பிரபாகரன் மரணம் பற்றி பழ.நெடுமாறன்: முள்ளிவாய்க்கால் களத்தில் இருந்த போராளி என்ன சொல்கிறார்?

தமிழீழ விடுதலை புலிகள்
படக்குறிப்பு, அரவிந்தன், முன்னாள் போராளி
    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை என இலங்கை ராணுவத்துடனான இறுதி கட்ட யுத்தத்தில் சண்டையிட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட கருத்து குறித்து, முன்னாள் போராளியான வவுனியாவைச் சேர்ந்த அரவிந்தனிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2009ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி வரை இறுதி யுத்தத்தில் தான் சண்டையிட்டதாக அவர் கூறுகின்றார்.

''13 வருடங்கள் பேசிக் கொண்டிருந்த விஷயம். இப்போது 14வது வருடத்திற்குள் வந்திருக்கின்றோம். அந்த வகையிலே எல்லோருக்கும் நாங்கள் சொல்ல விரும்புகின்ற கசப்பான உண்மை, அண்ணன் இல்லை என்பதுதான்" என அரவிந்தன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளியான அரவிந்தன், 2009ம் ஆண்டு மே மாதம் நடுப் பகுதியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் நேரடியாகவே சண்டையிட்ட ஒருவராவார்.

பிரபாகரனின் தளபதிகளில் ஒருவரான ரத்னம் மாஸ்டருடன் இணைந்து கடமையாற்றிய போராளியாக இருந்தவர் அரவிந்தன்.

தமிழ்நாட்டின் பழ. நெடுமாறனின் சமீபத்திய கூற்று தொடர்பாக அரவிந்தனை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டு பேசினோம்.

அப்போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என அரவிந்தன் தெரிவிக்கின்றார்.

''அண்ணனை பற்றி தற்போது ஒரு அறிவிப்பு வந்திருக்கின்றது. தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றிய உண்மை அறிவிப்பு என்று நெடுமாறன் ஐயாவின் கையெழுத்தோடு, ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணன் இருக்கின்றாரா?, இல்லையா? என்று 13 வருடங்கள் பேசிக் கொண்டு, 14வது வருடத்திற்குள் வந்திருக்கின்றோம். அந்த வகையிலே அவர்கள் எல்லோருக்கும் நாங்கள் சொல்ல விரும்புகின்ற கசப்பான உண்மை, அண்ணன் இல்லை என்பதுதான்.

காணொளிக் குறிப்பு, பிரபாகரன் உயிர்: கடைசி யுத்தத்தில் போரிட்ட முன்னாள் போராளி பிபிசி தமிழுக்கு பேட்டி

இதைத் தவிர மேலதிக தகவல்களை பேச முடியாத நிலைமையில் இருக்கின்றோம். இதைப்பற்றி பேச விளைகின்றவர்கள், இறுதிச் சண்டை களத்திலே நின்றவர்களாகவோ, அல்லது அண்ணனினுடைய பாதுகாப்பில் நின்றவர்களாகவோ அல்லது குறைந்த பட்சம் நந்திக்கடல் சண்டை களத்தில் கலந்து கொண்டவர்களாகவோ இருந்து, இதற்கு பதிலளிப்பது, உகந்ததாக இருக்கும் என்று நினைக்கின்றேன்." என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை அரசாங்கம் தீர்வுத் திட்டத்தை வழங்கும் தருணத்தில், இவ்வாறான அறிவிப்பு வெளியிடப்பட்டமையானது, ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் முன்னாள் போராளி அரவிந்தன் கூறுகின்றார்.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்

பட மூலாதாரம், Getty Images

''போராளிகள் என்ற விதத்தில் இதை நாங்கள் சந்தேக கண்ணோட்டத்தோடு பார்க்கின்றோம். தற்போது இலங்கை அரசாங்கம் தீர்வுத் திட்டங்களை வழங்குகின்ற நிலைமையிலேயே, அதனை குழப்பி விடுகின்ற ஒரு தரப்பினுடைய வேலையாக இது இருக்கலாம். 13வது திருத்தச் சட்டத்தை வழங்க போகின்றார்கள், போலீஸ், காணி அதிகாரங்களை வழங்க போகின்றார்கள். என்ற நிலையிலேயே இதனை செய்கின்றார்கள்.

