பாஜக போல தமிழ்நாட்டில் தனித்து இயங்க விரும்புகிறதா காங்கிரஸ்? செல்வப்பெருந்தகை கூறியது என்ன?

காங்கிரஸ் - திமுக

பட மூலாதாரம், KSelvaperunthagai/Facebook

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டின் தேர்தல்களில் திமுக மற்றும் அதிமுக எனும் இருபெரும் திராவிடக் கட்சிகளைத் தவிர்த்துவிட்டு, ஒரு தேசிய கட்சியால் தனித்து செயல்பட்டு, வெல்ல முடியாத நிலையே அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடிக்கிறது.

காமராஜர் போன்ற வலுவான தலைவர்கள் இருந்த காங்கிரசை வீழ்த்திவிட்டு 1967-இல் திமுக ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு 57 ஆண்டுகள் கடந்து விட்டாலும், தமிழ்நாட்டின் அரசியலில் காங்கிரஸ் கட்சி தனித்து செயல்படுவதற்கான கட்டமைப்பும், வாக்கு வங்கியும் இருக்கிறதா என்று கேட்டால், மிகப்பெரிய கேள்விக்குறியே என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

சென்னையில் நடந்த காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "திமுகவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால் தோழமை என்பது வேறு, சார்ந்திருத்தல் என்பது வேறு. எத்தனை நாட்களுக்கு நாம் சார்ந்திருக்கப் போகிறோம்?" என்று குறிப்பிட்டார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, அனைத்திலும் வென்றுள்ள நிலையில், அதன் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை இவ்வாறு பேசியிருப்பது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

செல்வப்பெருந்தகை கூற வருவது என்ன? பாஜக போல தமிழ்நாட்டில் தனித்துச் செயல்பட வேண்டுமென, காங்கிரஸ் கட்சியும் விரும்புகிறதா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

செல்வப்பெருந்தகையின் விளக்கம்

செல்வப்பெருந்தகையின் விளக்கம்

பட மூலாதாரம், @INCTamilNadu/X

படக்குறிப்பு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசியது தொடர்பாக, செல்வப்பெருந்தகையிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டபோது, "நான் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் பேசினேன். திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்லது கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நோக்கத்திலோ பேசவில்லை" என்று கூறினார்.

தேசிய அளவில் ஒரு எதிர்க்கட்சியாக காங்கிரஸ் வளர்ச்சி கண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் அதன் கட்டமைப்பை வலுப்படுத்த நினைப்பதில் என்ன தவறு என்று கேள்வியெழுப்புகிறார் செல்வப்பெருந்தகை.

தொடர்ந்து பேசிய அவர், "பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் இருந்த காங்கிரஸ் இப்போது இல்லை. அதை நாங்கள் இழந்து விட்டோம். பாஜக போல அல்லாமல், தமிழ்நாட்டில் ஒரு பலமான வாக்கு வங்கி இருந்த வரலாறு காங்கிரசுக்கு உண்டு. அந்த வாக்கு வங்கியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன். மற்றபடி திமுக எப்போதுமே எங்கள் தோழமைக் கட்சி தான். கூட்டணி பலமாகவே உள்ளது" என்று கூறினார்.

தமிழ்நாட்டில் காங்கிரசின் வரலாறு

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு, காமராஜர் மற்றும் ராஜாஜி

தமிழ்நாட்டில் காங்கிரசின் வரலாறு

தமிழ்நாட்டின் அரசியல் களத்தை நிரந்தரமாக மாற்றிய தேர்தல் என்றால் அது 1967 தேர்தல்தான். அதற்கு முந்தைய 1962 தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று, காமராஜர் முதலமைச்சரானார். ஆனால், வெகு சீக்கிரத்திலேயே அவர் பதவி விலகி கட்சிப் பணிக்குச் சென்றுவிட, எம்.பக்தவத்சலம் முதலமைச்சராகியிருந்தார்.

