காஸா மருத்துவமனை குண்டு வெடிப்பு - காணொளிகள், படங்கள் கூறுவது என்ன?

- எழுதியவர், பால் பரவுன், ஜோஷ்வா சீதம், சியான் செட்டான், டேனியல் பாலும்போ
- பதவி, பிபிசி வெரிஃபை
காசா நகரில் அதிக நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் அல்-அஹ்லி மருத்துவமனையில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
காசாவில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனிய அதிகாரிகள், இந்த வான்வழித் தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டதாகக் கூறி உடனடியாக இஸ்ரேலைக் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இஸ்ரேல் தாம் அதில் ஈடுபடவில்லை என மறுத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கும் மறுப்புக்கும் இடையில், உண்மையைக் கண்டறிதல் மென்மேலும் கடினமாகியுள்ளது.
பிபிசி வெரிஃபை மூலமாக வீடியோ காட்சிகள், ஒளிப்படங்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் தகவல்கள் உள்ளிட்ட ஆதாரங்களைக் கொண்டு அறியப்படாத செய்திகளை அறிந்துகொள்ள முயன்று வருகிறோம். மேலும், செல்வதற்கு வாய்ப்பு குறைவான, குண்டுவெடிப்பு நடந்த அந்த இடத்துக்கு பிபிசி செய்தியாளர் நேரிலும் சென்றுள்ளார்.
அவ்வப்போது புதிய தகவல்கள் வெளிவருகின்றன, எனவே கிடைக்கும் புதிய தகவல்கள், ஆதாரங்களைப் பற்றிய நிபுணர்களின் தகவல்களைக் கொண்டு இந்தக் கட்டுரையை அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.
மேலும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விசயம், நேரடியாக நடக்கும் மோதல்களைப் போலவே தகவல்களின் தளத்திலும் இந்த விசயத்தில் மோதல்கள் நடந்து வருகிறது என்பதாகும். இஸ்ரேலிலும், காசாவிலும் உள்ள அதிகாரிகள் குண்டுவெடிப்பைக் குறித்து மாறுபட்ட தகவல்களை வழங்குவது இது முதல் முறை அல்ல. அவர்களுடைய பல்வேறு அறிக்கைகளையும் கூற்றுகளையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.
குண்டுவெடிப்பு
செவ்வாய்க்கிழமை, காசாவின் உள்ளூர் நேரப்படி 19:00 மணியளவில் (16:00 GMT) மருத்துவமனை வெடிப்பு ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் பரவிய குண்டுவெடிப்பைக் காட்டும் 20 வினாடி வீடியோவே, சம்பவத்தின் குறிப்பிடத்தக்க முதல் காட்சி ஆதாரமாகும்.
அதில், ஏவுகணைகளின் விசில் சத்தத்தையும், அதைத் தொடர்ந்து வெடிப்பு மற்றும் பெரிய நெருப்பு பிழம்பையும் காண முடியும்.
உள்ளூர் நேரப்படி 18:59 மணிக்கு ஒளிபரப்பான அல்-ஜசீரா தொலைக்காட்சியின் இணையவழி நேரடிக் காட்சிகளில் காஸாவிற்கு மேலே வானத்தில் ஒரு பிரகாசமான ஒளி எழுவதைக் காண முடிந்தது. இரண்டுமுறை ஒளிக்கீற்று கிளம்பியது, கடும் திசைமாற்றத்திற்கு பின், வெடிச்சத்தம் கேட்டது.
பின்னர், தரையில் தொலைவில் ஒரு வெடிப்பு ஏற்படுவதை காண முடிகிறது. அதைத் தொடர்ந்து கேமரா ஆபரேட்டருக்கு அருகில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்படுகிறது. இது பிபிசி ஜியோலொக்கேட் செய்து கண்டறிந்துள்ளது.
இவை வெகு தொலைவில் நடைபெற்ற ஏவுகணை வெடிப்பில் இருந்து வந்திருக்கலாம் என சிலர் கூறுகின்றனர்.
சமூக ஊடக சேனல்களில் வெளிவந்த மற்ற காட்சிகளும் வெவ்வேறு கோணங்களில், வேறுபட்ட தொலைவில் இருந்து ஒரே குண்டுவெடிப்பினை காட்டுவதாக அமைந்தன.
ஆயுதங்களைப் பற்றிய நிபுணத்துவம் கொண்ட 20 அறிஞர்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் நிறுவனங்களை நாம் இது பற்றி அறிந்துகொள்ள தொடர்புகொண்டோம். அவர்களில் ஒன்பது பேர் இன்னும் பதிலளிக்கவில்லை, ஐந்து பேர் கருத்து கூற விரும்பவில்லை. எனவே மீதமுள்ள ஆறு நிபுணர்களிடம் பேசினோம்.
கிடைத்துள்ள ஆதாரங்கள் - வெடிப்பின் அளவு மற்றும் முன்பே கேட்ட ஒலிகள் உள்ளிட்டவைகளை வைத்து – மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய முடியுமா என்று நாங்கள் கேட்டோம்.
இதுவரை, இந்த விபரங்களை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. நாங்கள் பேசிய மூன்று வல்லுநர்கள், ஒரு பெரிய வெடிமருந்து கொண்ட வழக்கமான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் இருந்து உருவாகும் விளைவுகளோடு இது ஒத்துப்போகவில்லை என்று கூறுகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான ஜே ஆண்ட்ரெஸ் கேனன் கூறுகையில், தரையில் ஏற்பட்டுள்ள வெடிப்புகள் சிறியதாகத் தென்படுகின்றன. அதாவது இந்த வெடிப்பின் தாக்கத்திலிருந்து உருவாகிய வெப்பம் ஒரு ஏவுகணையிலிருந்து இருந்து ஏவப்பட்டதை விடவும், எஞ்சிய ராக்கெட் எரிபொருளால் ஏற்பட்டிருக்கலாம் என்றே தெரிகிறது என்கிறார்.

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் ஜஸ்டின் பிராங்க் இதை ஒப்புக்கொள்கிறார். ஆரம்பக் கட்ட ஆதாரங்களை கொண்டு சொல்வது கடினம் என்றாலும், ஒரு தோல்வியுற்ற ராக்கெட்டின் பகுதி, கார் நிறுத்தத்தில் மோதியதால் ஏற்பட்ட தாக்கத்தில் எரிபொருள் மற்றும் உந்துவிசை உருவாக்கிய நெருப்பில் இருந்து இந்த வெடிப்பு ஏற்பட்டது போல் தெரிகிறது என்று அவர் கூறுகிறார்.
அவருக்கு பார்க்கக் கிடைத்த காட்சிகளில் இருந்து ஏவுகணைகள் அதன் இலக்கினை தாக்கியதா என்பதைத் தீர்மானிக்க முடியாது என்று கேனன் கூறுகிறார். வானத்தில் ஏற்படும் ஒளித் தெறிப்புகள் எஞ்சின் அதிக வெப்பமடைந்து வேலை செய்வதை நிறுத்திய ராக்கெட்டைக் குறிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
இடர்களைப் பற்றிய மதிப்பீட்டு நிறுவனமான சிபிலைனின் மத்திய கிழக்கு ஆய்வாளரான வலேரியா ஸ்குடோ, ட்ரோன்களை பயன்படுத்தி வான்வழித் தாக்குதலை நடத்தும் திறன் இஸ்ரேலுக்கு உள்ளது என்று குறிப்பிடுகிறார், அதன் வழியாக அவர்கள் ஹெல்ஃபயர் ஏவுகணைகளைப் பயன்படுத்தலாம். இந்த ஏவுகணைகள் கணிசமான அளவு வெப்பத்தை உருவாக்குகின்றன, ஆனால் பெரிய பள்ளத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது என்கிறார். இருப்பினும் உறுதிப்படுத்தப்படாத இந்த வீடியோ காட்சிகளில் மருத்துவமனை தளத்தில் தீப்பிடித்த விதம், இந்த விளக்கத்துடன் ஒத்துப்போவதாக இல்லை என்கிறார் அவர்.
குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து காட்சி ஆதாரம்

கட்டடம் குறித்த தகவல்களை, அல்-அஹ்லி மருத்துவமனை தளத்தின் அமைப்பையும் பொதுவில் கிடைக்கும் செயற்கைக்கோள் படங்களுடன் பொருத்தி, குண்டுவெடிப்பு நடந்த இடம் மருத்துவமனை தான் என நிறுவ பி.பி.சியால் முடிந்தது.
கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியான முற்றத்தில் வெடிப்பு நிகழ்ந்ததாகத் தெரிகிறது. குண்டுவெடிப்புக்குப் பிறகு நிலத்தின் படங்கள் சுற்றியுள்ள மருத்துவமனை கட்டிடங்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதாக காண்பிக்கவில்லை. எரிந்த புள்ளிகள் மற்றும் எரிந்த கார்கள் ஆகியவற்றை படங்கள் காட்டுகின்றன.
இந்த மருத்துவமனை ஆங்கிலிக்கன் தேவாலயத்திற்கு சொந்தமானது, அவர்களால் நடத்தப்படுவது ஆகும்.
