என்.டி.ஆரை கவிழ்த்து முதல்வரானவர் ஆந்திராவின் தவிர்க்க முடியாத தலைவரானது எப்படி?

பட மூலாதாரம், TDP
- எழுதியவர், அருண் சாண்டில்யா
- பதவி, பிபிசி தெலுங்கு
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் பிரபல நடிககும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணும் இடம் பெற்றுள்ளார். பவன் கல்யாண் உள்பட 23 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திரைப்பட நடிகர்கள் சிரஞ்சீவி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சந்திரபாபு நாயுடு சபதம்
‘மறுபடியும் சொல்கிறேன். நான் முதலமைச்சராக இந்த சபைக்கு வருவேன், இல்லையென்றால் எனக்கு இந்த அரசியல் தேவையில்லை. இது கௌரவ சபை. மரியாதையான கூட்டம் அல்ல. அப்படிப்பட்ட கௌரவ சபையில் நான் இல்லை. உங்களுக்கு வாழ்த்துகள்.’
நாரா சந்திரபாபு நாயுடு ஆந்திர பிரதேச சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த காட்சி பலருக்கும் நினைவிருக்கலாம்.
இது நடந்த அன்று, டிவி சேனல்கள், சமூக ஊடகங்கள், வாட்ஸ்ஆப் குழுக்கள் என எல்லா இடங்களிலும் ஒரேயொரு வீடியோதான் காணப்பட்டது.
தெலுங்கு தேசம் கட்சியின் தேசியத் தலைவர் நவம்பர் 19, 2021 அன்று ஆந்திர சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதன்பிறகு மீண்டும் ஆந்திர சட்டசபைக்குள் அவர் நுழையவில்லை.
அன்றைய தினம் சட்டசபையில் இருந்து வெளியேறிய அவர், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தன்னையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் திட்டியதாகவும் தனது மனைவியைப் பேசக் கூடாத வார்த்தைகளால் பேசியதாகவும், ஆனால் சபாநாயகரால் எதுவும் செய்ய முடியவில்லை எனவும் கூறினார்.
அன்று கண்ணீரை அடக்கிக்கொண்டு சட்டசபையில் இருந்து சந்திரபாபு வெளிநடப்பு செய்தபோது, ‘இன்று விழ ஆரம்பித்துவிட்டாய்... இன்று விழ ஆரம்பித்துவிட்டாய்...’ என ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸை திட்டிக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தார் தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் அச்சன்நாயுடு.
அதன் பிறகு, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று, சந்திரபாபு மீண்டும் முதல்வராக சட்டமன்றத்திற்குள் நுழையப் போகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
என்ஜி ரங்காவுடன் அரசியல் என்ட்ரி

பட மூலாதாரம், Getty Images
திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதே அரசியலில் முழுமையாக ஈர்க்கப்பட்டவர் சந்திரபாபு நாயுடு. அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் கல்லா ராஜகோபால் நாயுடுவால் விரும்பப்பட்ட சந்திரபாபு, அவர் மூலம் என்.ஜி.ரங்காவின் கவனத்திற்கு வந்தார்.
அப்போது நீலம் சஞ்சீவ ரெட்டி, என்.ஜி. பிரிவுகள் ஆந்திர காங்கிரஸில் முக்கியப் பிரிவுகளாக இருந்தன. ரங்கா ஆதரவாளராக பிரதான அரசியலில் பிரவேசித்த சந்திரபாபு, 1978ஆம் ஆண்டில் முதல்முறையாக சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டார்.
எமர்ஜென்சிக்கு பிந்தைய தேர்தலில் சந்திரகிரி தொகுதியில் இந்திரா காங்கிரஸ் சார்பில் சந்திரபாபு போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் கொங்கரா பட்டாபிராம சௌத்ரி, காங்கிரஸ் சார்பில் பாலசுப்ரமணியம் சௌத்ரி மற்றும் நான்கு சுயேச்சைகள் போட்டியிட்டனர்.
காந்தியவாதி என்றழைக்கப்படும் பட்டாபிராம சௌத்ரியின் கடும் போட்டிக்கு நடுவே சந்திரபாபு 2,494 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சந்திரபாபு 35,092 வாக்குகளும், பட்டாபிராம சௌத்ரி 32,598 வாக்குகளும் பெற்றனர்.
அந்த வெற்றியின் மூலம் முதல்முறையாக சட்டசபைக்குள் நுழைந்த சந்திரபாபு நாயுடு, அதன் பிறகு சிறிது காலத்தில் தங்குதூரி அஞ்சய்யா அமைச்சரவையில் இடம் பெற்றார். அவர் முதல்முறையாக எம்.எல்.ஏ.வாகி 46 ஆண்டுகள் ஆகின்றன.
அரசியல் வாழ்வில் திருப்புமுனை

பட மூலாதாரம், Getty Images
அஞ்சய்யா அமைச்சரவையில் இடம் பெற்ற சந்திரபாபுவுக்கு தொழில்நுட்பக் கல்வி, கால்நடை வளர்ப்பு, பால்பண்ணைத் தொழில் மற்றும் ஒளிப்பதிவுத் துறையும் வழங்கப்பட்டது.
ஒளிப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த அவர், திரையுலகில் உள்ளவர்களுடன் நல்ல தொடர்பு வைத்திருந்தார். என்.டி.ஆர்-உடனும் நெருங்கிப் பழகினார். பின்னர் என்.டி.ஆர் தனது மகள் புவனேஸ்வரியை சந்திரபாபுவுக்கு திருமணம் செய்து வைத்தார்.
அவரது மகளை சந்திரபாபு மணந்த சில மாதங்களுக்குப் பிறகு, 1982இல் தெலுங்கு தேசம் கட்சியை நிறுவினார் என்.டி.ஆர். ஆனால், சந்திரபாபு அந்த கட்சியில் உடனே சேரவில்லை. காங்கிரஸிலேயே தொடர்ந்தார்.
கடந்த 1983ஆம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சி முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிட்ட போது சந்திரகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சந்திரபாபு போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மேடசானி வெங்கடராம நாயுடுவால் தோற்கடிக்கப்பட்டார்.
அந்தத் தோல்விக்குப் பிறகு, சந்திரபாபு நாயுடு தனது மாமா என்.டி.ஆரின் கட்சியான தெலுங்கு தேசத்தில் சேர்ந்தார்.

பட மூலாதாரம், Getty Images
தெலுங்கு தேசம் கட்சிக்குள் கிளர்ச்சி
கட்சியில் சந்திரபாபுவின் முனைப்பும் புத்திசாலித்தனமும் என்.டி.ஆரை கவர்ந்தது. குறிப்பாக நாதெண்டலா பாஸ்கர ராவின் கிளர்ச்சியின் போது சந்திரபாபு கடைபிடித்த அரசியல் உத்திகள் என்.டி.ஆரை கவர்ந்தன.
கடந்த 1984இல் மிகுந்த பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிய என்.டி.ஆர் எதிர்பாராத விதமாக ஆட்சியை இழந்தார். 1984இல் என்.டி.ஆர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற போது, சில எம்.எல்.ஏக்களின் ஆதரவைத் திரட்டி நாதெண்டலா பாஸ்கர ராவ் முதல்வரானார்.
என்.டி.ஆர் தரப்புக்கு சந்திரபாபு அதிக எம்.எல்.ஏக்களின் ஆதரவைத் திரட்டியதால், நாதெண்டலா தனது பலத்தை நிரூபிக்கும் முன் ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, என்.டி.ஆர் சந்திரபாபுவை அதிகம் விரும்பினார். நாதெண்டலா கிளர்ச்சிக்குப் பிறகு 1985 இடைத்தேர்தலில் போட்டியிடாமல் கட்சிக்காக சந்திரபாபு உழைத்தார்.
பின்னர் 1989 தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்குப் போதிய பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சி அமைந்த போது, எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபைக்குச் செல்லவில்லை என்று கூறிய என்.டி.ஆர், சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புகளை சந்திரபாபுவிடம் ஒப்படைத்தார். இது கட்சியில் அவரது பிடியை அதிகரித்தது.
முதல்வர் இருக்கையில் சந்திரபாபு

