மத்திய பட்ஜெட்: ஏறும் கடன் ஒதுக்கீடு, குறையும் உர மானியம் - என்ன சொல்கிறார்கள் விவசாயிகள்?

விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

2023-24ம் நிதிஆண்டுக்கான இந்திய அரசின் பட்ஜெட்டில் வேளாண் கடனுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வேளாண் கடன் ரூ.18.5 லட்சம் கோடியாக இருந்தது. வேளாண்மை சார்ந்த 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பது உள்ளிட்ட பல அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தாலும், இந்த பட்ஜெட் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் விமர்சிக்கின்றனர்.

பட்ஜெட் உரையில் விவசாயம், கல்வி ஆகிய துறைகளுக்கு அரசு அதிக முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கி உள்ளதாகக் குறிப்பிட்டார் நிர்மலா.

விவசாயிகளுக்கான கடன் இலக்கை உயர்த்தியதன் மூலம் வேளாண்மை மற்றும் விதை சார்ந்த தொழில் நிறுவனங்களும், கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, மீன்வளம் ஆகிய தொழில்களில் ஈடுபடுபவர்களும் பலனடைவார்கள் என்றும் அவர் கூறினார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் அதற்கேற்ப, இயற்கை உரங்களை வழங்கும் 10 ஆயிரம் மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் நிர்மலா தெரிவித்தார்.

அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்பட உணவுப்பொருட்களும் அதிகம் தேவைப்படுகின்றன. எனவே, உணவுப் பொருள் தேவையைப் பூர்த்தி செய்யவும், விவசாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் 'ஸ்டார்ட் அப்' திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வேளாண் துறையில் தொழில்முனைவோர் உருவாவது அதிகரிக்கும் என்றார் அவர்.

விவசாயத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைக் கொண்டு வரவும் திட்டம் இருப்பதாக கூறிய அவர், அதனால், எந்தெந்த காலத்தில் என்னென்ன பயிர்களை விளைவிக்கலாம், எந்த உரங்களைப் பயன்படுத்தலாம், ஊடு பயிர்களாக எதைப் போடலாம் போன்ற பல விஷயங்கள் குறித்து விவசாயிகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஆலோசனை கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதனால் விவசாயிகள் சரியான நேரத்தில் சரியான உணவு தானியங்களை உற்பத்தி செய்து லாபம் ஈட்ட முடியும் என்றும் குறிப்பிட்டார் நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Images

ஏமாற்றத்திற்கான காரணங்கள்

பெ. சண்முகம்
படக்குறிப்பு, பெ. சண்முகம்

இத்தகைய அறிவிப்புகள் இருந்தபோது, இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக கூறுவது ஏன் என்று விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளிடம் கேட்டது பிபிசி தமிழ்.

விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையைப் பற்றி மத்திய அரசு இந்த 2023-24பட்ஜெட்டில் அறிவிக்கும் என்றுதான் விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அது குறித்த எந்த அறிவிப்பும் வரவில்லை. மாறாக மீண்டும் கடன் தருவதற்கு முக்கியத்துவம் தருவதால் வளர்ச்சியை ஏற்படுத்தும் பட்ஜெட் அல்ல இது என்று வாதிடுகிறார்கள் விவசாயிகள் சங்கத்தினர்.

பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பெ.சண்முகம், 2023-24 பட்ஜெட்டுக்கும் 2016ல் விவசாயிகள் பேரணியில் பிரதமர் மோதி பேசிய உரைக்கும் உள்ள தொடர்பைக் கவனித்தால் ஏமாற்றத்திற்கான காரணம் புரியும் என்றார்.

''பட்ஜெட் உரையை தொடங்கிய நிதியமைச்சர் இந்த பட்ஜெட் இந்திய சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் நிகழ்த்தப்படும் பட்ஜெட் என்றார். 2016ல் மோதி விவசாயிகளின் பேரணியில் பேசியபோது, 2022ல் இந்திய சுதந்திரத்தின் அமிர்த காலமான ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதுதான் தனது அரசின் நோக்கம் என்றார்.

அந்த நோக்கத்தை இந்த பட்ஜெட் எந்த விதத்திலும் பூர்த்தி செய்யவில்லை. மாறாக மீண்டும் விவசாயிகளின் கடன் சுமையை அதிகரிக்கும் பட்ஜெட்தான் இது,''என்கிறார் சண்முகம்.

விவசாயப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யாமல் இருப்பதுதான் இந்தியாவில் தற்போது விவசாயிகளின் அடிப்படை பிரச்னை என்று கூறிய சண்முகம், ''முதலில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தையில் விற்பதற்கு ஏற்ற விலையை அரசு கொடுக்காமல், புதிய திட்டங்களைக் கொண்டுவருவதால் எந்த மாற்றமும் ஏற்படாது.

விவசாயம் சார்ந்த 'ஸ்டார்ட் -அப்' நிறுவனங்கள் தொடங்குவதற்கு உதவுகிறோம் என்கிறார்கள், முதலில் விளைந்த பயிர்களுக்கு நல்ல விலை இருந்தால்தான் அதன் அடுத்தநிலைக்குப் போகமுடியும். பாசன மேம்பாட்டை அதிகரிக்கவோ, நதிநீர் இணைப்பு திட்டம் பற்றியோ எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை,'' என்கிறார் சண்முகம்.

விவசாயிகள் என்றாலே கடனாளிகளா?

விவசாயிகள்

இந்திய விவசாய குடும்பங்களின் சராசரி வருமானம் குறித்து இந்திய அரசின் புள்ளியியல் துறை கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.

2019ல் வெளியான அந்த அறிக்கையின்படி, இந்தியாவில் விவசாயத்தை நம்பியுள்ள ஒரு குடும்பம் மாதத்திற்கு சராசரியாக ரூ.3,798ஐ மட்டுமே வருவாயாக பெருகிறது. விவசாயத்துடன், கால்நடை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடும் குடும்பம் ரூ.10,218 ஈட்டுகிறது. இந்தியாவில் கடன் வாங்கியுள்ள விவசாய குடும்பங்களின் விகிதம் 50.2 சதவீதமாகவும், ஒரு விவசாய குடும்பத்தின் சராசரி கடன் தொகை ரூ 74,121 ஆகவும் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், கடன் தருவதை அரசு உயர்த்துகிறது, ஆனால் அந்த கடனை பெறுவது யார் என்று சரிபார்ப்பதில்லை என்கிறார்.

''ஒவ்வொரு முறையும் விவசாயிகளுக்குக் கடன் ஒதுக்கீட்டை அதிகரிக்கிறோம் என்கிறார்கள். இந்த விவசாயக் கடனை பெறுவது உண்மையில் கஷ்டத்தில் இருக்கும் விவசாயிதானா என்று அரசாங்கம் சோதனை செய்வதில்லை. பல இடங்களில் வாங்கிய சிறுதொகையைச் செலுத்த முடியாமல் தன்னிடம் உள்ள டிராக்டர் போன்றவற்றை விற்கும் நிலையில்தான் நாடு முழுவதும் விவசாயிகள் இருக்கிறார்கள்.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் விவசாயக் கடன் ஒதுக்கீட்டை அதிகரிக்கிறார்கள். நாங்கள் விளைவிக்கும் பயிருக்கும் சரியான விலையைக் கொடுத்தால் நாங்கள் எதற்கு தொடர்ந்து கடன் வாங்கப்போகிறோம்,''என்று கேள்வி எழுப்புகிறார் பாண்டியன். மேலும் விவசாயிகள் என்றாலே கடனாளிகள் என்ற தோற்றத்தை பட்ஜெட் ஏற்படுத்திவிட்டது என்கிறார் அவர்.

அதே போல, மத்திய அரசு அறிவித்துள்ள இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நாடு முழுவதும் ஒரு கோடி விவசாயிகளுக்கு நிதியுதவி மற்றும் அவர்களுக்குப் பரிந்துரைகள் தருவதற்கான மையங்கள் ஏற்படுத்துவது குறித்த அறிவிப்பு தேவையற்றது என்கிறார் விவசாயி இளங்கீரன்.

இளங்கீரன்
படக்குறிப்பு, இளங்கீரன்

உர மானியம் குறைப்பு

இந்தியா முழுவதும் ஒரு கோடி விவசாயிகள் என்று கணக்கிட்டால், ஒரு மாவட்டத்திற்கு 10 நபர்கள் என்ற கணக்கில் கூட விவசாயிகள் பயன்பெறப்போவதில்லை என்கிறார் இளங்கீரன்.

''பெரும்பாலான விவசாயிகள் பூச்சிக்கொல்லி, உரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி விவசாயம் செய்பவர்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் உரவிலை பல மடங்கு அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு அடிப்படைத்தேவைகளை முன்னிறுத்தி திட்டங்கள் கொண்டுவருவதை விடுத்து, எண்ணிக்கையை அதிகமாகக் காட்டுவதற்காகப் பல திட்டங்கள் கொண்டுவருவதில் எந்த பயனும் இல்லை. சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க எந்த நிதியுதவியும் அறிவிக்கப்படவில்லை என்பது ஏமாற்றம்தான்,''என்கிறார் அவர்.

விவசாயிகளுக்கான உர மானியம் 20 சதவீதத்திற்கும் மேலாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் ரூ.2.25லட்சம் கோடியாக வழங்கப்பட்ட உரமானியம் இந்த முறை ரூ.1.75கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், உரம் வாங்க விவசாயிகள் அதிக பணம் செலவழிக்கும் நிலை ஏற்படும் என்றும் இளங்கீரன் கூறுகிறார்.

''கடந்த இரண்டு ஆண்டுகளில் உரத்தின் விலை ஏறியுள்ளது. தற்போது உரமானியத்தை பெருமளவு குறைத்துள்ளார்கள் என்பது அதிர்ச்சியாக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மூட்டை டிஏபி ரூ.700ஆக இருந்தது.

தற்போது அதே ஒரு மூட்டை ரூ.1320வரை விற்கப்படுகிறது. அதேபோல யூரியா ஒரு மூட்டை ரூ.160ஆக இருந்தது, தற்போது ரூ.350ஆக உயர்ந்துள்ளது. 2023-24 நிதி ஆண்டில் மேலும் உரத்தின் விலை அதிகரிக்கும் என்பதால், எங்களுக்கு மேலும் உற்பத்தி செலவு சுமை கூடும்,''என்கிறார் இளங்கீரன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: