பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு: முதல்வர்கள் ஸ்டாலின், பினராயி, மம்தா கண்டனம் - இந்தியப் பத்திரிகைகள் கூறுவது என்ன?

பிபிசி டெல்லி அலுவலகத்தில்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பிபிசி டெல்லி அலுவலகத்துக்கு வெளியே..

இந்திய தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று, செவ்வாய்கிழமை ஆய்வு நடத்தினர். இதுகுறித்து, இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான செய்திகள் குறித்து இங்கே பார்ப்போம்.

"பழிவாங்கும் நடவடிக்கை"

பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

பிபிசி அலுவலகங்களில் "சர்வே" நடத்தியிருப்பது "பழிவாங்கும் நடவடிக்கை" என்றும் "ஊடக சுதந்திரம் மீதான தாக்குதல்" என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளதை அச்செய்தி சுட்டிக்காட்டுகிறது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "மோதி ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

விமர்சனக் குரல்களை நெரிப்பதற்காக வெட்கக்கேடான மற்றும் மன்னிக்க முடியாத பழிவாங்கலுடன் இது செய்யப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களை தாக்க அமைப்புகளைப் பயன்படுத்தினால் எந்த ஜனநாயகமும் வாழ முடியாது.

மக்கள் இதை எதிர்ப்பார்கள்" என தெரிவித்துள்ளது அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங், "மோதி சர்வாதிகாரத்தின் உச்சக்கட்டத்தை அடைந்திருப்பதாக" தெரிவித்திருப்பதும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, "முதலில் பிபிசி ஆவணப்படங்களுக்குத் தடை. அதானி நிறுவன முறைகேடுகளுக்கு விசாரணை இல்லை. தற்போது பிபிசி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை. இந்தியா: ஜனநாயகத்தின் தாய்தானா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளது அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சர்வே தகவல்கள் வெளியிடப்படும்"

மும்பை பிபிசி அலுவலகத்தில்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மும்பை பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு

2002 குஜராத் கலவரம் குறித்த பிபிசியின் ஆவணப்படம் வெளியான சில வாரங்களில் பிபிசி அலுவலகங்களில் இந்த 'சர்வே' மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் இந்த நிலைமை விரைவில் தீர்க்கப்படும் என்று தொடர்ந்து நம்புவதாகவும் பிபிசி வெளியிட்ட அறிக்கையும் அச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது.

யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்றும், இந்த 'சர்வே' முடிந்தபிறகு அதுகுறித்த தகவல்கள் வெளியிடப்படும் எனவும், இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் கண்டனம்

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து செய்தி வெளியிட்டுள்ள 'இந்து தமிழ் திசை' நாளிதழ், ஆய்வின்போது அங்கு இருந்த பிபிசி செய்தியாளர்கள், ஊழியர்களின் செல்போன், மடிக்கணினிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து வைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளது.

'இது சோதனை அல்ல. கணக்கு வழக்குகளை ஆய்வு மட்டுமே செய்துவருகிறோம்' என்றும் சோதனை குறித்து பிபிசிக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "சமீபகாலமாக, அமலாக்கத் துறை, சிபிஐ, வருமானவரித் துறை உள்ளிட்ட இந்திய அரசின் அமைப்புகள், அரசியல் கருவிகளாக அரசியல் எதிரிகளை குறிவைத்து தாக்க அளவுகடந்து பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பட்டியலில் பிபிசி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையும் இணைந்துள்ளது.

நடப்பவை அனைத்தையும் மக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எதிர்வரும் தேர்தலில் இதற்கான தக்க பாடத்தை அவர்கள் புகட்டுவார்கள்" என்று தெரிவித்திருப்பது அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடக சுதந்திரத்தை மீறுவது ஆட்சேபனைக்குரியது - பினராயி

பினராயி விஜயன்

பட மூலாதாரம், Getty Images

டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் இந்திய வருமான வரித்துறையினர் ஆய்வு செய்வது குறித்து கேரளாவின் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும் கண்டனம் தெரிவித்துள்ளதாக மாத்ருபூமி ஆங்கிலப் பதிப்பின் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பத்திரிகை சுதந்திரத்துக்கு ஊறு விளைவிப்பது ஆட்சேபனைக்குரியது, சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியது என்று அவர்கள் கூறியுள்ளதாக மாத்ருபூமி செய்திவெளியிட்டுள்ளது.

"குஜராத் இனப்படுகொலை குறித்த பிபிசி ஆவணப்படத்தால் பாஜக அரசு சீற்றம் கொண்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கை மிகவும் ஆட்சேபனைக்குரியது, ஊடக சுதந்திரம் குறித்த கவலைகளை எழுப்பக்கூடியது" என்று பினராயி விஜயன் கூறியதாக மாத்ருபூமி செய்தி தெரிவிக்கிறது.

இது பத்திரிகையின் வாயை அடைக்கும் செயல் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறியதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

அரசியல் பழிவாங்கல் - மம்தா பானர்ஜி

பிபிசி அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் வருமான வரி ஆய்வு பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்துத் தெரிவித்துள்ளார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கூறியுள்ளது.