அண்ணன் வரப் போகின்றார் என கூறி, புலம்பெயர் தேசங்களில் நிதி சேகரிக்கின்றார்கள். இவை அனைத்துமே திட்டமிடப்பட்ட இந்தியாவின் 'ரா' உளவுப்பிரிவின் திட்டமாக நாங்கள் பார்க்கின்றோம்.

காரணம், அண்ணன் என்றால் யார் என்று எங்களுக்குத் தெரியும். அண்ணனுடன் மிக நெருங்கிய அளவு தூரத்திலே நந்திக்கடலுக்குள் நாங்கள் இருந்தோம்.

நாங்கள் 800 வரையான போராளிகள் அன்னளவாக இருந்தோம். வெளியில் 400 பேர் அளவில் இருந்தோம். சண்டை களத்தில் 1200 பேர் வரை மாத்திரமே இருந்தோம். அந்த சண்டை களத்தில் எத்தனை பேர் உயிருடன் வந்திருக்கின்றார்கள். எத்தனை பேருடைய உடல்களை ராணுவம், போலீஸ் எங்களிடம் அடையாளம் காட்டும் படி கோரியிருந்தது போன்ற விடயங்கள் இருக்கின்றன.

பலர் தப்பி வெளிநாடுகளுக்கு சென்றிருக்கின்றார்கள். அவர்களுடைய கருத்துக்கள் தான் இங்கே முக்கியத்துவம் பெற வேண்டுமே தவிர, இதில் வேறு நாட்டவர்கள் கருத்துக்களை கூறுவது கண்டிக்க வேண்டியது. தமிழ் மக்களுக்கு இது எந்தவிதத்திலும் தீர்வை வழங்காது.

இது தமிழ் மக்களுக்கு இழைக்கக்கூடிய ஒரு துரோகமாகும். அண்ணனுடைய பாதுகாப்பில் நின்றவர்கள் எல்லோரும் வெடித்து சிதறி இறந்து போனார்கள். அவர்களுடைய உடல் பாகங்களையும், உடல் அங்கங்களையும் கொண்டு வந்து அடையாளம் காட்டினார்கள். அண்ணன் அவருடைய முடிவை அவரே தேடிக் கொண்டார் என்பது தான் என்னுடைய கருத்து. நேரடியாக நான் பார்க்காத சந்தர்ப்பத்தில் அதை பற்றி கருத்து கூற முடியாத நிலையில் உள்ளேன்.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் அங்கே என்ன நடந்தது என்பது தொடர்பில் கருத்து சொல்லக்கூடியவர்களாக நாங்கள் இருக்கின்றோம். தமிழீழத்திற்கு மீண்டும் ஒரு தலைவன் வரக்கூடாது என்பதற்கான நிகழ்ச்சி திட்டமாக இந்த கூற்றை பார்க்கிறோம். யாருக்கு தேவையோ, அவர்களுக்காக இவர்கள் வேலை செய்கின்றார்கள் என நாங்கள் காண்கின்றோம். ஈழ கனவுக்காக போராடியவர்கள் அல்லது அவர்களுக்கு துணை நின்றவர்கள் இந்தியாவிலிருந்து பேசுகின்றார்களா என்பதை இன்று ஏற்படுத்தியிருக்கின்றது. அண்ணன் இல்லை என்பதை கூறிக்கொள்கின்றேன்." என அவர் குறிப்பிடுகின்றார்.

இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது?

இலங்கையில் தொடர்ச்சியாக காணப்பட்ட இனப் பிரச்னை காரணமாக, இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டது.

சுமார் 3 தசாப்தங்கள் தொடர்ந்து ஆயுதப் போராட்டம், 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள நந்திக்கடல் பகுதியிலேயே யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

பல்லாயிரக்காணக்கான உயிர்களை காவு கொண்ட இந்த யுத்தம், முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், யுத்தத்தில் கொலை செய்யப்பட்டதாக 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

நந்திக்கடல் பகுதியின் கரையோரத்திலிருந்து தலையில் காயங்களுடன் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தை கைப்பற்றியதாக இலங்கை ராணுவம் அறிவித்திருந்த நிலையிலேயே, யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: