மத்திய பட்ஜெட்டில் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பட மூலாதாரம், ANI
மத்திய பட்ஜெட் 2023-24ல் எதிர்பார்க்கப்பட்டபடியே வருமான வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுதவிர, பல்வேறு பிரிவினருக்கும் வேறு சில சலுகைகளும், சில மானிய ரத்துகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள 10 முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு?
சாலைகள், நெடுஞ்சாலைகள், மின்சார உற்பத்தி நிலையங்களை அமைக்க 9.98 லட்சம் கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 33% அதிகமாகும்.
அதிகபட்சமாக ரயில்வே திட்டங்களுக்கு 1.96 லட்சம் கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. 50 புதிய விமான நிலையங்கள், ஹெலிபேட்கள் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு கடந்த ஆண்டைவிட 66% அதிகமாக, 81,775 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அரசின் வருவாய் பற்றாக்குறையை குறைக்க என்ன நடவடிக்கை?
மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறையை 0.5% குறைக்க மத்திய பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதைய வருவாய் பற்றாக்குறை 6.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக குறைக்கப்படும். 2025-26-ம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறையை 4.5 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2020-21ம் நிதியாண்டில் கொரோனா பேரிடர் எதிரொலியாக தடுப்பூசிக்கும், ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கவும் அதிக செலவானதால் அரசின் வருவாய்ப் பற்றாக்குறை அதிகபட்சமாக 9.3 சதவீதமாக இருந்தது.
நடுத்தர மக்களுக்கு சலுகை என்ன?
புதிய வருமான வரி நடைமுறையை ஏற்றுக் கொண்ட தனிநபர்களுக்கு வருமானவரி விலக்கு உச்சவரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய வருமான வரி நடைமுறையில் ரூ.7 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வருமான வரி தளர்வு காரணமாக நடுத்தர மக்களின் கைகளில் கூடுதல் பணம் இருக்கும் என்பதால் நுகர்வு அதிகரிக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
ஏழைகளுக்கான மானியங்கள், நலத் திட்டங்களுக்கு நிதி எவ்வளவு?
அதிக வேலைவாய்ப்பின்மையும், கூலி கொடுப்பதில் தாமதமும் நிலவும் நிலையில், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு 30 சதவீதம் குறைத்துள்ளது.
உணவு மானியத்தில் 30 சதவீதம் செலவினத்தைக் குறைக்கும் பொருட்டு, கொரோனா கால இலவச உணவு தானியத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
வேளாண் துறைக்கான அறிவிப்புகள் என்ன?
அதிக வேலைவாய்ப்பின்மையும், கூலி கொடுப்பதில் தாமதமும் நிலவும் நிலையில், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு 30 சதவீதம் குறைத்துள்ளது.
உணவு மானியத்தில் 30 சதவீதம் செலவினத்தைக் குறைக்கும் பொருட்டு, கொரோனா கால இலவச உணவு தானியத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான உர மானியம் 20 சதவீதத்திற்கும் மேலாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், உரம் வாங்க விவசாயிகள் அதிக பணம் செலவழிக்கும் நிலை உருவாகக் கூடும்.
அதேநேரத்தில், வேளாண் கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் தொடங்க இளைஞர்களை ஊக்குவிக்க சிறப்பு வேளாண்மை நிதி உருவாக்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
சுற்றுலாத் துறைக்கான புதிய அறிவிப்பு என்ன?
மாநில அரசுகள், தனியாருடன் இணைந்து சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க புதிய திட்டம் வகுக்கப்படும். இதன் மூலம் இளைஞர்கள் தொழில் தொடங்க புதிய வாய்ப்புகளும், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன்
மத்திய அரசின் மூலதன முதலீடு 33 சதவீதம் உயர்ந்து, 10 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது நாட்டின் ஜி.டி.பி.யில் 3.3. சதவீதமாகும்.
மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும்.
தேசிய டிஜிட்டல் நூலகம் எவ்வாறு செயல்படும்?
குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக தேசிய டிஜிட்டல் நூலகம் உருவாக்கப்படும். அனைத்து தரப்பினர், மொழிகள், துறைகள், தொழில்நுட்ப சாதனங்களுக்கும் ஏற்ற வகையில் அது இருக்கும்.
ஊராட்சிகள், வார்டுகள் வாரியாக நூலகம் உருவாக்க மாநில அரசுகளுக்கு ஊக்கம் தரப்படும். அந்த நூலகங்களை தேசிய டிஜிட்டல் நூலகத்துடன் இணைக்க தேவையான கட்டமைப்புகள் செய்யப்படும்.
பான் கார்டுகள் - வர்த்தகத்தில் பொது அடையாள அட்டை
பான் கார்டுகளை அரசு நிறுவனங்களின் டிஜிட்டல் பயன்பாட்டின் போது பொது அடையாள அட்டையாக பயன்படுத்த மத்திய பட்ஜெட்டில் முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
டிஜி லாக்கர் பயன்பாடு பரவலாக்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
கல்விக்கு மத்திய அரசின் அறிவிப்பு என்ன?
நாடு முழுவதும் 100 பொறியியல் கல்லூரிகளில் 5ஜி சேவை பயன்பாட்டிற்கான செயலிகளை உருவாக்க ஆய்வகங்கள் நிறுவப்படும்.
ஏகலைவா பள்ளிகளில் 38,800 பணியிடங்கள் நிரப்பப்படும்
செயற்கை நுண்ணவு தொழில்நுட்பத்தை இந்தியாவில் உருவாக்குவோம் என்ற தொலைநோக்கு அடிப்படையில் 3 நகரங்களில் சிறந்த கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் சால் மையம் உருவாக்கப்படும்.
நாடு முழுவதும் 740 ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிட பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 38,800 ஆசிரியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
2014-க்கு பிறகு தொடங்கப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்து 157 செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் உருவாக்கப்படும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












