மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடிக்கு எதிராக 12 ஆண்டுகளாகப் போராடும் மக்கள் - தீர்வு என்ன?

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடிக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள்
படக்குறிப்பு, சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக் கோரி மீண்டும் போராட்டத்தைத் துவங்கிய மக்கள்.
    • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
    • பதவி, பிபிசி தமிழ்

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியைப் பயன்படுத்தியதாக உள்ளூர் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ரூபாய் 2 லட்சம் முதல் 12 லட்சம் வரை பணம் செலுத்துமாறு சுங்கச்சாவடி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

இது கப்பலூர் சுங்கச்சாவடிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்க வழி வகுத்தது. சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக்கோரி அவர்கள் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர்.

கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்குக் கட்டணம் வசூலிப்பது ஏன்? கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படுமா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

12 ஆண்டுகளாகப் போராடும் உள்ளூர் மக்கள்

திண்டுக்கல் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி கடந்த 2012ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. அப்போதே உள்ளூர் மக்களுக்குக் கட்டணம் வசூலிப்பதாக பிரச்னை எழுந்தது.

மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உள்ளூர் மக்கள் சுங்கச்சாவடி வழியாகச் சென்று வர கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் உள்ளூர் மக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

அதேபோல் இந்த சுங்கச்சாவடி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லாமல் நகராட்சிப் பகுதிக்குள் அமைந்திருப்பதால் இதை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்றும் இல்லையெனில் தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும் அப்போதைய மாவட்ட ஆட்சியர் அன்சூல் மிஸ்ரா தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பினர்.

அதேவேளையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி 2014ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், விதிமுறைகளுக்கு உட்பட்டு சுங்கச்சாவடி அமைக்கப்படவில்லை என்றும் அதை வேறு இடத்திற்கு மாற்றி வசூல் செய்து கட்டணத்தைத் திரும்பிச் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வழக்கு தொடர்ந்தது. உள்ளூர் மக்கள் சென்று வர அணுகுச்சாலை (NH208) இருப்பதாகவும், தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிப்பதாகவுவும் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்து ஏற்கெனவே இருக்கும் நடைமுறையைப் பின்பற்றவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது.

சுங்கக் கட்டண விலக்கு அளிக்க உத்தரவு

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி
படக்குறிப்பு, மதுரை கப்பலூர் சுங்கச்சாவடிக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் மக்கள்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உள்ளூர் மக்களுக்கென அணுகுச்சாலை இருப்பதாகக் கூறி தீர்ப்பைப் பெற்று இருப்பதாகவும், ஆனால் உண்மையில் அப்படி ஒரு சாலை இல்லை என உள்ளூர் மக்கள், சிப்காட் தொழிற்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அன்றைய மாவட்ட ஆட்சியரான அனீஸ் சேகர் நேரில் சென்று ஆய்வு செய்து "மக்கள் 20 கி.மீ. சுற்றிச் செல்லும் விதமாக இருப்பதால் இதை மாற்றுப் பாதையாகக் கருத முடியாது" எனக் கூறினார்.

மேலும், சட்டம் ஒழுங்கைக் கருத்தில் கொண்டு நிரந்தரத் தீர்வு வரும் வரை தற்போதுள்ள நடைமுறைகள் அதாவது உள்ளூர் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை வாகனங்களுக்கு விலக்கு அளிக்கும் நடைமுறையைப் பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

உள்ளூர் மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதால் மீண்டும் கிளம்பிய போராட்டம்

கப்பலூர் மக்கள்
படக்குறிப்பு, கப்பலூர் சுங்கச் சாவடியைப் பயன்படுத்தியதாக 2 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த நோட்டீஸ் அனுப்பியதால் மீண்டும் போராட்டம் துவங்கியது

"கப்பலூர் சுங்கச்சாவடியைப் பயன்படுத்தியதாக 2 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த நோட்டீஸ் அனுப்பியதால் மீண்டும் போராட்டம் துவங்கியது” என்று கூறுகிறார் கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த பி. ரவி.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “திருமங்கலம் கப்பலூரில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி சட்டவிரோதமானது. திருமங்கலத்தைத் தாண்டி மேலக்கோட்டையில்தான் இந்த சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஒரு சுங்கச்சாவடி, நகரப்பகுதியின் 5 கி.மீ. சுற்றுக்குள் இருக்கக்கூடாது. ஆனால், கப்பலூர் சுங்கச்சாவடியோ ஒன்றரை கிலோ மீட்டருக்கு உள்ளாகவே அமைக்கப்பட்டு இருக்கிறது. உள்ளூர் மக்களுக்கு விலக்கு அளிப்பதாகக் கூறிவிட்டு மீண்டும் கட்டணத்தை வசூல் செய்வதால் தொடர்ச்சியாக திருமங்கலத்தில் இருந்து மதுரைக்குச் செல்லும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்,” என்று கூறினார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் இருந்து சுங்கச்சாவடியைப் பயன்படுத்தியதற்காக 2 முதல் 12 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும், உள்ளூர் மக்கள் கப்பலூர் சுங்கச்சாவடி வழியே சென்று வர 50% கட்டணத்தைச் செலுத்த வேண்டுமென நிர்வாகம் அறிவித்தது. இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

“ஜூலை 10ஆம் தேதி, இதைக் கண்டித்து ஒரு நாள் முழுவதும் சுங்கச்சாவடியை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டோம். சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் அல்லது உள்ளூர் மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே அந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. அரசு அதிகாரிகள், காவல் துறையினரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தோம்” என்றார் ரவி.

சுங்கச்சாவடியால் நழுவும் வேலைவாய்ப்புகள்

கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த பி. ரவி
படக்குறிப்பு, கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த பி. ரவி

"கப்பலூர் சுங்கச்சாவடியால் தொழில் நிறுவனங்கள் மதுரையிலிருந்து விருதுநகர், சிவகங்கை நோக்கிச் செல்வதாக" கூறுகிறார் கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் பி.என் ரகுநாதராஜா.

இதுகுறித்து அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில் “கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை மதுரை மாவட்டத்திற்கான வருவாய் ஈட்டுவதில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த தொழிற்பேட்டையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். தொழிற்சாலைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக திருமங்கலத்திற்குச் சென்று வரவேண்டிய சூழல் இருக்கிறது” என்கிறார் அவர்.

நிறுவனங்கள் இந்த சுங்கச்சாவடியால் தொடர்ந்து பிரச்னையைச் சந்தித்து வருகின்றன. ஒவ்வொரு முறையும் கட்டணத்தை வசூலிப்பதாகப் போராட்டம் நடத்திய பிறகு சில நாட்களுக்கு விலக்கு அளித்துவிட்டு, மீண்டும் அதே போல் கட்டணத்தை வசூலிக்க முயற்சி செய்வதாக ரகுநாதராஜா குற்றம் சாட்டுகிறார்.

இதனால் புதிய தொழில் நிறுவனங்கள் மதுரை கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டைக்கு வராமல் சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தை நோக்கிச் சென்றுவிட்டதாகவும் அவர் வருத்தம் தெரிவிக்கிறார்.

"இங்கு இருக்கக்கூடிய நிறுவனங்களும் திருமங்கலத்தில் இருந்து தங்களுடைய பணியாட்களை அழைத்து வருவதற்காகப் பல மடங்கு தொகையை மாதந்தோறும் செலுத்த வேண்டியுள்ளது. ஒருவேளை சாப்பிடகூட சுங்கச்சாவடியைக் கடந்து தான் செல்ல வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது" என்கிறார் ரகுநாதராஜா.

கப்பலூர் தொழிலதிபர்கள் சங்க தலைவர் பி.என் ரகுநாதராஜா
படக்குறிப்பு, கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் பி.என் ரகுநாதராஜா

தொடர்ந்து பேசிய ரகுநாதராஜா, "தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் கடந்த 2022ஆம் ஆண்டு 60 கிலோமீட்டருக்கு உட்பட்ட சுங்கச்சாவடிகளை மூடுவது குறித்தான அறிக்கையை வெளியிட்டது. அதில் 181 சுங்கச்சாவடிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதில் கப்பலூர் சுங்கச்சாவடியும் ஒன்று,” என்று குறிப்பிட்டார்.

கப்பலூரை ஒட்டியே 58 கிலோமீட்டரில் மற்றொரு சுங்கச்சாவடி இருப்பதால், இதைக் கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

சுங்கச்சாவடிக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள்
படக்குறிப்பு, கப்பலூரை ஒட்டியே 58 கிலோமீட்டரில் மற்றொரு சுங்கச்சாவடி இருப்பதால், இதைக் கண்டிப்பாக அகற்ற வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதா?

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்கள், தொழிற்பேட்டையைச் சேர்ந்த நிர்வாகிகள் கடந்த பத்தாம் தேதி நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் அமைச்சர் மூர்த்தி, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் அதிகாரிகள், கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை சங்க உறுப்பினர்கள், கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதில் உள்ளூர் மக்கள் சுங்கச்சாவடியைப் பயன்படுத்த விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதை கடிதம் வாயிலாகக் கொடுக்கும்படி தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரச்னைக்குத் தீர்வு வரும் வரை தற்காலிகமாக உள்ளூர் மக்கள் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டையைச் சார்ந்த வாகனங்களுக்கு விலக்கு அளிக்க, அந்த வாகனங்களின் சான்றிதழ்களை சுங்கச்சாவடியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

“கப்பலூர் சுங்கச்சாவடியை மூடுவதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும். உள்ளூர் வாகனங்கள் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை வாகனங்களுக்கு விலக்கு என்பது தற்காலிக தீர்வுதான். தற்போதும் சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே தொடர்ச்சியாக பிரச்னை ஏற்படத்தான் செய்திறது” என்கிறார் தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் ரகுநாதராஜா.

உள்ளூர் மக்களுக்கு சலுகை மட்டுமே

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி
படக்குறிப்பு, உள்ளூர் மக்கள் சுங்கச்சாவடியைப் பயன்படுத்த விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி, "தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைந்திருக்கும் இடத்திலிருந்து குறிப்பிட்ட தொலைவில் வசிக்கும் மக்கள் சென்று வர மாதாந்திர அடிப்படையில் பாஸ் வழங்கப்படுவது வழக்கம்."

"இது நாடு முழுவதும் உள்ள ஒரே நடைமுறை. கப்பலூர் சுங்கச்சாவடி தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படுகிறது. சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து முழு விலக்கு என்பது கிடையாது," எனக் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)