அதானி-ஹிண்டன்பெர்க் அறிக்கை: அமித் ஷா பேட்டி - "மறைக்க ஒன்றுமில்லை, பயப்பட எதுவுமில்லை"

பட மூலாதாரம், Getty Images
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு அளித்த நேர்காணலில் எதிர்க்கட்சிகளைக் குறிவைத்துப் பேசியுள்ளார். ராகுல் காந்தியின் சமீபத்திய கருத்துகள், அதானி-ஹிண்டன்பர்க் சர்ச்சை, 2024 தேர்தல் போன்ற பல விஷயங்களில் அமித் ஷா தனது கருத்தைத் தெரிவித்தார்.
மத்திய அரசாங்க அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, அமித் ஷா, "எதிர்க்கட்சிகள் ஏன் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை? பெகாசஸ் வழக்கு வெளிச்சத்திற்கு வந்தபோது நான் அவர்களை நீதிமன்றத்திற்குச் செல்லுமாறு கூறினேன். ஆனால், அவர்கள் செல்லவில்லை. அவர்களுக்கு சத்தம் போடத்தான் தெரியும். நீதிமன்றங்கள் எங்கள் வசம் இல்லை," என்று கூறினார்.
கௌதம் அதானியுடன் பாஜக நெருக்கிய நட்பில் இருப்பதாக வந்த குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய அமித் ஷா, "உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ள விவகாரத்தில் நான் பேசுவது சரியாக இருக்காது. ஆனால், இதில் பாஜக மறைப்பதற்கும் ஒன்றுமில்லை, பயப்படுவதற்கும் எதுவுமில்லை," என்று தெரிவித்துள்ளார்.
அடுத்து வரவுள்ள 2024ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதுகுறித்துப் பேசும்போது, "2024இல் போட்டியே இல்லை. மோதிஜியுடன் இணைந்து நாடு முன்னேறி வருகிறது. முக்கிய எதிர்க்கட்சி யார் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள்.
சமீபத்தில் முகலாய தோட்டத்தின் பெயர் அம்ரித் உத்யான் என மாற்றப்பட்டது. கடந்த ஆண்டுகளில், முகலாய ஆட்சியாளர்கள் குறித்து பாஜக தலைவர்கள் குறித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதுகுறித்துப் பேசியவர், "முகலாயர்களின் பங்களிப்பை அகற்றிவிடக்கூடாது. நாங்களும் அதை அகற்ற விரும்பவில்லை. ஆனால், இந்த நாட்டின் பாரம்பரியத்தை யாராவது நிலைநாட்ட விரும்பினால், அதில் தவறேதுமில்லை," என்று தெரிவித்தார்.
அமித் ஷா நேர்காணலில் பேசிய பிற விஷயங்கள்
"பி.எஃப்.ஐ உறுப்பினர்கள் மீதான வழக்குகளை நிறுத்த காங்கிரஸ் முயன்றது. அது தொடர நாங்கள் வழியமைத்தோம். பிஎஃப்ஐ மற்றும் காங்கிரஸ் ஒரே மாதிரியானவை என்று நான் எங்கும் சொல்லவில்லை. இளைஞர்களை கடும்போக்குவாதிகளாக மாற்றும் நடவடிக்கையில் பிஎஃப் ஐ ஈடுபட்டது. தீவிரவாதத்திற்கான கூறுகளை உருவாக்க முயன்றது. அதனால்தான் அதைத் தடை செய்தோம். அது நாட்டின் வாக்கு வங்கி அரசியலுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கை.
அவர்களிடம் இருந்து பல ஆவணங்கள் மீட்கப்பட்டன. அவர்களுடைய செயல்பாடுகள் நாட்டின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் நல்லதல்ல என்பதை அந்த ஆவணங்கள் காட்டின.
அதற்கு எதிராகச் செயலாற்றுவதைத் தாமதிப்பது நாட்டின் நலன்களுக்கு நல்லதல்ல என்பதால் வெற்றிகரமாக அரசு அந்த அமைப்பைத் தடை செய்தது," என்று அமித் ஷா கூறினார்.

பட மூலாதாரம், ANI
மேலும், "ஒரு தயாரிப்பு நன்றாக இருக்கும்பட்சத்தில் அதை ஆரவாரத்துடன் சந்தைப்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோதியின் பணியை நாடு மற்றும் உலகத்தின் முன்பு பெருமையுடன் நாம் வைக்க வேண்டும். இது முழு இந்தியாவுக்கும் பெருமை.
பழைய பெயர்கள் இருந்து, அது மாற்றப்படாத நகரங்களே இல்லை. நமது அரசு அதுகுறித்து மிகவும் கவனமாக முடிவுகளை எடுத்துள்ளன. அதோடு ஒவ்வோர் அரசாங்கத்திற்கும் இந்த உரிமை உள்ளது.
பிகார், ஜார்கண்டில் நக்சலைட் கிளர்ச்சி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. விரைவில் சத்தீஸ்கரில் அமைதியை மீட்டெடுப்பதில் வெற்றி பெறுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ஜம்மு காஷ்மீரிலும் பயங்கரவாதம் தொடர்பான அனைத்து வகையான புள்ளிவிவரங்களும் சிறந்த நிலையில் உள்ளன. வடகிழக்கு மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடையே நிலவிய தொலைவை பிரதமர் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

பட மூலாதாரம், ANI
இன்று வடகிழக்கு மக்கள் பிற பகுதிகளில் தாங்கள் மதிக்கப்படுவதாக உணர்கிறார்கள். பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வடகிழக்குப் பகுதிகளுக்குச் செல்லும்போது, அவர்களையும் மக்கள் மதிக்கிறார்கள்," என்று பேசினார்.
மேலும், "இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளது. அரசு எடுத்த உள்துறை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளாலும் மற்ற துறைகளின் முன்னேற்றங்களாலும் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாறியுள்ளது.
நாட்டின் முன்னேற்றம், பாதுகாப்பு, வேகமாக வளரும் பொருளாதாரமாக உருவாக்குவது ஆகியவையே அரசின் முன்னுரிமைகளாக உள்ளன," என்றவர், உலகளவில் இந்தியாவின் சாதனைகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார்.
8 ஆண்டுகள் குறுகிய கால அளவில், நாட்டில் வாழும் 60 கோடி மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற முயன்று வெற்றியடைந்துள்ளோம். ரயில்வே துறையில் பெரிய மாற்றங்கள் நடந்துள்ளன. இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன," என்று தெரிவித்தார்.
மேலும், பாதுகாப்புத் துறையில் மற்ற நாடுகள் மீது இந்தியா சார்ந்திருப்பது எட்டு ஆண்டுகளில் 30% குறைக்கப்பட்டுள்ளது பெரிய சாதனை என்று கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













