சுட்டெரிக்கும் சூரியனை தொட்டுப் பார்க்க தயாராகும் நாசா - எப்படி சாத்தியம்?

பட மூலாதாரம், NASA-JHU-APL
- எழுதியவர், ஜொனாதன் அமோஸ்
- பதவி, பிபிசி நியூஸ், அறிவியல் செய்தியாளர்
விண்வெளி ஆய்வு வரலாற்றில் தற்போதைய காலகட்டம் ஒரு குறிப்பிடத்தக்க தருணமாக இருக்கும் என்று உறுதியாகத் தெரிகிறது.
இன்னும் ஓராண்டு கழித்து, டிசம்பர் 24 அன்று, நாசாவின் ‘பார்க்கர் சோலார் ப்ரோப்’ மணிக்கு சுமார் 7 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைக் கடந்து செல்லும்.
மனிதனால் இதுவரை உருவாக்கப்பட்ட எந்தப் பொருளும் இவ்வளவு வேகமாக நகர்ந்திருக்காது அல்லது உண்மையில் சூரியனுக்கு மிக அருகில் சென்றிருக்காது. அதாவது சூரியனின் "மேற்பரப்பிற்கு" வெறும் 6.1 மில்லியன் கிலோமீட்டர் அல்லது 3.8 மில்லியன் மைல்கள் தொலைவுக்குச் சென்றிருக்காது.
"நாம் அடிப்படையில் கிட்டத்தட்ட ஒரு நட்சத்திரத்தில் இறங்குகிறோம்," என்று பார்க்கர் திட்ட விஞ்ஞானி டாக்டர் நூர் ரவுவாஃபி கூறினார்.
"இது மனித இனத்திற்கும் ஒரு மகத்தான சாதனையாக இருக்கும். இது 1969ஆம் ஆண்டு நிலவில் இறங்கியதற்குச் சமம்" என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பயன்பாட்டு இயற்பியல் ஆய்வக விஞ்ஞானி பிபிசி செய்தியிடம் கூறினார்.
சூரியனின் ஈர்ப்பு விசை காரணமாக அங்கே பார்க்கர் விண்கலம் விழும்போது அதன் வேகம் அபரிமிதமான ஈர்ப்பு விசையால் உருவாகும். இது நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு 30 விநாடிகளுக்குள் பறந்து செல்வதற்கு ஒப்பானது.

பட மூலாதாரம், NSO/NSF/AURA
அமெரிக்க விண்வெளி ஏஜென்சியான நாசாவின் ‘பார்க்கர் சோலார் ப்ரோப்’ இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிக துணிச்சலான திட்டங்களில் ஒன்று.
இந்தத் திட்டம் 2018இல் தொடங்கப்பட்டது. இது சூரியனுக்கு மிக அருகில் செல்லும் முயற்சிகளை இலக்கைக் கொண்டுள்ளது.
‘பார்க்கர்’ விண்கலம் 2024இன் பிற்பகுதியில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தில் (149 மில்லியன் கிமீ/93 மில்லியன் மைல்கள்) வெறும் 4% மட்டுமே கடக்க வேண்டியிருக்கும்.
சூரியனுக்கு அவ்வளவு நெருக்கமாகச் செல்ல பார்க்கர் விண்கலம் எதிர்கொள்ளும் சவால் மிகப் பெரியதாக இருக்கும். அப்போது பெரிஹேலியனில், விண்கலத்தின் முன்பகுதியில் உள்ள வெப்பநிலை 1,400 செல்ஷியஸை அடையும்.
தடிமனான வெப்ப கவசத்திற்குப் பின்னால் இருந்து பயன்படுத்தப்படும் கருவிகளின் தொகுப்பைக் கொண்டு சூரியனின் சூழலை அளவீடு செய்வதே பார்க்கரின் உத்தி.
இதன் பயனாக, சூரியனில் என்ன நடக்கிறது என்பது குறித்து சில முக்கிய தகவல்களைப் பற்றிய எதிர்பாராத அளவுக்குப் புதிய விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இவற்றில் முதன்மையானது, சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கரோனாவின் செயல்பாடுகள் பற்றிய தெளிவான விளக்கமாகும்.

பட மூலாதாரம், S R HABBAL AND M DRUCKMÜLLER
எதிர்-உள்ளுணர்வு சூப்பர் ஹீட்டிங் போலத் தோன்றுவதை இது அனுபவிக்கிறது. சூரியனின் ஒளிக்கோளத்தில், மேற்பரப்பின் வெப்பநிலை தோராயமாக 6,000 செல்ஷியஸ். ஆனால் கரோனாவுக்குள் அது ஒரு மில்லியன் டிகிரி மற்றும் அதற்கும் அதிகமாக இருக்கும்.
நட்சத்திரத்தின் அணுக்கரு மையத்தில் இருந்து தொலைவில் வெப்பநிலை குறையும் என்று நீங்கள் நினைக்கலாம்.
மின்னூட்டம் கொண்ட துகள்களின் வெளிப்புற ஓட்டம் - எலக்ட்ரான், புரோட்டான் மற்றும் கனமான அயனிகள் - திடீரென்று விநாடிக்கு 400 கி.மீ வேகத்தில் நகரும் சூப்பர்சோனிக் காற்றாற்றலாக முடுக்கி விடப்படுவதும் கரோனா பகுதிக்குள்தான்.

