பிரிட்டன் சென்ற ரஷ்ய இளைஞரின் 2,000 ஆண்டுக்கால மர்மத்தை உடைத்த விஞ்ஞானிகள்

டிஎன்ஏ சோதனை மூலம் கண்டுபிடித்த ஆய்வாளர்கள்

பட மூலாதாரம், ©MOLA HEADLAND INFRASTRUCTURE

படக்குறிப்பு, இந்த இளைஞர் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு ரோமானியப் பேரரசின் மிகத் தொலைவான ஒரு பகுதியில் இருந்து கேம்பிரிட்ஜ்ஷயருக்கு பயணம் செய்ததாக டிஎன்ஏ பகுப்பாய்வு காட்டுகிறது.
    • எழுதியவர், பல்லப் கோஷ்
    • பதவி, பிபிசி நியூஸ்

தற்போதைய தெற்கு ரஷ்யாவுக்கு அருகில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த இளைஞர் ஒருவர் எப்படி பிரிட்டனில் தனது கடைசி கால வாழ்க்கையை வாழ முடிந்தது?

ரோமன் பிரிட்டனின் வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும்போது டிஎன்ஏ ஆய்வாளர்கள் அந்த இளைஞரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

கேம்பிரிட்ஜ்ஷயரில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு சர்மாடியன்ஸ் எனப்படும் நாடோடிக் குழுவைச் சேர்ந்த மனிதருடையது என்று இந்த ஆராய்ச்சி காட்டுகிறது.

இந்த மக்கள் ரோமானியப் பேரரசின் தொலைதூரப் பகுதிகளில் இருந்து பிரிட்டனுக்கு வந்தனர் என்பதற்கும், சிலர் கிராமப்புறங்களில் வாழ்ந்தார்கள் என்பதற்கும் இது முதல் உயிரியல் சான்றாக அமைந்துள்ளது.

கேம்பிரிட்ஜ் மற்றும் ஹண்டிங்டன் இடையே A14 சாலையை மேம்படுத்துவதற்காகக் குழிகளை ஏற்படுத்தியபோது இந்த இளைஞரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுபோன்ற சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும் அறிவியல் நுட்பங்கள், பெரிய வரலாற்று நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள சாதாரண மக்களின் பொதுவாகச் சொல்லப்படாத கதைகளை வெளிப்படுத்த உதவும்.

லட்சக்கணக்கான ஆண்டுகள் பழமையான புதைபடிவ எலும்புத் துண்டுகளில் உள்ள மரபணுக் குறியீட்டைப் படிப்பதும் இந்த அறிவியல் நுட்பங்களில் அடங்கும். இது ஒரு நபரின் இனத் தோற்றத்தைக் காட்டுகிறது.

டிஎன்ஏ சோதனை மூலம் கண்டுபிடித்த ஆய்வாளர்கள்

பட மூலாதாரம், STEPHEN POTVIN

படக்குறிப்பு, டாக்டர் மெரினா சில்வா பண்டைய டிஎன்ஏவை பிரித்தெடுத்து ஆய்வு செய்து அதன் மரபணு குறியீட்டைப் புரிந்துகொண்டார்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு மனிதனின் முழுமையான, நன்கு பாதுகாக்கப்பட்ட எலும்புக்கூட்டைக் கண்டுபிடித்துள்ளனர். அந்த எலும்புக்கூட்டுக்கு அவர்கள் Offord Cluny 203645 என்று பெயரிட்டுள்ளனர்.

அந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ்ஷயர் கிராமத்தின் பெயர் மற்றும் அவரது மாதிரி எண் ஆகியவற்றின் கலவையாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவர் ஒரு பள்ளத்தில் தனிப்பட்ட உடைமைகள் இல்லாமல் தானாகவே புதையுண்டதால் அவரது அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கு சிறிது கூடுதலாகப் பணியாற்ற வேண்டியிருக்கிறது.

லண்டனில் உள்ள பிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிடியூட்டின் பண்டைய மரபியல் ஆய்வகத்தின் டாக்டர் மரினா சில்வா, முழு எலும்புக்கூட்டின் சிறந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்த அவரது உள் காதில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறிய எலும்பில் இருந்து Offord Cluny 203645-இன் பண்டைய டிஎன்ஏவை பிரித்தெடுத்து ஆய்வு செய்தார்.

