இலங்கை நெருக்கடி: 1 லட்சம் கோடி ரூபாய் பணம் அச்சிட திட்டம் - பிரதமர் ரணில் தகவல்

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க

இலங்கை பொருளாதார நெருக்கடி தீவிர நிலையை அடைந்துள்ள இந்த தருணத்தில், மேலும் பணத்தை அச்சிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதன்படி, மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை அச்சிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

''எங்களுக்கு ஒரு ரூபாய் வருமானம் கூட இல்லை. நாங்கள் ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை மேலும் அச்சிடுகிறோம்" என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பணவீக்கமானது 40 வீதத்தை எட்டும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

விலையேற்றத்தினால் போராட்டங்களை நடத்தி வரும் மக்களுக்கு இது மேலும் அழுத்தத்தைக் கொடுக்கும் என அவர் குறிப்பிடுகின்றார்.

கடந்த மார்ச் மாதத்தில் 21.5 வீதமான காணப்பட்ட பணவீக்கம், ஏப்ரல் மாதத்தல் 33.8 வீதமாக உயர்வடைந்துள்ளது என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை அதிகரித்ததால், அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பெரும் அளவில் அதிகரித்துள்ளன.

இவ்வாறான நிலையில், மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை அச்சிட புதிய நிதி அமைச்சரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதேவேளை, எதிர்வரும் 6 வார காலத்திற்குள் புதிய இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கிறார்.

நாட்டின் உட்கட்டமைப்பு திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு மாறாக, இரண்டு வருட நிவாரண திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் வகையில் புதிய இடைக்கால வரவு செலவுத்திட்டம் அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ரணில் விடுத்த எச்சரிக்கை

Central Bank of Sri Lanka

பட மூலாதாரம், central bank of sri lanka

படக்குறிப்பு, இலங்கையில் பணத்தை அச்சிடும் அதிகாரம் மத்திய வங்கியிடம் மட்டுமே உள்ளது.

''பணம் அச்சிடுவது உற்பத்திக்கு வழி வகுக்காமல், நுகர்வுக்கு செலவிடப்பட்டால், நிச்சயமாக பணவீக்கத்தை ஏற்படுத்தும். இப்போது கிட்டத்தட்ட 30 சதவீதம் பணவீக்கம் வந்து விட்டது. பணம் அச்சிட்டு அதை உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாமல், வெறுமனே தேவைகளை அதிகரிக்கும் வகையில் நுகர்வுக்கு பயன்படுத்தப்பட்டால், உதாரணமாக சொன்னால், அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் கொடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டால் பணவீக்கம்தான் உருவாகும்.

அது உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டால், அது வேறு விடயம். அரசாங்கத்தின் வருமானத்தையும் செலவினத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மாத வருமானத்திற்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளி முன்னர் 50 பில்லியனாக இருந்து தற்போது 700 பில்லியன் வரை அதிகரித்துள்ளது. ஆகவே, அரசாங்கத்திற்கு பணத்தை அச்சிடுவதை தவிர வேறு வழி இல்லை" என பொருளியல் துறை பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

பணம் அச்சிடாத பட்சத்தில், அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை செலுத்த முடியாது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.

புதிய கடன்களை வழங்க உலக வங்கி மறுப்பு

சர்வ பொருளாதார கொள்கை வரைவொன்று நடைமுறைப்படுத்தப்படும் வரை இலங்கைக்கு புதிய கடன் உதவிகளை வழங்கும் திட்டம் கிடையாது என உலக வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மக்கள் மீது அக்கறை கொண்டு செயற்படுவதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பரந்த அளவிலான வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான சரியான கொள்கைகள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் மற்ற அபிவிருத்தி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதாகவும் உலக வங்கி கூறுகிறது.

இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான சரியான கொள்கை வரைவொன்றை தயாரிக்க வேண்டும் என அது தெரிவிக்கிறது.

இலங்கை தற்போது பின்பற்றிவரும் சில நிதி திட்டங்களை மீள ஆராய்ந்து, இலங்கைக்கு தேவையான மருந்து வகைகள், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் விவசாயிகள் மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உலக வங்கி கூறுகிறது.

உலக வங்கியின் இந்த அறிவிப்பு தொடர்பில் பிபிசி தமிழ், பொருளாதார நிபுணர் அனுஷ்க விஜேசிங்கவிடம் வினவியது.

இலங்கை பணம்

பட மூலாதாரம், Getty Images

உலக வங்கியின் இந்த அறிவிப்பு குறித்து ஆச்சரியப்பட வேண்டிய தேவை கிடையாது என அவர் கூறுகின்றார்.

