கேப் டவுன் நியூலேண்ட்ஸ்: பேட்ஸ்மேன்களை சித்ரவதை செய்யும் தென்னாப்பிரிக்க ஆடுகளத்தில் அப்படி என்ன இருக்கிறது?

கேப் டவுன் நியூலேண்ட்ஸ் IND vs SA

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரே நாளில் 23 விக்கெட், இந்திய அணி 0 ரன்னுக்கு 6 விக்கெட்டுகள், தென் ஆப்பிரிக்கா 55 ரன்னில் சுருண்டது என தேவையற்ற சாதனைகளை இரு அணிகளும் பெற்றுள்ளன.
    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்தியா- தென் ஆப்பிரிக்க இடையிலான டெஸ்ட் தொடரில் இரு நாட்டு வீரர்களுடன் சேர்ந்து ‘ஆடுகளங்களும் விளையாடுகின்றன’ என்றால் கேட்பதற்கு சற்று நகைச்சுவையாகத்தானே இருக்கிறது. ஆனால் அது உண்மைதான்.

ஏனென்றால், இரு போட்டிகளிலும் வெற்றியை தீர்மானிப்பது பந்துவீச்சாளர்களோ, பேட்டர்களோ அல்ல ஆடுகளங்கள்தான். இது 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளை பார்த்தபோதே புரிந்திருக்கும்.

கேப்டவுனில் நடந்து வரும் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் நாளில் ஒரே நாளில் 23 விக்கெட், இந்திய அணி 0 ரன்னுக்கு 6 விக்கெட்டுகள், தென் ஆப்பிரிக்கா 55 ரன்னில் சுருண்டது என தேவையற்ற சாதனைகளை இரு அணிகளும் பெற்றுள்ளன.

அதிலும் இந்திய அணி 153 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்று வலுவாக இருந்த நிலையில், அடுத்த 2 ஓவர்களில் 2 பந்துகளுக்கு ஒரு விக்கெட் வீதம் மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் பூஜ்ஜியம் ரன்னுக்கு மோசமாக இழந்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்ற மோசமான சாதனையை இந்திய அணி மட்டுமே செய்திருக்கிறது.

கேப் டவுன் நியூலேண்ட்ஸ் IND vs SA

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தென் ஆப்பிரிக்க கேப்டன் எல்கர் காலையில் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்து, மாலையில் 2வது இன்னங்ஸிலும் ஆட்டமிழந்தார்.

தனது கடைசி போட்டியில் மோசமான சாதனையைப் படைத்த எல்கர்

அது மட்டுமல்லாமல் ஒரே நாளில் ஒரு பேட்டர் இரு இன்னிங்ஸிலும் ஆட்டமிழந்ததும் இரண்டாவது முறையாகும். தென் ஆப்பிரிக்க கேப்டன் எல்கர் காலையில் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்து, மாலையில் 2வது இன்னங்ஸிலும் ஆட்டமிழந்தார். இதற்கு முன் 1890ம் ஆண்டு ஆஸ்திரேலிய பேட்டர் ஜேக் பேரட் மட்டுமே இதுபோல் ஆட்டமிழந்திருந்தார். அதற்கு பின் ஏற்ககுறைய 134 ஆண்டுகளுக்குப்பின் டீன் எல்கர் இந்த மோசமான சாதனையைச் செய்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியில் விக்கெட் கீப்பர் கெயில் வெரினே தவிர ஒரு பேட்டர் கூட களத்தில் 20 பந்துகளைக் கூட சந்திக்காமல் ஆட்டமிழந்தனர். அந்த அளவுக்கு பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றாற்போல், பேட்டர்களுக்கு சிறிதும் ஒத்துழைக்காத ஆடுகளமாக கேப்டவுன் மைதானம் மாறிவிட்டது.

கேப் டவுன் நியூலேண்ட்ஸ் IND vs SA

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1889ம் ஆண்டு மார்ச் 25ம் தேதியிலிருந்து நூற்றாண்டு கடந்து கேப்டவுனில் டெஸ்ட் போட்டிநடத்தப்பட்டு வருகிறது

கேப்டவுன் நியூலேண்ட்ஸ் ஆடுகளம் எப்படி?

தென் ஆப்பிரிக்க ஆடுகளம் என்றாலே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில்தான் இருக்கும் என்று வரலாறு இருக்கிறது. அதையும் கடந்து இங்கும் சில நல்ல ஆடுகளங்களும் இருக்கின்றன. அந்த வகையில் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஆடுகளமும் ஒன்றாகும்.

ஆனால், நல்ல மைதானங்கள் வரிசையில் இடம் பெற்ற நியூலேண்ட்ஸ் ஆடுகளம் இவ்வளவு மோசமாக பேட்டர்களுக்கு சிறிதும் ஒத்துழைக்காத ஆடுகளமாக எவ்வாறு மாறியது என்பது தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கருக்கே வியப்பாக இருக்கிறது.

1889ம் ஆண்டு மார்ச் 25ம் தேதியிலிருந்து நூற்றாண்டு கடந்து கேப்டவுனில் டெஸ்ட் போட்டிநடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 58 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டாலும், பெரும்பாலான ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காதான் வென்றுள்ளது. இந்த மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையில்தான் நடந்தது.

அந்த அளவுக்கு கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானம் பாரம்பரியம், புகழ்பெற்றது. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் அழகான மைதானங்களில், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இயற்கையாகவே ஒத்துழைக்கும் வகையில் ஈரக்காற்று அதிகம் வீசும் சூழல் நிறைந்தது.

இதனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றாற்போல் ஆடுகளம் அமைத்தாலும், இயற்கை சூழலும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவும் வகையில் குளிர்காலத்திலும், மழைக்காலத்திலும் காற்றில் அதிகமான ஈரப்பதத்துடன் இங்கு வீசுவதால் சீமிங், ஸ்விங் நன்றாக எடுபடும்.

இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 651 ரன்கள் வரை அடிக்கப்பட்டாலும், இந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தேவையற்ற சாதனைகளை சம்பாதித்துக்கொண்டனர். இந்த மைதானத்தைப் பொறுத்தவரை முதலில் பேட் செய்த அணி 23 போட்டிகளிலும் சேஸிங் செய்த அணி 25 போட்டிகளிலும் வென்றுள்ளது.

கேப் டவுன் நியூலேண்ட்ஸ் IND vs SA

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேப்டவுன் விக்கெட்டில் பிளவுகளும், புற்களும் அதிகமாக இருக்கும்.

மோசமடையுமா ஆடுகளம்?

இப்போதுள்ள நிலையைவிட கடைசி 2 நாட்களில் ஆடுகளத்தின் நிலைமை இன்னும் மோசமாகலாம். ஆடுகளத்தில் பந்து சமச்சீரற்ற வகையில் பவுன்ஸ் ஆகும், பேட்டர் எதிர்பாரா வகையில் ஸ்விங் ஆகி, பேட்டர் ஏன் களமிறங்கினோம் என்று மனதுக்குள் புலம்பும் வகையில் சித்ரவதை செய்யும் ஆடுகளமாக அடுத்துவரும் நாட்கள் மாறக்கூடும் என்று பிட்ச் ரிப்போர்ட் கூறுகிறது.

டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்வதுதான் சிறந்த முடிவாக இதற்கு முன்பு வரை இருந்தது என்பதால்தான் தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கரும் பேட் செய்தார்.

ஆனால், தங்களின் பேட்டிங் திறமை வெறும் 24 ஓவர்களுக்குள் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடும் என்று அவரே நினைக்கவில்லை. இந்த நியூலேண்ட்ஸ் மைதானம் செஞ்சூரியன் மைதானத்தைப் போலவே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் மைதானமாகும்.

விக்கெட்டில் பிளவுகளும், புற்களும் அதிகமாக இருக்கும். மேலும், விக்கெட்டில் தண்ணீர் ஊற்றி ரோலர் போடாமல், ரோலர் மட்டுமே உருட்டுவதால், ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சில் அதிகமாக ஸ்விங் ஆகும், பவுன்ஸரில் பந்து எகிறி பேட்டர்களை சித்ரவதை செய்யும்.

ஆனால், கடைசி இரு நாட்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் என்று நடுநிலையான பிட்ச் ரிப்போர்ட் தெரிவித்தாலும், இப்போதுள்ளநிலையில் 4வது நாள்வரை போட்டி செல்லுமா என்பது கேள்விக்குறிதான்.

கேப் டவுன் நியூலேண்ட்ஸ் IND vs SA

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேப்டவுன் நியூலேண்ட்ஸ் ஆடுகளத்தில் பந்துகள் சராமாரியாக பவுன்ஸ் ஆகி எகிறுகிறது

ஐசிசி விதிகளுக்கு உட்பட்டுதான் ஆடுகளம் அமைக்கப்பட்டதா?

ஐசிசி விதிகளில் ஆடுகளம் குறித்து தெரிவிக்கையில் ஒரு ஆடுகளம் பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது. ஆனால், தென்ஆப்பிரிக்காவில் செஞ்சூரியன், கேப்டவுன் ஆடுகளங்கள் இரண்டுமே பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஆடுகளங்களிலும் பேட்டர் ரன் சேர்ப்பதே அரிதாக இருக்கிறது, ஒரு பேட்டர் நீண்டநேரம் களத்தில் நிற்பதே அதிசயமாக இருக்கிறது.

இந்தியாவில் ஆகமதாபாத், சென்னை ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றார்போல் மாற்றப்பட்டுள்ளன என்று புகார் எழுந்தபோது ஐசிசி அப்போது அதில் தலையிட்டது. அதுபோன்று நியூலேண்ட்ஸ் மைதானத்தின் தரத்தையும் பார்வையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

ஆசியாவில் இதுபோன்று ஒரு போட்டியில் 23 விக்கெட்டுகள் ஒரு போட்டியில் வீழ்த்தப்பட்டு அது பெரிய சர்ச்சையாகியது, ஆடுகளங்களும் ஐசிசியால் ஆய்வு செய்யப்பட்டன.

ஒரு டெஸ்ட்போட்டி 3 நாட்களில் முடிந்து, ஒரு தரப்புக்கு உதவுமாறு அமைக்கப்பட்டால் ரசிகர்களின் விமர்சனங்கள் மோசமாக இருக்கும். தென்ஆப்பிரிக்காவில் வேகப்பந்துவீச்சுக்கு மட்டும் உதவுமாறு ஆடுகளங்களை அமைக்காதீர்கள் என்று முன்னாள் வீரர் ஷான் போலக்கூட விமர்சித்திருந்தார்.

ஆனால் கேப்டவுன் நியூலேண்ட்ஸ் ஆடுகளத்தில் பந்துகள் சராமாரியாக பவுன்ஸ் ஆகி எகிறுகிறது, பேட்டர்களால் பந்தை பேட்டால்கூட தொட முடியவில்லை, அதிகபட்ச ஸ்விங் ஆகிறது, செஞ்சூரியன் மைதானத்திலும் இதே நிலை இருந்தது. இதை அனைத்தைபும் பார்த்தஐசிசி போட்டி ரெப்ரி இந்த ஆடுகளங்களை நல்ல ஆடுகளங்கள் என்று தரச்சான்று அளித்துள்ளார்.

கேப் டவுன் நியூலேண்ட்ஸ் IND vs SA

பட மூலாதாரம், Getty Images

உள்நாட்டு அணிக்கே சிக்கலை ஏற்படுத்திய ஆடுகளம்

பொதுவாக உள்நாட்டில் போட்டி நடக்கும்போது, உள்நாட்டு அணியைக் கேட்டுத்தான் ஆடுகளம் வடிவமைப்பாளர் ஆடுகளத்தை தயார் செய்வார். இதுதான் அதிகாரபூர்வமற்ற நடைமுறையாக அனைத்து நாடுகளிலும் இருக்கிறது. ஆனால், செஞ்சூரியன், கேப்டவுன் ஆடுகளம் அமைக்கப்பட்ட விதத்தின் தார்மீகம் குறித்த கேள்வி எழுகிறது. பந்துவீச்சாளர்களுக்கு உதவக்கூடிய வகையில், ஆடுகளத்தை மோசமாக வடிவமைப்பது எந்த விதத்தில் நடுநிலையானது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்திய அணியின் பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வகையில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் ஏற்றார்போல் மாற்றப்பட்டது. ஆனால், முதலில் பலியானது என்னமோ 23.2 ஓவர்களில் தென்ஆப்பிரிக்காதான். புதிய பந்திலேயே இவ்வளவு மோசமாக ஆடுகளம் செயல்படுகிறது என்றால், பந்து தேய்ந்து பழசாகிவிட்டால் இன்னும் மோசமாக இருக்கும்.

தன்வினை தன்னைச் சுடும் என்பதுபோல், ஆடுகளத்தை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றாற்போல் அமைக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க அணி எடுத்து முடிவு, அந்த அணிக்கே “பேக் பயர்” ஆகிவிட்டது. ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் சரியும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

கேப் டவுன் நியூலேண்ட்ஸ் IND vs SA

பட மூலாதாரம், Getty Images

இந்தியப் பந்துவீச்சு எப்படியிருந்தது?

ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சாளர்ள் ,செஞ்சூரியன் மைதானத்தில் பந்துவீசியதைவிட, கூடுதல் துல்லியத்தன்மையுடனும், லைன் லென்த்திலும் வீசினர். ஆடுகளத்தில் பேட்டர்களால் பந்தை எதிர்கொண்டு ஆடமுடியவில்லை என்பதை தொடக்கத்திலேயே புரிந்து கொண்டு பவுன்ஸர்களை வீசி பேட்டர்களை மிரட்டினர்.

தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் ஆடுகளம் குறித்து அளித்த பேட்டியில் “ இந்த நியூலேண்ட்ஸ் ஆடுகளம் பொதுவாக மெதுவாக இருக்கும், பேட்டர்கள் அதற்கு ஏற்றாற்போல் தங்களை மாற்றிக்கொள்ள முடியும். இந்த ஆடுகளத்தில் 600 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று ஆடுகளத்தில் பந்துகள் பவுன்ஸர் ஆகியவிதம், வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றார்போல் மாறியவிதம் எனக்கு வியப்பாக இருக்கிறது. வெறும் கண்களில் பார்த்தால் ஆடுகளம் மோசமாக இருக்கும், ஆனால், நான் அப்படி மோசமானதாக இருக்கும் என நினைக்கவில்லை. உள்நாட்டுப் போட்டிகள் நல்லவிதமாக முடிந்துள்ளன, பேட்டர்களுக்கு சாதகமாகவும் இருந்துள்ளன. “

“ஆடுகளம், சூழல் ஆகியவற்றை அறிந்து நான்தான் முதலில் பேட் செய்ய வேண்டுமா என்பதை முடிவு செய்திருக்க வேண்டும். இந்திய பந்துவீச்சாளர்கள் சரியான லைன் லென்த்தில் பந்துவீசினர். கோலி, ரோஹித் சர்மா சரியான பந்துகளை தேர்வு செய்து பேட் செய்தனர். அவர்கள் சிரமப்பட்டதற்கு ஏற்றார்போல் ஸ்கோரும் கிடைத்தது. “

கேப் டவுன் நியூலேண்ட்ஸ் IND vs SA

பட மூலாதாரம், Getty Images

“இந்த ஆடுகளம் மோசமானது என்று என்னால் கூற முடியாது. தனிப்பட்ட ரீதியில் இந்த ஆடுகளத்தில் நல்ல ஸ்கோரை நான் எடுத்திருக்கிறேன். கிரேம் ஸ்மித்துக்கு அடுத்தார்போல் நான் அதிகமான ரன்களை கேப்டவுனில் அடித்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை ஆடுகளம் பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்குமாறு இருக்க வேண்டும், அமைக்க வேண்டும்.

ஆனால் தென் ஆப்பிரிக்காவில் பந்துவீச்சாளர்களுக்கு வசதியாக அமைப்பது தவறானது. பேட்டர்கள் வழக்கமான ஒழுக்கத்தைவிட கூடுதல் ஒழுக்கத்துடன் பேட் செய்ய வேண்டும், தங்களை ஆடுகளத்துக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொண்டு பேட் செய்ய வேண்டும், மனநிலையை கடுமையாக வைத்திருக்கவேண்டியது இதுபோன்ற ஆடுகளங்களில் அவசியம்” எனத் தெரிவித்தார்.

“இப்படி ஆடுகளத்தை நான் பார்த்து இல்லை”

தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஆஸ்வெல் பிரின்ஸ் ஆடுகளம் குறித்துக் கூறுகையில் “ நியூலேண்ட்ஸ் விக்கெட்டை இப்போது பார்த்ததுபோன்று இதற்குமுன் நான் பார்த்தது இல்லை. விக்கெட்டில் பந்து பட்டதும் வரும்வேகம், சமச்சீரற்ற பவுன்ஸர், சீமிங், ஸ்விங் அனைத்துமே வித்தியாசமாக இருந்தது. ஒருநாளில் ஒரு இன்னிங்ஸும் முடியும் அளவுக்கு நியூலேண்ட்ஸ் விக்கெட்டை இதற்கு முன் நான் பார்த்து இல்லை.

பேட்டர்கள் இந்த ஆடுகளத்தில் பேட் செய்வது கடினமாக இருந்ததைப் பார்த்தேன். ஒரு பந்து தாழ்வாக பவுன்ஸராகிறது, மற்றொரு பந்து மார்புக்கு நேரே வருகிறது. பந்து இந்த அளவுக்கு சீமிங், ஸ்விங் ஆவதற்கு காலநிலையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நான் நினைக்கவில்லை. முதலில் நாளில் இப்படி இருக்கலாம் அடுத்துவரும் நாட்களும் இதுபோன்ற நிலை தொடர்ந்தால் அது கவலைப்படக்கூடியதுதான்” எனத் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)