அதுகுறித்து விளக்கியவர், "இது உயிருடன் இருக்கும் ஒருவரின் டிஎன்ஏவை சோதனை செய்வது போல் இல்லை" என்றார். "டிஎன்ஏ மிகவும் துண்டுதுண்டாக மாறியுள்ளதுடன், மிகவும் சேதமடைந்துள்ளது. இருப்பினும், எங்களால் போதுமான அளவு அதில் அடங்கியிருந்த விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.”

"நாங்கள் பார்த்த முதல் விஷயம் என்னவென்றால், மரபணு ரீதியாக அவர் இதுவரை ஆய்வு செய்யப்பட்ட பிற ரோமானோ-பிரிட்டிஷ் நபர்களிடம் இருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தார் என்பதுதான்."

சமீபத்திய பண்டைய டிஎன்ஏ பகுப்பாய்வு முறைகள், சமீப காலம் வரை, ஆவணங்கள் மற்றும் தொல்பொருள் சான்றுகளால் மட்டுமே புனரமைக்கப்பட்ட நிகழ்வுகளின் பின்னால் உள்ள மனிதக் கதைகளை இப்போது வெளிப்படுத்த முடிகிறது. இவை பெரும்பாலும் செல்வந்தர்கள் மற்றும் சக்தி வாய்ந்தவர்களின் கதைகளையே கூறுகின்றன.

டிஎன்ஏ சோதனை மூலம் கண்டுபிடித்த ஆய்வாளர்கள்

பிரிட்டனை ரோமானியர்கள் ஆக்கிரமித்திருந்தபோது, ​​கிபி 126 மற்றும் 228க்கு இடையில் கேம்பிரிட்ஜ்ஷயரில் ஒரு பள்ளத்தில் புதைக்கப்பட்ட ஒரு இளைஞன் - ஒரு சாதாரண மனிதனின் - மர்மத்தை அவிழ்க்க அதிநவீன தடயவியல் அறிவியலைப் பயன்படுத்தும் ஒரு துப்பறியும் கதையாகத்தான் சமீபத்திய ஆராய்ச்சி பார்க்கப்படுகிறது.

முதலில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் Offord Cluny 203645 ஒரு உள்ளூர் மனிதனின் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு என்று நினைத்தார்கள். ஆனால் டாக்டர் சில்வாவின் ஆய்வகத்தில் டிஎன்ஏ பகுப்பாய்வு செய்யப்பட்டதில், அவர் ரோமானியப் பேரரசின் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்தவர் என்பதைக் காட்டுகிறது. இது தற்போது ரஷ்யா, ஆர்மீனியா மற்றும் யுக்ரேனின் தெற்குப் பகுதியில் உள்ளது.

இந்தப் பகுப்பாய்வு அவரை ஒரு சர்மாடியன் என்று காட்டியுள்ளது. அந்த மனிதர்கள் இரானிய மொழி பேசும் மக்கள் என்பதுடன், குதிரை சவாரி திறமைக்குப் பெயர் பெற்றவர்களாக விளங்கினர்.

அப்படியானால், சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஓரிடத்துக்கு அவரால் எப்படிச் செல்ல முடிந்தது?

இந்தக் கேள்விக்கான பதில்களைக் கண்டுபிடிக்க, டர்ஹாம் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறையைச் சேர்ந்த ஒரு குழு, அவரது புதைபடிவ பற்களை ஆய்வு செய்ய மற்றோர் அற்புதமான பகுப்பாய்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. அதில் அவர் சாப்பிட்ட பொருட்களின் ரசாயன தடயங்கள் உள்ளன.

டிஎன்ஏ சோதனை மூலம் கண்டுபிடித்த ஆய்வாளர்கள்

பட மூலாதாரம், MOLA HEADLAND INFRASTRUCTURE

படக்குறிப்பு, அவரது பற்களைப் பகுப்பாய்வு செய்ததில் அவரது ஐந்து வயதிலிருந்தே தனது உணவு வகைகளை அவர் படிப்படியாக மாற்றிக் கொண்டதைக் காட்டுகிறது.

பற்கள் காலப்போக்கில் வளரும் என்ற நிலையில், மர வளையங்களைப் போலவே, ஒவ்வொரு அடுக்கும் அந்த நேரத்தில் அவற்றைச் சுற்றியுள்ள ரசாயனங்களின் அச்சுகளைப் பதிவு செய்கின்றன.