பட மூலாதாரம், Getty Images
ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் கட்சி 1994 தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இருப்பினும் சந்திரபாபுவும் என்.டி.ஆரின் மகன்கள் சிலர், கட்சியில் என்.டி.ஆரின் இரண்டாவது மனைவி லஷ்மி பார்வதியின் தலையீட்டை எதிர்த்துக் கலகம் செய்தனர்.
சந்திரபாபு 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் என்.டி.ஆர் மீது நம்பிக்கை இல்லை என அறிவித்துத் தனது பலத்தை நிரூபித்து முதல்வரானார்.
இந்த விஷயத்தில் சந்திரபாபுவின் ஆதரவாளர்கள் சொல்வது ஒன்று, எதிர்ப்பவர்கள் சொல்வது ஒன்று. சந்திரபாபுவின் இந்த நடவடிக்கை கட்சியைப் பாதுகாக்கவே என்று அவரது ஆதரவாளர்கள் அனைவராலும் கூறப்படுகிறது. சந்திரபாபு தனது மாமனாரை ஏமாற்றிவிட்டார் என்று அவரது விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மக்களின் கவனத்தை ஈர்த்த சந்திரபாபு
சந்திரபாபு முதல்வராக முத்திரை பதிக்க முயன்றார். புத்திசாலித்தனமான நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம், மக்களால் நடத்தப்படும் நிர்வாகம், பசுமை, தூய்மை போன்ற திட்டங்கள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
இஸ்ரேலிய சாகுபடி முறைகள் மற்றும் சொட்டு நீர்ப் பாசனத்தை மாநிலத்தில் அறிமுகப்படுத்தினார். 1998இல் ஹைடெக் சிட்டியை தொடங்கி ஐடி துறையை விரிவுபடுத்தப் பாடுபட்டார்.
அதேநேரத்தில், ஜிஎஸ்டிபி, கல்வி, சுகாதாரம், சராசரி ஆயுட்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் மற்ற தென் மாநிலங்களைவிட ஆந்திரா பின்தங்கியிருப்பதாக சந்திரபாபு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
1999 தேர்தல் களம்

பட மூலாதாரம், Getty Images
நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த சந்திரபாபு 1999இல் முதல்முறையாக மக்கள் முன் தனித்துச் சென்றார். அதுவரை தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய ஈர்ப்பாக இருந்தது என்.டி.ஆரின் கவர்ச்சி. ஆனால், என்.டி.ஆரின் கவர்ச்சியுடன் ஒப்பிடும் போது சந்திரபாபுவுக்கு மக்கள் மத்தியில் ஈர்ப்பு குறைவு. இருப்பினும் அவர் தனது அரசியல் வியூகங்களாலும், நடைமுறைத் திறன்களாலும் அந்தத் தேர்தலில் தன்னை முன்னிலைப்படுத்திக் களமிறங்கினார்.
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து சந்திரபாபு தேர்தலை சந்தித்ததும் அந்தத் தேர்தலில் வேலை செய்தது. அதற்குக் காரணம் 1999 கார்கில் போர். வாஜ்பேயி ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்து அனுதாபம் பெற்றார். பாஜகவுடன் இணைந்து பயணித்தது அந்தத் தேர்தலில் சந்திரபாபுவுக்கு கூடுதல் பலமாக அமைந்தது.
இதனால் 1999இல் சந்திரபாபு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி 178 இடங்களில் வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு.

பட மூலாதாரம், Getty Images
அலிபிரி நக்சலைட் தாக்குதல்
இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்ற சந்திரபாபு தனது 4 ஆண்டு கால ஆட்சியை முடிக்க பத்து நாட்களே இருந்த சூழலில் நக்சலைட்டுகளால் தாக்கப்பட்டார்.
கடந்த 2003ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி திருமலையில் பிரம்மோத்ஸவத்திற்கு சென்ற போது நக்சலைட்டுகளால் தாக்கப்பட்டார்.
எதுகொண்டாஸின் நுழைவாயிலான அலிபிரியில் சந்திரபாபுவை குறிவைத்து நக்சலைட்டுகள் கிளைமோர் கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்தனர்.
சந்திரபாபுவின் கார் பலத்த சேதமடைந்தது. அவர் காயங்களுடன் உயிர் தப்பினார். இந்தத் தாக்குதலில் அப்போதைய செய்தித்துறை அமைச்சர் பொஜ்ஜலா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் அவருடன் வந்த இரண்டு எம்.எல்.ஏ.க்கள் காயமடைந்தனர்.
சந்திரபாபுவின் தப்புக்கணக்கு