மம்தா பானர்ஜி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மம்தா பானர்ஜி

"பிபிசி மீதான இந்த நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்தை பாதித்துள்ளது. இது துரதிருஷ்டவசமானது. ஒரு நாள், இந்தியாவில் ஓர் ஊடகமுமே இல்லாமல் போகும்" என்று மம்தா கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது இணையப் பக்கத்தில் செய்திவெளியிட்டுள்ளது.

"ஊடகங்கள் ஏற்கெனவே அவர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஊடகங்கள் தங்கள் குரலை உயர்த்த முடியாத சூழ்நிலை ஏற்படும்" என்று மம்தா மேலும் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

"நான் மக்கள் அளித்த உரிமையின்படி செயல்படுகிறேன். அவர்கள் (பாஜக) மக்கள் என்ன உரிமை அளித்துள்ளார்கள் என்று கவலைப்படுவதில்லை. அவர்களுடைய உரிமை, ஹிட்லருக்கும் மேலான சர்வாதிகார உரிமை மட்டுமே. பிபிசிக்கு என்னுடைய பரிவும், ஆதரவும்" என்று மம்தா பானர்ஜி கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி கூறுகிறது.

ராஜஸ்தான் முதல்வர் எதிர்ப்பு

விசாரணை அமைப்புகள் மீது மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் செல்வாக்கு செலுத்திய விதம், எந்த வகையிலும் நியாயமானது என்று சொல்ல முடியாது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இப்போது பிபிசி தாக்கப்பட்டிருக்கிறது. பிபிசியின் நம்பகத்தன்மை நாட்டிலும் உலகிலும் அசாதாரணமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதன்கிழமையும் இரண்டாவது நாளாக வருமானத்துறை ஆய்வு பிபிசி அலுவலகத்தில் தொடரும் விஷயத்தை தெரிவித்துள்ள ஏ.என்.ஐ. செய்தி, "அவர்கள் நீதித்துறையையும் கைப்பற்ற விரும்புகிறார்கள். ஆனால், நாம் நீதித்துறை நடுநிலையோடு இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். நீதித்துறை மட்டுமே நாட்டைப் பாதுகாக்க முடியும்" என்று மம்தா பானர்ஜி கூறியதாக மேலும் கூறுகிறது.

"உண்மையின் கழுத்தை நெரிக்கும் முயற்சி"

பிபிசி

பட மூலாதாரம், Getty Images

பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ஆய்வுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து 'தினத்தந்தி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "அதானி விவகாரத்தில் நாங்கள் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை கேட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆனால், அரசு பிபிசிக்கு எதிராக களமிறங்கி இருக்கிறது. அழிவு நெருங்கும்போது ஒருவரின் அறிவு அவரது நலனுக்கு எதிராக செயல்படும்" என அவர் தெரிவித்துள்ளதாக அச்செய்தி கூறுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. பினோய் விஸ்வம், "வருமான வரித்துறை சோதனை என்பது உண்மையின் கழுத்தை நெரிக்கும் முயற்சி" என தெரிவித்திருப்பதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் கொள்கைகள் அல்லது ஆளும் கட்சியை விமர்சிக்கும் பத்திரிகை நிறுவனங்களை மிரட்டுவதற்கும் துன்புறுத்துவதற்கும் அரசு நிறுவனங்களை பயன்படுத்தும் போக்கின் தொடர்ச்சியாக இந்த ஆய்வு உள்ளது என, எடிட்டர்ஸ் கில்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா "உலகின் மிகவும் ஊழல் நிறைந்த அமைப்பு பிபிசி" என்றும்

"நீங்கள் விஷத்தை கக்காத வரையில், ஒவ்வொரு அமைப்புக்கும் வாய்ப்பளிக்கும் நாடு இந்தியா" என்றும் கூறியிருப்பது அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா கூறுவது என்ன?

டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்திய ஆய்வு குறித்து அமெரிக்கா அறிந்திருப்பதாகவும், ஆனால் அதுகுறித்த தீர்ப்பு வழங்கும் நிலையில் தாங்கள் இல்லை என்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் ஊடகங்களுக்கு தெரிவித்ததாக 'லைவ் மிண்ட்' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சுதந்திரமான பத்திரிகைத் துறை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் என்பதால் அது முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் மேலும் கூறினார். "உலகம் முழுவதும் சுதந்திரமான பத்திரிகையின் முக்கியத்துவத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். கருத்து சுதந்திரம் மற்றும் மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் மனித உரிமைகளாக நாங்கள் தொடர்ந்து முன்னிலைப்படுத்துகிறோம். இது இந்நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளது" என்று பிரைஸ் வலியுறுத்தினார்.

இந்நடவடிக்கை ஜனநாயகத்தின் சில மதிப்புக்கு எதிராக நடந்ததா என்று கேட்டதற்கு, "இந்த ஆய்வு தொடர்பான உண்மைகளை நாங்கள் அறிந்திருக்கிறோம், ஆனால் தீர்ப்பு வழங்கும் நிலையில் நான் இல்லை" என அவர் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்