மீனவர்கள் பிரச்சனை: "மோதி தெளிவாக பதில் அளிக்கவில்லை" - இலங்கை அமைச்சர்

இலங்கையில் தற்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளடங்கிய அரசியலமைப்பே நடைமுறையில் உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடனான காணொளி கலந்துரையாடலின் போது, இந்திய பிரதமர் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியதாக வெளியான செய்தி குறித்து கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை கொழும்பில் இன்று (29) சந்தித்து கலந்துரையாடிய போதே, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதில் வழங்கியிருந்தார்.
13ஆவது திருத்தத்திலுள்ள மாகாண சபைத் தேர்தல், தனது காலப் பகுதியிலேயே உரிய நேரத்தில் நடத்தப்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார்.
13ஆவது திருத்தம் தொடர்பில் இந்திய பிரதமர் என்ன கூறினார் என வினவிய போது, இந்திய பிரதமருடன் கலந்துரையாடிய விடயங்களை தான் மறந்து விட்டதாகவும் அவர் பதிலளித்தார்.
மேலும், அரசியலமைப்பின் உத்தேச 20ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக எந்தவித பிரச்சினைகளும் எழுவதற்கான வாய்ப்பு கிடையாது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
20ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்கப்படும் தீர்மானமே, தனது தீர்மானமாகவும் இருக்கும் என அவர் கூறினார்.
இந்திய மீனவ பிரச்சனை

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடு என்ற விதத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தாம் கடற்படையை தெளிவூட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்போது, கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய - இலங்கை மீனப் பிரச்சினை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெளிவான பதிலை வழங்கவில்லை என கூறினார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மீனவப் பிரச்சினை தொடர்பில் இந்திய பிரதமரை தெளிவூட்டிய போது, அவர் அதற்கான சரியான தீர்வை வழங்கவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.
அத்துடன், தமிழக முதலமைச்சரிடம் கலந்துரையாடல்களை நடத்தி, உரிய தீர்மானமொன்றை அறிய தருமாறு, தாம், இந்திய பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
மஞ்சள் இறக்குமதி
இலங்கைக்கு இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மஞ்சள் இறக்குமதி செய்யப்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றால், மஞ்சள் இறக்குமதி முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படியே, அரசாங்கம் மஞ்சள் இறக்குமதியை தடை செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் மஞ்சள் செய்கையாளர்கள் தற்போது மஞ்சள் செய்கைகளை ஆரம்பித்துள்ளதாக கூறிய மஹிந்த ராஜபக்ஷ, மஞ்சள் இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில், உள்நாட்டு செய்கையாளர்கள் மத்தியில் சோர்வு நிலை ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.
அதனால், உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கான சில கஷ்டங்களை எதிர்நோக்கியவாறே முன்னோக்கி பயணிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மேலும், வெளிநாடுகளிலிருந்து மஞ்சள் இறக்குமதி செய்யப்படுமாக இருந்தால், உள்நாட்டு விவசாயிகள் மஞ்சள் செய்கை செய்வதை நிறுத்தி விடுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
விமான நிலையம் திறக்கப்படுமா?
உலக கொரோனா நிலைமை தொடர்பில் ஆராய்ந்தே விமான நிலையத்தை திறப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலைமை தொடர்பில் ஆராய்ந்தே விமான நிலையம் திறக்கப்படுகின்றமை குறித்த தீர்மானத்தை எட்டவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பிற செய்திகள்:
- ஹத்ராஸ் கூட்டுப்பாலியல் சம்பவம்: உயிருக்கு போராடிய 19 வயது பெண் டெல்லியில் உயிரிழப்பு
- அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்: சர்ச்சை நாளாகுமா அக்டோபர் 7?
- கேட் க்யூ: இந்தியாவில் பரவும் புதிய வகை வைரஸ் - நீங்கள் அச்சப்பட வேண்டுமா?
- 2ஜி வழக்கு: சிபிஐ, அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுக்கள் மீது அக்டோபர் 5 முதல் தினமும் விசாரணை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












