ஒரே ரத்த பரிசோதனை மூலம் 50 வகை புற்றுநோய்களை கண்டறியலாம் - புதிய ஆய்வில் தகவல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஃபெர்குஸ் வால்ஷ்
- பதவி, ஆசிரியர், மருத்துவம்
புற்றுநோயின் ஐம்பதிற்கும் மேற்பட்ட வகைகளை கண்டறிய உதவும் அற்புதமான ரத்தப் பரிசோதனை ஒன்று, நோயறிதலை விரைவுபடுத்த உதவும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
வட அமெரிக்காவில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் முடிவு, இந்தப் பரிசோதனையால் பல வகையிலான புற்றுநோய்களை அடையாளம் காண முடிந்தது என்பதைக் காட்டுகிறது. புற்றுநோய் ஏற்படலாம் என கணிக்கப்பட்டவர்களுக்கு முக்கால்வாசிப் பேருக்கு எந்தவிதமான ஸ்கிரீனிங்கும் இல்லை.
பாதிக்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டன, அதாவது அவற்றுக்கான சிகிச்சை எளிதானவை மற்றும் குணப்படுத்தக்கூடியவை.
அமெரிக்காவின் கிரெயில் மருந்து நிறுவனம் கேலரி சோதனையை வடிவமைத்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த 25,000 பேரிடம் ஒரு வருடத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், கிட்டத்தட்ட நூறில் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதாக தெரியவந்தது. 62% பேருக்கு பின்னர் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டது.
இந்த சோதனை, புற்றுநோய் பரிசோதனைக்கான அணுகுமுறையை "அடிப்படையில் இருந்தே மாற்றக்கூடும்" என தரவுகள் தெரிவிப்பதாக ஓரேகான் ஹெல்த் & சயின்ஸ் பல்கலைக்கழகத்தின் கதிர்வீச்சு மருத்துவத்தின் இணைப் பேராசிரியரான முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் நிமா நபவிசாதே கூறினார்.
பல வகையான புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவது, முழுமையாக குணப்படுத்தவோ அல்லது சிகிச்சையளிப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தவோ உதவும் என்று அவர் கூறுகிறார்.
இந்த பரிசோதனையில் எதிர்மறையான முடிவு வந்தவர்களில் 99%க்கும் அதிகமானவர்களுக்கு புற்றுநோய் இல்லை என்று இந்த சோதனை சரியாக கண்டறிந்தது.
மார்பகம், குடல் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனையுடன் இந்த பரிசோதனையும் இணைந்தபோது, கண்டறியப்பட்ட புற்றுநோய் வகைகளின் எண்ணிக்கை ஏழு மடங்கு அதிகரித்தது.
அதிலும் கண்டறியப்பட்ட புற்றுநோய்களில் முக்கால்வாசி, கருப்பை, கல்லீரல், வயிறு, சிறுநீர்ப்பை மற்றும் கணையப் புற்றுநோய் போன்ற இதுவரை எந்தப் பரிசோதனை செயல் திட்டமும் இல்லாதவை என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசோதிக்கப்பட்டவர்களில் பத்தில் ஒன்பது பேருக்கு புற்றுநோயின் மூலத்தை இரத்தப் பரிசோதனை சரியாகக் கண்டறிந்தது.
இந்த முடிவுகள், புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதில் ரத்தப் பரிசோதனை முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது.
ஆனால், புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளை இந்த ரத்தப் பரிசோதனை குறைக்கிறதா என்பதைக் காட்ட கூடுதல் சான்றுகள் தேவை என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபடாத விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
லண்டனில் உள்ள தி இன்ஸ்டிடியூட் ஆஃப் கேன்சர் ரிசர்ச் நிறுவனத்தின் மருத்துவப் புற்றுநோய் மரபியல் பேராசிரியர் கிளேர் டர்ன்புல்லின் கருத்துப்படி, "கேலரியின் ஆரம்ப கட்ட நோய் கண்டறிதல், இறப்பு தொடர்பான விஷயத்தில் நேர்மறையாக உதவுகிறதா என்பதை நிறுவ, இறப்பை இறுதிப் புள்ளியாகக் கொண்ட ஆய்வுகளின் தரவு அவசியம்."
140,000 NHS நோயாளிகளை உள்ளடக்கிய மூன்று ஆண்டு சோதனையின் முடிவுகள், இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு வெளியிடப்படும்.
சோதனையின் முடிவுகள் சாதகமாக அமைந்தால், மேலும் பத்து லட்சம் பேருக்கு சோதனைகளை விரிவுபடுத்துவதாக தேசிய சுகாதார சேவை (NHS) முன்பு கூறியிருந்தது.
கிரெயிலின் பயோஃபார்மாவின் தலைவர் சர் ஹர்பால் குமார் இதனை "பரிசீலனைக்குரிய சிறப்பான முடிவுகள்" என்று அழைத்தார்.
பிபிசி ரேடியோ 4-இன் டுடே நிகழ்ச்சியில் பேசிய ஹர்பால் குமார், "புற்றுநோயால் ஏற்படும் பெருமளவிலான இறப்புக்குக் காரணம், புற்றுநோய்களை மிகவும் தாமதமாகக் கண்டுபிடிப்பது தான்" என்றார்.
பல புற்றுநோய்கள் "ஏற்கனவே மிகவும் முற்றிய நிலையில்" இருக்கும் போது கண்டறியப்படுகின்றன. எனவே, "மிகவும் பயனுள்ள மற்றும் குணப்படுத்தக் கூடிய சிகிச்சைகளைப் பயன்படுத்த நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, முன்கூட்டியே கண்டறிதலுக்கு மாறுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்" என்று விளக்கினார்.
"பிரிட்டன் தேசிய ஸ்கிரீனிங் கமிட்டி, ஆதாரங்களை மதிப்பாய்வு செய்வதிலும், இந்த சோதனைகளை தேசிய சுகாதார சேவை ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்பதை தீர்மானிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












