்றார்

கலவரத்தில் சேதமடைந்த பேருந்து
படக்குறிப்பு, கலவரத்தில் சேதமடைந்த பேருந்து

எருதுவிடும் விழா கலவரம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர், ''இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 200 பேரும் விடுவிக்கப்படுகின்றனர். கல்லெறிந்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள், வாகனங்களை சேதப்படுத்தியவர்கள் வீடியோ பதிவுகள் எங்களிடம் உள்ளன.

அந்தப் பேருந்துகள் சேதம் குறித்து வீடியோ காட்சிகள் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள்

எருது விடும் விழாவிற்கு மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி வாங்க வேண்டும். அவர் அனுமதிக்கவில்லையென்றால் தடுத்து நிறுத்தப்படும்'' என எச்சரிக்கை விடுத்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: