முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இடிப்பு - யாழ்ப்பாணத்தில் திடீர் பதற்றம்

பட மூலாதாரம், @Kavinthans
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி வெள்ளிக்கிழமை இரவு திடீரென்று புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அங்கு மேலும் இரண்டு நினைவுதூபிகளை இடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு பொதுமக்களும், மாணவர்கள் தரப்பும் ஆட்சேபம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. அங்கு நிலைமை பதற்றத்துடன் காணப்படுவதாக பிபிசி செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
இலங்கை உள்நாட்டுப் போரின்போது தமிழ் இன மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி 2019இல் அமைக்கப்பட்டது. இதேபோல, 2018இல் அமைக்கப்பட்ட பொங்கு தமிழர் நினைவுதூபி, மாவீரர் நினைவுதூபி என மேலும் இரு நினைவு தூபிகள் அந்த வளாகத்தில் உள்ளன.
இந்த நிலையில், இலங்கை போரின்போது உயிரிழந்த மக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியை இடிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக நுழைவாயிலில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து வருவதால் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.
முதல் கட்டமாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை புல்டோசர் மூலம் அதிகாரிகள் இடித்த நிலையில், அது பற்றி கேள்விப்பட்டவுடன் மாணவர்கள் பல்கலைக்கழக வளாக பகுதிக்கு வந்தனர். ஆனால், அதில் பலரையும் உள்ளே நுழைய பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. அந்த பல்கலைக்கழக வளாகத்தில் பெருமளவிலான காவல்துறையினரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.நீதிமன்ற உத்தரவை பெற்று, யாழ் பல்கலை வளாகத்தில் இருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அந்த பல்கலைகழகத்திற்குள் யாரும் நுழைய முடியாதபடி வெளிவாயில் பூட்டப்பட்டுள்ளது.அந்த பிரதேச மக்கள், மாணவர்கள், வெளியிட மக்கள், அரசியல் தரப்பினர் அங்கு குவிந்து வருகிறார்கள்.
நினைவுதூபி எதற்காக அமைக்கப்பட்டது?

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் எனப் பிரகடனப்படுத்தி நினைவு தூபி சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட பொங்கு தமிழ் பிரகடனத் தூபியைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் திரைநீக்கம் செய்து வைத்தார்.
2001 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரகடனப்படுத்தி சர்வதேச சமூகத்தின் கவனத்தை தமிழர் தேசத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வின் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை அமைக்கப்பட்டிருந்தது.

அந்த பிரகடனத்தை தூபியாகப் புனரமைக்கும் பணியை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டது.
அவ்வாறு மாணவர் ஒன்றியத்தினால் புனரமைக்கப்பட்ட தூபியே 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதேபோல அங்கு போரில் உயிரிழந்த தமிழ் போராளிகள், மாணவர்களின் நினைவாக மாவீரர் நினைவு தூபியும் அமைக்கப்பட்டது.
இலங்கை போரின் போது உயிரிழக்க நேர்ந்த மக்களின் அடையாளமாக அந்த நினைவுதூபிகள் விளங்கி வந்த நிலையில், அவற்றை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