இந்தப் பகுப்பாய்வில், அவர் ஆறு வயது வரை, சர்மாடியன்கள் வாழ்ந்ததாக அறியப்பட்ட பகுதியில் ஏராளமாக இருக்கும் C4 பயிர்கள் என்று அறிவியல் ரீதியாக அறியப்படும் தானியங்களைச் சாப்பிட்டார் எனத் தெரிய வந்துள்ளது.

ஆனால் காலப்போக்கில், மேற்கத்திய ஐரோப்பாவில் காணப்படும் இந்த தானியங்கள் மற்றும் அதிகமான கோதுமையின் நுகர்வு படிப்படியாகக் குறைவதைப் பகுப்பாய்வு காட்டுகிறது என்று பேராசிரியர் ஜேனட் மாண்ட்கோமெரி கூறுகிறார்.

"இப்பகுப்பாய்வு அவர் அவருடைய காலத்தில் பிரிட்டனுக்கு பயணம் செய்தார் என்று நமக்குச் சொல்கிறது. அவர் வளர்ந்தவுடன், அவர் மேற்கு நோக்கி இடம்பெயர்ந்தார். அதன் பிறகு, இந்தத் தாவரங்கள் அவரது உணவில் இருந்து மறைந்துவிட்டன."

டிஎன்ஏ சோதனை மூலம் கண்டுபிடித்த ஆய்வாளர்கள்

பட மூலாதாரம், CONRAD CICHORIUS

படக்குறிப்பு, கி.பி. 175 இல் ரோமானியப் படைகளால் சர்மாடியன் ராணுவம் தோற்கடிக்கப்பட்டதை சித்தரிக்கும் காட்சி.

Offord Cluny 203645 ஒரு குதிரைப்படை வீரனின் மகனாக இருந்திருக்கலாம் அல்லது அவருடைய அடிமையாக இருந்திருக்கலாம் என்று வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. அவர் வாழ்ந்த காலத்தில், ரோமானிய ராணுவத்தில் இணைக்கப்பட்ட சர்மாடியன் குதிரைப்படை பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்டதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சாலைப் பணிகளுக்காக குழிகளை ஏற்படுத்திய பிரிவுக்குத் தலைமை தாங்கிய நிறுவனமான மோலா ஹெட்லேண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் அலெக்ஸ் ஸ்மித்தின் கருத்துப்படி, டிஎன்ஏ ஆதாரம் இந்த உண்மையை உறுதிப்படுத்துகிறது.

"இது முதல் உயிரியல் ஆதாரம்," என்று அவர் பிபிசியிடம் பேசுகையில் கூறினார். "இந்த டிஎன்ஏ மற்றும் வேதியியல் பகுப்பாய்வு நுட்பங்ள் நம்மிடையே இருப்பதால், பண்டைய சமூகங்கள் எவ்வாறு உருவாகின, ரோமானிய காலத்தில் அவை எப்படி இயங்கின என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி இப்போது நாம் வெவ்வேறு கேள்விகளைக் கேட்க முடியும்.”

"நகரங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் அதிக எண்ணிக்கையில் மக்களின் செயல்பாட்டு இயக்கம் இருந்ததாக இது அறிவுறுத்துகிறது."

டிஎன்ஏ சோதனை மூலம் கண்டுபிடித்த ஆய்வாளர்கள்

பட மூலாதாரம், ©MOLA HEADLAND INFRASTRUCTURE

படக்குறிப்பு, கேம்பிரிட்ஜ் மற்றும் ஹண்டிங்டன் இடையே ‘A14’ சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் குழிகள் தோண்டப்பட்டபோது, இந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கிரேக்கத்தில் உள்ள பழங்கால மரபியல் ஆய்வகத்தின் தலைவர் டாக்டர் பொன்டஸ் ஸ்கோக்லண்ட் இது குறித்துப் பேசுகையில், இந்தப் புதிய தொழில்நுட்பம் கடந்த காலத்தைப் பற்றிய நமது புரிதலை மாற்றுகிறது என்று பிபிசியிடம் கூறினார்.

"இன்றுவரை பண்டைய டிஎன்ஏவின் முக்கிய தாக்கம் கற்கள் மற்றும் வெண்கல யுகங்களைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துகிறது. ஆனால் சிறந்த நுட்பங்களுடன், ரோமானிய மற்றும் பிற்கால மக்களைப் பற்றிய நமது புரிதலையும் இப்போது மாற்றத் தொடங்குகிறோம்."

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)