ஜெருசலேமில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கல்லூரியைச் சேர்ந்த டீன் கேனான் ரிச்சர்ட் செவெல் கூறும்போது தாக்குதல் நடந்த சமயத்தில் இடம்பெயர்ந்து வந்திருந்த சுமார் 1,000 மக்கள் முற்றத்தில் தஞ்சம் அடைந்ததாகவும், சுமார் 600 நோயாளிகளும் ஊழியர்களும் கட்டிடத்திற்குள் இருந்ததாகவும் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள்
அல்-அஹ்லி மருத்துவமனைக்கு பிபிசி நிருபர் ருஷ்டி அபுலூஃப் சென்றுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அங்கு பேரழிவு ஏற்பட்டதாகவும், இறந்தவர்களின் உடல்கள் இன்னும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறுகின்றார்.
வெடிப்பு நடந்தபோது, பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மருத்துவமனையில் இருந்ததாக ஒருவர் செய்தியாளரிடம் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களின் காயங்களின் தன்மையிலிருந்து குண்டுவெடிப்பு பற்றி எண்ண கண்டறிய முடியும் என்பதற்காக இன்னும் படங்களையும் காட்சிகளையும் பகுப்பாய்வு செய்து வருகிறோம்.
வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் மோசமான படங்களை பிபிசி பார்த்தது, அவை மிக மோசமான காயங்களைக் காட்டுகின்றன.
இங்கிலாந்தின் மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பின் நிறுவனர் உறுப்பினரும், மோதல் காயங்கள் துறை மருத்துவ நிபுணருமான நிபுணர் டெரிக் பவுண்டர் சில படங்களைப் பார்த்தார்.
"சிதறல் காயங்கள் வெடிப்பின் விளைவாக வீசப்பட்ட துண்டின் தாக்கத்தில் உருவாகியிருக்கலாம்" என்று அவர் கூறினார்.
ஆனால் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உள்ள படங்களில் காயங்கள் அனைத்தையும் தெளிவாகக் கண்டுபிடிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
இந்த குண்டுவெடிப்பில் 471 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) இந்த எண்ணிக்கை வேண்டுமென்றே கூடுதலாக சொல்லப்படுவதாக தெரிவிக்கிறது. எத்தனை பேர் இறந்தார்கள் என்பது பற்றிய அதன் சொந்த மதிப்பீட்டை வெளியிடவில்லை. சுயாதீன அமைப்புகள் எவையும் இந்த தளத்தினை அணுக முடியாததால், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை சரிபார்க்க கடினமாக உள்ளது.

நமக்கு இன்னும் தெரியாதது என்ன?
வெடிப்பால் உருவாகிய பள்ளத்தின் தன்மை மிக முக்கியமான சான்றுகளில் ஒன்று ஆகும்.
ஒரு பெரிய பள்ளம் இல்லாததும், அடுத்தடுத்த கட்டிடங்களில் வெடிப்பும், சேதமும் உருவாக்காததும் தங்களுடைய ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை என நிரூபிப்பதாக IDF கூறுகிறது.
மேலே உள்ள படத்தில், நீங்கள் ஒரு சிறிய பள்ளத்தைக் காணலாம், மற்ற அடையாளங்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.
கிடைக்காத ஆதாரங்களின் மற்றொரு முக்கிய பகுதி ஏவுகணை துண்டுகள் ஆகும். ஏவுகணைகள் பெரும்பாலும் அவற்றின் வெளிப்புற பகுதியின் மிச்சங்களால் அடையாளம் காணப்படுகின்றன, மேலும் அவை ஏவுகணைகளின் உருவாக்கம் பற்றி அறிய பயன்படும். ஆனால் இந்த தாக்குதலில் மேற்சொன்ன ஆதாரத்தை நாங்கள் காணவில்லை.
பாலத்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) என்ற அமைப்பு தாங்கள் ஏவிய ஏவுகணைகளால் மருத்துவமனை தாக்கப்பட்டதை ஒப்புக்கொண்டிருப்பதாக இரண்டு ஹமாஸ் போராளிகளுக்கு இடையே நடந்த உரையாடல் என்று கூறி IDF ஒரு உரையாடலை வெளியிட்டுள்ளது. PIJ என்ற அமைப்பு காஸாவில் இரண்டாவது பெரிய போராளிக் குழுவாகும், அந்த அமைப்பு இஸ்ரேல் மீதான ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலை ஆதரித்தது.
இந்த பதிவையும் சுயாதீனமாக சரிபார்க்க முடியாத நிலை உள்ளது. PIJ வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தமக்கு இந்த வெடிப்பில் தொடர்பும் இல்லை என்று மறுத்ததுடன், குண்டுவெடிப்புக்கு இஸ்ரேலை குற்றம் சாட்டியுள்ளது.
கூடுதல் தகவல்கள்: விஷுவல் ஜர்னலிசம் குழு, டாம் ஸ்பென்சர், ஷயன் சர்தாரிசாதே, எம்மா பெங்கல்லி மற்றும் ஜேமி ரியான்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)