இந்தியை ஒரே ஆட்சி மொழி ஆக்குவதை எதிர்த்து 1965-இல் திமுக நடத்திய போராட்டம், காங்கிரஸ் அரசுக்கான எதிர்ப்பை ஒருமுகப்படுத்தியது. ஒரு கட்டத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது, காங்கிரஸ் எதிர்ப்புப் போராட்டமாக மாறியது. அதற்கு முன்பாக, 1964-இல் தமிழ்நாடு முழுவதும் அரிசிக்கு நிலவிய தட்டுப்பாடு மக்களிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

காங்கிரஸ் கட்சி 1967 தேர்தலை தனியாக எதிர்கொள்ள முடிவு செய்தது. முந்தைய தேர்தல்களைப் போலவே இந்தத் தேர்தலிலும் பெரியாரின் திராவிடர் கழகம் காங்கிரசை ஆதரித்தது. காங்கிரசுக்கு எதிராக ஐக்கிய முன்னணி என்ற பெயரில் பலமான கூட்டணியை அமைத்திருந்தது அண்ணா தலைமையிலான திமுக.

இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் காங்கிரசின் நிலைப்பாடு, அரிசித் தட்டுப்பாடு, திமுகவின் வலுவான கூட்டணி, தேர்தல் நெருங்கும் சமயத்தில் திராவிடர் கழக ஆதரவாளரும் நடிகருமான எம்.ஆர்.ராதாவால் திமுகவின் எம்ஜிஆர் சுடப்பட்டது ஆகியவை எல்லாம் சேர்ந்து திமுகவுக்கு சாதகமான ஒரு நிலை இருந்தது. சென்னை மாகாணத்திற்கான சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது.

174 இடங்களில் போட்டியிட்ட திமுக 137 இடங்களைக் கைப்பற்றியது. 232 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 51 தொகுதிகளை மட்டுமே பிடித்தது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 25 இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சியால் வெறும் 3 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.

வலுவிழந்த காங்கிரஸ்

1971 தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1971 தேர்தலில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தை முழுமையாக திமுகவுக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்தது.

காமராஜர், மொரார்ஜி தேசாய் போன்றோர் தலைமையிலான காங்கிரஸ் பிரிவு, 1969இல் இந்திரா காந்தியை காங்கிரசில் இருந்து வெளியேற்றியது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது.

1971ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்க விரும்பிய அப்போதைய முதல்வர் கருணாநிதி, சட்டமன்றத்தைக் கலைத்தார். அவரது கட்சி, இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு தேர்தலை சந்தித்தது. அப்போது தமிழ்நாட்டில் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியும் வலுவாக இருந்தது.

சி.சுப்ரமணியம் தலைமையில் தமிழ்நாட்டில் இயங்கிய இந்திரா காங்கிரசுக்கு அவ்வளவு செல்வாக்கு இல்லை. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியும் கேட்பதில்லை என்ற உடன்பாட்டின் அடிப்படையில் இந்திரா காங்கிரசுக்கு 9 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கியது திமுக. இந்தக் கூட்டணி தேர்தலில் அபார வெற்றி பெற்றது.

காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் 201 இடங்களில் போட்டியிட்டு, 21இல் மட்டுமே வென்றது. பின்னாளில் இந்தக் கட்சி முக்கியத்துவம் இழந்து கரைந்தது. இந்திரா காங்கிரசே அதிகாரபூர்வமான இந்திய தேசிய காங்கிரசாக நிலை பெற்றது.

எனவே, 1971 தேர்தலில் சட்டமன்றத் தேர்தல் களத்தை முழுமையாக திமுகவுக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்தது, மாநில அரசியலில் காங்கிரசுக்குப் பேரடியானது.

பின்னாளில் காமராஜர் தலைமையில் இயங்கியவர்கள் முழுதாக காங்கிரசுக்குத் திரும்பிவரவில்லை என்பதால், காங்கிரஸ் அடைந்த பலவீனம் நிரந்தரம் ஆனது.

காங்கிரஸ் கட்சியால் தமிழ்நாட்டில் தனித்து செயல்பட முடியுமா?

அரசியல் விமர்சகர் டி.என்.ரகு
படக்குறிப்பு, தமிழக பாஜக, இந்த தேர்தலில் பொருந்தாக் கூட்டணி அமைத்ததால் தான் தோல்வியடைந்தது என்கிறார் டி.என்.ரகு.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் விமர்சகர் டி.என்.ரகு, "தமிழ்நாட்டில் திமுக-காங்கிரசின் கூட்டணி எந்தப் பிரச்னையும் இல்லாமல், சுமூகமாக இயங்குவதற்கு காரணமே, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய லட்சியம் ஏதும் இல்லாமல் இருப்பதால் தான்" என்கிறார்.

தமிழக பாஜக, தனிப்பட்ட பலத்தைக் காட்டுகிறேன் அல்லது கட்சியை விரிவுபடுத்துகிறேன் என்று அதிமுகவை விட்டு பிரிந்து, பொருந்தாக் கூட்டணி அமைத்ததால் தான் தோல்வியடைந்தது என்கிறார் டி.என்.ரகு.

"காங்கிரசும் அப்படி தனிப்பட்ட பலத்தைக் காட்டுகிறேன் என்று பிரிந்து சென்று, தேர்தலைச் சந்தித்தால், ஒரு மோசமான தோல்வியைச் சந்திக்கும். அது அவர்களுக்கே தெரியும். ஆனால் தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக பல தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பேசியதைத் தான் செல்வப்பெருந்தகையும் பேசியுள்ளார். அடுத்த தேர்தல் வரும்போது, இதை மறந்துவிடுவார்கள்" என்கிறார் டி.என்.ரகு.

தொடர்ந்து பேசிய அவர், "திமுகவுடன் இணக்கமாக இருக்கக்கூடியவர் என்பதால் தான் செல்வப்பெருந்தகை காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். எனவே அவர் கண்டிப்பாக திமுக கூட்டணிக்கு பாதகமாக எதையும் செய்ய மாட்டார்” என்று கூறினார்.

'காமராஜர் ஆட்சியைக் கொடுப்போம்'

பட மூலாதாரம், SELVAPERUNTHAGAI K / X

'காமராஜர் ஆட்சியைக் கொடுப்போம்'

மோகன் குமாரமங்கலம், வாழப்பாடி ராமமூர்த்தி, நெடுமாறன் என காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இதேபோல பேசியுள்ளார்கள் என்றும், ஆனால் அதற்கு தேவையான கட்சியின் கட்டமைப்பை அவர்கள் பலப்படுத்தவில்லை என்றும் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

"ஒரு தேசிய கட்சியின் இந்த ஆசை நியாயமானது தான், ஆனால் முதலில் களத்தில் அதற்கான பணிகளை மேம்படுத்த வேண்டும். இப்போது வென்ற இதே தொகுதிகளை அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் காங்கிரசால் வென்றிருக்க முடியுமா என்பதைச் சிந்தித்து பார்க்க வேண்டும்" என்கிறார்.

"திராவிடக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தேர்தலில் களம் காண வேண்டும் என்பதை 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜி.கே.மூப்பனார் முயற்சி செய்து பார்த்தார். அவருக்காக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி கூட பல முறை தமிழகம் வந்து பரப்புரை செய்தார், ஆனாலும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லையே" என்கிறார் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

திமுகவிடம் 1967இல் ஆட்சியைப் பறிகொடுத்த பிறகு, காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரு திராவிடக் கட்சிகளில் ஏதாவது ஒன்றுடனேயே கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுக் கொண்டிருந்தது. 1989-இல் 'காமராஜர் ஆட்சியைக் கொடுப்போம்' என்று கூறி தனித்து கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்த காங்கிரஸ், 208 இடங்களில் களம் கண்டது.

ஆனால், 26 இடங்களைத் தான் காங்கிரஸ் பெற்றது. அந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

ஏ.எஸ்.பன்னீர்செல்வன்

பட மூலாதாரம், ASPANNEERSELVAN/X

படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்

"'தமிழ்நாட்டில் திமுக, அதிமுக தவிர்த்து, மூன்றாவது இடம் என்பது எப்போதுமே மாறிக்கொண்டிருப்பது. மதிமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அதைத் தொடர்ந்து இப்போது நாங்கள் தான் என பாஜக சொல்கிறது. அடுத்து நடிகர் விஜயும் கூட அதை குறிவைக்கலாம். எனவே காங்கிரசும் அதைச் செய்யாமல், திமுகவுடன் இணைந்து கட்சியைப் பலப்படுத்துவது குறித்து யோசிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, 'காமராஜர் ஆட்சி தருவோம்' என பேசிக்கொண்டே இருப்பது, கூட்டணிக்குள் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)