பட மூலாதாரம், Getty Images
சந்திரபாபு அலிபிரி தாக்குதலில் பலத்த காயமடைந்தார். ஒரு மாதத்திற்குப் பிறகு நவம்பர் 14, 2003 அன்று சட்டமன்றத்தைக் கலைத்தார். தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி உருவாக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு அக்கட்சியில் இருந்து பிறகு நீக்கப்பட்டவருமான பர்வதனேனி உபேந்திரா, “மக்களிடம் அனுதாபம் கிடைக்கும் என்று நினைத்ததால் முன்கூட்டியே தேர்தலை நடத்த சந்திரபாபு முயன்றதாக” தனது ‘கதம்-ஸ்வாகதம்’ நூலில் எழுதியுள்ளார்.
ஆனால், மக்களவைத் தேர்தலுடன், 2004இல் ஆந்திர சட்டசபைத் தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்தியது. பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சிக்கு தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை அளித்தன. சட்டசபையில் தெலுங்கு தேசம் கட்சி 48 இடங்களை மட்டுமே பெற்றது. இதனால் சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழந்தார். மக்களவைத் தேர்தலில் ஐந்து தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது.
கடந்த 2004இல் ஆட்சியை இழந்த சந்திரபாபு மீண்டும் முதல்வராகப் பதவியேற்க பத்து ஆண்டுகள் ஆனது. 2004இல் முதல்வரான ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி, 2009 தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார்.
ஆனால், ஹெலிகாப்டர் விபத்தில் அவர் இறந்த பிறகு, ரோசய்யாவும் கிரண் குமார் ரெட்டியும் முதல்வராகப் பதவியேற்றனர். இதற்கிடையில் ஆந்திர பிரதேச மாநிலம் அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் மறுசீரமைக்கப்பட்டது. ஆந்திரா, தெலங்கானா என இரு மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
இருப்பினும், தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்ததால், 2014 தேர்தலுக்கு முன்பே சந்திரபாபு தனது பாதயாத்திரையைத் தொடங்கினார். 2012இல் சந்திரபாபு தனது யாத்திரையைத் தொடங்கி, ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தின் 16 மாவட்டங்கள் மற்றும் 86 தொகுதிகளில் 2,817 கி.மீ பயணம் செய்தார்.
தேசிய அரசியலில் சந்திரபாபுவின் பங்கு

பட மூலாதாரம், Getty Images
தேசிய அரசியலில் சந்திரபாபு நாயுடு முக்கியப் பங்காற்றினார் என்று தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற அலுவலகச் செயலாளர் நௌபதா சத்தியநாராயணா கூறினார்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, தேவகவுடா, ஐ.கே.குஜ்ராலை பிரதமர் ஆக்கியதில் சந்திரபாபு முக்கியப் பங்காற்றியதாக அவர் கூறினார்.
சந்திரபாபு பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்று மற்ற கட்சிகள் முன்மொழிந்த போதும், அதற்கு அவர் சம்மதிக்கவில்லை எனவும் மாநிலத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கொள்கையில் அவர் இருப்பதாகவும் சத்தியநாராயணா கூறினார்.
கடந்த 1996ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து, பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்கப் போதிய பலம் இல்லாததால், தொங்கு நாடாளுமன்றம் உருவானது.
வாஜ்பேயி தலைமையிலான அரசு தனது பலத்தை நிரூபிக்கத் தவறி இரண்டே வாரங்களில் கவிழ்ந்தது. அப்போது ஐக்கிய முன்னணியின் அமைப்பாளராக சந்திரபாபு இருந்தார். ஐக்கிய முன்னணிக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்க காங்கிரஸ் கட்சி முன்வந்தது. ஐக்கிய முன்னணியின் பிரதமர் வேட்பாளரைத் தீர்மானிப்பதில் முன்னணி அமைப்பாளராக சந்திரபாபு முக்கியப் பங்கு வகித்ததாக தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான கம்பம்பட்டி ராமமோகன் ராவ் தனது ‘நேனு – தெலுங்கு தேசம்’ புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இருப்பினும், “1998 தேர்தலுக்குப் பிறகு நாட்டின் அரசியல் சூழ்நிலை மீண்டும் மாறியது. பாஜக ஆட்சி அமைந்தால் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்போம் என்றும் அதற்குப் பதிலாகத் தனது கட்சியைச் சேர்ந்த தலித் தலைவர் ஜிஎம்சி பாலயோகியை சபாநாயகராக்க வேண்டும் என்றும் பாஜகவிடம் சந்திரபாபு முன்மொழிந்தார். அதற்கு பாஜக சம்மதித்ததால் பாலயோகி சபாநாயகரானார். இதனால், ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்,” என்று கம்பம்பட்டி எழுதியுள்ளார்.
அதன்பிறகு பாஜகவுடன் தெலுங்கு தேசம் கூட்டணி அமைத்ததாகவும் வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது சந்திரபாபு கூட்டணி தர்மத்தைப் பின்பற்றியதாகவும் கம்பம்பட்டி எழுதினார்.
அப்போது தெலுங்கு தேசம் கட்சிக்கு 29 மக்களவை உறுப்பினர்களும் 18 மாநிலங்களவை உறுப்பினர்களும் இருந்ததை நினைவுகூர்ந்த நௌபதா சத்யநாராயணா, வாஜ்பேயுடன் சந்திரபாபுவுக்கு நல்ல உறவு இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
வளர்ச்சி விஷயத்தில் சந்திரபாபுவின் ஆலோசனைகளை வாஜ்பேயி விரும்பியதாக அவர் கூறினார். அவரது கூற்றுப்படி, நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் ‘ஸ்வர்ண சதுர்பூஜி’ (தங்க நாற்கர சாலை) நெடுஞ்சாலைத் திட்டத்தின் பின்னணியில் சந்திரபாபுவின் ஆலோசனைகள் இருந்துள்ளன.
சந்திரபாபுவின் அமராவதி விருப்பம்

பட மூலாதாரம், Getty Images
மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு 2014இல் ஆட்சிக்கு வந்த சந்திரபாபுவால் 2019 தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.
மேலும், 175 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட புதிய ஆந்திர பிரதேசத்தில் சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
இருப்பினும் சந்திரபாபு எப்போதும் மக்கள் மத்தியில் இருந்ததால், அவர்களின் ஆதரவை மீண்டும் பெற முடிந்தது. பிபிசியிடம் மூத்த பத்திரிகையாளர் வெங்கடநாராயணா பேசுகையில், தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் சந்திரபாபுவை சந்தித்த போது வெற்றி குறித்து முழு நம்பிக்கை காட்டியதாகக் கூறினார்.
ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதியை உருவாக்க சந்திரபாபு விரும்புவதாகவும் அவர் கூறினார்.
சந்திரபாபு மீதான வழக்குகள்
சந்திரபாபுவின் நீண்ட அரசியல் வாழ்க்கையில், இரண்டு வழக்குகள் அவருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தின. ஒன்று வாக்குக்குப் பணம் கொடுத்த வழக்கு, மற்றொன்று திறன் மேம்பாடு வழக்கு. திறன் மேம்பாடு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர பிரதேச மாநில திறன் மேம்பாட்டுக் கழகத்தில் முறைகேடுகள் செய்ததாகக் கூறி சந்திரபாபு செப்டம்பர் 9, 2023 அன்று கைது செய்யப்பட்டார். ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் 52 நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 31ஆம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், TDP
சந்திரபாபு ஆட்சியில் திறன் மேம்பாடு என்ற பெயரில் ரூ.371 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆந்திர அரசு குற்றம் சாட்டியுள்ளது. சட்டசபையில் பேசிய முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் பல குற்றச்சாட்டுகளைக் கூறினார்.
ஆனால், சந்திரபாபு மீது எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி கூறுகிறது.
சந்திரபாபு மீது ‘வாக்குக்குப் பணம் கொடுத்ததாக’ குற்றம் சாட்டப்படும் வழக்கும் நிலுவையில் உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு தெலங்கானாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த ரேவந்த் ரெட்டி நியமன உறுப்பினருக்குப் பணம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது நியமன எம்.எல்.ஏ ஸ்டீபன்சனுடன் சந்திரபாபுவும் போனில் பேசியதாக ஆடியோ பதிவுகள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கில் ரேவந்த் ரெட்டி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் சந்திரபாபுவின் பெயரையும் சேர்த்து வழக்கை சிபிஐக்கு ஒப்படைக்கக் கோரி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ அல்லா ராமகிருஷ்ண ரெட்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இது தொடர்பான விசாரணை ஜூலை 24ஆம் தேதி நடக்கிறது.
மக்களுக்காக எந்தக் கஷ்டம் வந்தாலும் சந்திரபாபு எதிர்கொள்வார் என்றும் எத்தனை கற்கள் வீசப்பட்டாலும் அதைச் சந்திப்பார் என்றும் சத்யநாராயணா கூறினார்.
“நான் தூங்க மாட்டேன், உங்களையும் தூங்கவிடமாட்டேன்” என்று அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றிய சந்திரபாபு மீண்டும் மாநிலத்தை முன்னெடுத்துச் செல்வார் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