பட மூலாதாரம், NASA/JHU-APL/NRL
விஞ்ஞானிகளால் இதை இன்னும் முழுமையாக விளக்க முடியவில்லை. ஆனால் சூரியனின் தன்மை மற்றும் "விண்வெளி வானிலை" நிகழ்வின் முன்னறிவிப்புகளை மேம்படுத்துவதற்கு இது மிகவும் முக்கியமானது.
மற்றொன்று, சூரியனில் இருந்து வரும் துகள்கள் மற்றும் காந்தப்புலங்களின் சக்தி வாய்ந்த வெடிப்புகளைக் குறிக்கிறது. அவை பூமியில் உள்ள தகவல் தொடர்புகளைச் சீர்குலைப்பது மட்டுமின்றி மின் கட்டமைப்புகளைக்கூட தகர்க்கலாம். விண்வெளி வீரர்களுக்கு இது போன்ற கதிர்வீச்சு உடல்நல அபாயங்களையும் ஏற்படுத்துகிறது.
"இது ஒரு புதிய பரிமாணத்தைப் பெறுகிறது. குறிப்பாக இப்போது நாங்கள் மனிதர்களை மீண்டும் சந்திரனுக்கு அனுப்பவும், சந்திர மேற்பரப்பில் நிரந்தர முகாமை அமைக்கவும் யோசித்து வருகிறோம்," என்று டாக்டர் ரவுவாஃபி கூறினார்.

பட மூலாதாரம், BLUE ORIGIN
சுட்டெரிக்கும் சூரியனை தொட்டுப் பார்க்க தயாராகும் நாசா
பார்க்கர் விண்கலம் வெள்ளிக்கிழமை சூரியனை மிக அருகில் நெருங்கும் முயற்சிகளில் ஒன்றை மேற்கொண்டது. அதன் சுற்றுப்பாதையை வளைத்து நவம்பர் மாதத்துக்கு முன் வீனஸை சுற்றி வந்து சூரியனை மிக நெருக்கமாகத் தொட அடுத்த ஆண்டு மேலும் மூன்று முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இப்படி 2024 டிசம்பரில் ஒரு வரலாற்று நிகழ்வை பார்க்கர் ஏற்படுத்தும்.
நாசாவில் அறிவியல் துறையின் தலைவராக டாக்டர் நிக்கி ஃபாக்ஸ் பணியாற்றுகிறார். அவர் தனது தற்போதைய பொறுப்புக்கு வந்ததற்கு முன்பாக பார்க்கர் திட்டத்தின் முன்னணி விஞ்ஞானியாக இருந்தார்.
டிசம்பர் 2024இல் பார்க்கர் விண்கலம் நிகழ்த்தும் இந்த நிகழ்வின் முக்கிய நன்மை என்னவென்றால், சூரியனின் கரோனாவில் மிக அதிக நேரம் அது இருக்கப் போகிறது. இதற்கு முன் இல்லாததைவிட அந்தக் காலகட்டம் அதிகமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
"நாங்கள் எதைக் கண்டுபிடிப்போம் என்று எங்களுக்குத் தெரியாத. ஆனால் வெப்பத்துடன் தொடர்புடைய சூரியக் காற்று ஆற்றலில் அலைகளைத் தேடுவோம்," என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார்.
"பல ஆண்டுகளாக மக்கள் வாதிடும் செயல்முறைகளின் கலவையைச் சுட்டிக்காட்டும் பல்வேறு வகையான அலைகளை நாங்கள் உணர்வோம் என்று நான் நம்புகிறேன்."
இந்த 2024ஆம் ஆண்டு பார்க்கருடைய பணியின் உச்சமாக இருக்கும்; டிசம்பர் மாதத்திற்குப் பிறகு அது சூரியனை நெருங்க முடியாது. ஏனென்றால் அதன் சுற்றுப்பாதை வீனஸை சுற்றியே இருந்து சூரியனை நோக்கி இன்னும் தெளிவான பாதையில் பயணிக்கக் கற்றுக்கொள்ளும். அதோடு வேறு பல காரணங்களும் உள்ளன.
ஆனால் சூரியனுக்கு மிக அருகில் செல்வது, பார்க்கரின் பெரிய நோக்கத்தின் நிழலைச் சுருக்கி, விண்கலத்தின் பின்புறத்தைத் தாங்க முடியாத வெப்பநிலைக்கு உட்படுத்தும் அபாயமும் ஏற்படலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