''உலக வங்கி தற்போது வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பானது, ஆச்சரியப்படக்கூடிய அறிவிப்பு கிடையாது. செய்திகளில் வெளியாகியுள்ள விதத்தில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலைமை ஒன்று காணப்படுகின்றது. இந்த நெருக்கடி குறித்து உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆய்வுகளை நடத்தி வருகின்றன. இந்த ஆய்வுகளின்படி, புதிய நிதி திட்டங்களை வழங்குவதற்கு இலங்கை தகுதியற்றதாக காணப்படுகின்றது. பொருளாதார நிலைமை வழமைக்கு கொண்டு வரப்படும் வரை புதிய நிதி உதவிகளை வழங்க முடியாது என ஏற்கெனவே கூறியுள்ளனர்" என பொருளாதார நிபுணர் அனுஷ்க விஜேசிங்க தெரிவிக்கிறார்.

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் குறித்தும் அவர் இதன்போது கருத்து தெரிவித்தார்.

''இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியன தற்போது கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன. எவ்வாறான உடன்படிக்கை, எவ்வாறான பொருளாதார பொதியை வடிவமைக்க முடியும் என்பது குறித்து அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடலே தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் முடிவடைந்ததன் பின்னர், இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுக்கு இடையில் எவ்வாறான பொருளாதார பொதி கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்படும்.

அந்த உடன்படிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக்கு சென்று அதற்கான அனுமதியை பெற வேண்டும். இலங்கை சார்பில் இலங்கை அமைச்சரவையில் அதற்கான அனுமதியை பெற வேண்டும். இந்த இரண்டு நடவடிக்கைகளும் முடிவடைந்ததன் பின்னரே, இந்த உடன்படிக்கை உறுதியாகும் என்பதை எம்மால் உறுதிப்படுத்த முடியும்" என்கின்றார் அனுஷ்க விஜேசிங்க.

இலங்கை பணம்

பட மூலாதாரம், Getty Images

இந்த உடன்படிக்கையை இரண்டு தரப்பும் உறுதிப்படுத்திய பின்னரே, ஏனைய நிதி உதவிகளை வழங்கும் நிறுவனங்கள் இலங்கைக்கு உதவி வழங்குவதற்கான வாய்ப்பு அமையும் என அவர் கூறுகிறார்.

இந்த நடவடிக்கைகள் நிறைவு பெறும் வரை, குறித்த நிறுவனங்களுக்கு புதிய கடன், புதிய திட்டங்களுக்கு செல்ல முடியாது என்றே கூறப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அமைய, எவ்வாறான கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது என்பது அவதானிக்கப்படும்.

உலக வங்கியால் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட பணம் கிடைக்கும்

உலக வங்கி இலங்கைக்கு வழங்குவதாக ஏற்கெனவே அறிவித்துள்ள நிதி திட்டங்களில், செலவிடப்படாதுள்ள தொகையை, அந்த பழைய திட்டங்களிலிருந்து விடுவித்து, அதனை அவசர தேவைக்காக பயன்படுத்த உலக வங்கி தீர்மானித்துள்ளது.

''புதிய கடன் திட்டங்கள் வழங்காவிட்டாலும், இலங்கைக்கு உலக வங்கியினால் உதவுவதற்கு மாற்று வழிகள் காணப்படுகின்றன. அந்த திட்டங்களை அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர். உலக வங்கியினால் இலங்கைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள நிதித் திட்டங்கள் மற்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ள திட்டங்களுக்காக செலவிடப்பட்டு எஞ்சியுள்ள தொகையை, ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களிலிருந்து அப்புறப்படுத்தி, நாட்டின் அவசர தேவைக்காக அந்த நிதியை வழங்க உலக வங்கி தற்போது தீர்மானித்துள்ளது" என பொருளாதார நிபுணர் அனுஷ்க விஜேசிங்க தெரிவிக்கின்றார்.

அபிவிருத்தி திட்டங்கள், நீர்பாசன திட்டங்கள், வீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட ஒவ்வொரு வகையிலான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, தற்போது உலக வங்கியினால் அவசர தேவையை சமாளிக்க மாற்றி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இலங்கைக்கு உதவி வழங்க முடியாது என உலக வங்கி கூறவில்லை என அவர் தெரிவிக்கிறார்.

எனினும், சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை முடிவடைந்து, அது உறுதிப்படுத்தப்படும் வரை புதிய கடன் திட்டங்களை வழங்க முடியாது என்றே உலக வங்கி அறிவித்துள்ளதாக பொருளாதார நிபுணர் அனுஷ்க விஜேசிங்க தெரிவிக்கிறார்.

காணொளிக் குறிப்பு, பாலியல் இச்சைக்கு இணங்கினால்தான் தண்ணீர் - நைரோபியில் அவதிப்படும் பெண்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: