காக்பிட்டுக்குள் காபி, குஜியா இனிப்பு - வைரல் படத்தால் இரு விமானிகளை பணி இடைநீக்கம் செய்த விமான நிறுவனம்

Spicejet

பட மூலாதாரம், Getty Images

ஸ்பைஸ்ஜெட் விமான சேவை விமானம் ஒன்று நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானி அறையில் காபி மற்றும் இனிப்புகளை உண்ட விமானிகளை அந்நிறுவனம் பணி இடைநீக்கம் செய்துள்ளது.

இந்த புகைப்படம் எடுக்கப்பட்டபோது விமானம் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

இந்த புகைப்படம் விமர்சனங்களுக்கு ஆளான பின்பு, இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், விமான சேவை நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த புதன்கிழமையன்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், நடந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் புகைப்படங்களை எடுத்த விமானிகளை தற்காலிகமாக பணியிலிருந்து நீக்கியுள்ளதாகவும் தெரிவித்தது.

“விசாரணை முடிந்த பிறகு தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என அந்த விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரை மேற்கோள்காட்டி தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய விமானப் போக்குவரத்துத்துறை விதிமுறைகளின்படி, விமானிகள் அறையில் உணவு உட்கொள்ளலாம் ஆனால் அதற்கு கடுமையான விதிமுறைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக காஃபி கப்புகளில் மூடிகள் இருக்க வேண்டும். அதேபோல பானம் கீழே சிந்துவதை தடுக்க அதை ஒரு தட்டில் வைத்திருக்க வேண்டும்.

குறிப்பிட்ட விமானம் மார்ச் 8ஆம் தேதி ஹோலி தினத்தன்று, டெல்லியில் இருந்து வடகிழக்கு மாநிலமான அசாமின் தலைநகரான குவாஹட்டிக்கு பறந்து கொண்டிருந்தது.

பகிரப்பட்ட அந்த புகைப்படத்தில் மூடியில்லாத கப்பில் காபி காணப்படுகிறது. மேலும் அந்த கப்பில் விமான சேவை நிறுவனத்தின் லோகோவும் தெரிகிறது. அந்த கப் விமானத்தை இயக்க உதவும் லிவரின் மீது வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹோலியன்று உண்ணப்படும் குஜியா என்ற இனிப்பு வகையும் அந்த புகைப்படத்தில் காணப்படுகிறது.

இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. பின்பு விமானிகளின் பொறுப்பற்ற நடத்தை குறித்து அவர்கள் மீது விமர்சனங்கள் எழுந்தன.

“விமானம் வேகமாக பறக்கும்போது அந்த மின் இயந்திரத்தில் காபி சிந்தி இருந்தால் மொத்தமும் பழுதடைந்திருக்கும். இது ஒரு குற்றச்செயல்,” என விமானப்போக்குவரத்து நிபுணர் மோகன் ரங்கநாதன் அந்த புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டிருந்தார். மேலும் அந்த புகைப்படத்தை அவர்தான் முதன்முதலில் பகிர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் செவ்வாயன்று, இந்த புகைப்படம் தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் உடனடியாக விமானிகளை அடையாளம் காண வேண்டும் என்று தெரிவித்தது.

இரண்டு விமானிகள் பணியிலிருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பின், தி இந்து நாளிதழிடம் பேசிய ஸ்பைஸ்ஜெட் செய்தித்தொடர்பாளர், இந்த நிகழ்வு சரியாக எப்போது நடந்தது என்பதை ஆராய்வதாக தெரிவித்தார்.

“அந்த பதிவில் அந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று தெளிவாகத் தெரியவில்லை. இது பழைய படமா அல்லது புதிய படமா என தெளிவாக தெரியவில்லை. எனவே மேற்கொண்டு தகவல்களை ஆராய்ந்து வருகிறோம்,” என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: