இலங்கை எம்.பி ஆக மரண தண்டனை கைதி பிரேமலால் ஜயசேகர பதவி ஏற்பு - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
இலங்கை நாடாளுமன்றத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கும் முதலாவது நிகழ்வு நேற்று பதிவானது.
இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், 'சொக்கா மல்லி" என அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகர.
நேற்றைய அலுவலின்போது, பிரேமலால் ஜயசேகர சத்தியப்பிரமாணம் செய்வதற்கு அவையில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
அப்போது பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தமது எதிர்ப்பை வெளியிட்டது. கறுப்பு பட்டி அணிந்தவாறு நாடாளுமன்றத்துக்கு வந்த அக்கட்சி உறுப்பினர்கள், கறுப்பு பட்டிகளை சபைக்குள் வீசி எறிந்தவாறு சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் சரத் பொன்சேகாவை குற்றவாளியாக அறிவித்து சிறைக்கு அனுப்பியதை எதிர்கட்சி இதன்போது நினைவூட்டியது.
சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்றத்திற்கு வருகை தர அப்போதைய அரசாங்கம் இடமளிக்காத நிலையில், இன்று மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு எம்.பி பதவியேற்கும் வாய்ப்பை வழங்கியது, அரசியலமைப்புக்கு முரணானது என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.
1976க்கு பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை
2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது. அதில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை, இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, பிரேமலால் ஜயசேகர சந்தேக நபராக கருதப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இவ்வாறான நிலையிலேயே தேர்தலுக்கான வேட்பு மனுவை பிரேமலால் ஜயசேகர தாக்கல் செய்து, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நடைபெற்ற வேளையில், கடந்த ஜுலை மாதம் 31ஆம் தேதி பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை விதித்து இரத்தினபுரி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இலங்கையில் 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றம் நடைபெறவில்லை.
இந்த நிலையில், தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர, கொழும்பு - வெலிகடை சிறைச்சாலையில் சிறை அடைக்கப்பட்டார்.
இந்த நிலையிலேயே கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்டார். அந்த மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை அவர் தனதாக்கிக் கொண்டார்.
எனினும், மரண தண்டனை கைதியொருவர் சட்டமியற்றும் சபையான நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிக்க கூடாது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.
சட்டமியற்றும் இடத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி அங்கம் வகிப்பது சரியானதா என்ற கேள்வியை எதிர் தரப்பினர் எழுப்பினர்.
இதையடுத்து, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற ஆசனத்தில் அமர்வதற்கோ நாடாளுமன்ற வாக்கெடுப்புக்களில் கலந்து கொள்வதற்கோ சந்தர்ப்பத்தை வழங்க முடியாது என சட்ட மாஅதிபர் அண்மையில் அறிவித்திருந்தார்.
இலங்கை அரசியலமைப்பின்படி, எவரேனும் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில், அவர் வாக்குரிமையை கூட இழக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டார்.
ஆனாலும், பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றத்துக்கு வந்து பதவியேற்க வருமாறு நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்தல் பிறப்பித்தார்.
இதேவேளை, தன்னை நாடாளுமன்றத்துக்கு செல்ல அனுமதி வழங்குமாறு பிரேமலால் ஜயசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்திருந்தார்.

பட மூலாதாரம், பிரேமலால் ஜயசேகரவே
அதை விசாரித்த நீதிமன்றம், பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்து கொள்ள முடியும் எனவும், அவர் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள முடியும் என்றும் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே, நாடாளுமன்ற உறுப்பினராக பிரேமலால் ஜயசேகர நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
பிரேமலால் ஜயசேகரவின் கன்னி உரை
தான் செய்யாத குற்றத்திற்காகவே மரண தண்டனையை அனுபவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தனது முதலாவது கன்னி உரையில் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Twitter
தன் மீது விசாரணைகளை நடத்திய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
தான் எந்தவித குற்றத்தையும் செய்யவில்லை என கூறிய அவர், மாறாக தன்னுடன் இருந்த பலர் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான ஆவணங்கள் குற்றப் புலனாய்வு திணைக்களம் வசம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தனது விடயத்தில் பக்கச்சார்பாக செயல்பட்டார்கள் என பிரேமலால் ஜயசேகர கூறினார்.
பிற செய்திகள்:
- மும்பையில் கங்கனா ரனாவத்: விமான நிலையத்தில் சிவசேனை, கார்னி சேனை தொண்டர்கள் முழக்கத்தால் பரபரப்பு
- தி.மு.க - புதிய பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு தேர்வு
- தேசிய கொடி அவமதிப்பு: எஸ்.வி. சேகர் தெரிவித்த வருத்தத்தை ஏற்ற தமிழக அரசு
- "இந்திய பொருளாதாரத்தை பாதித்தது கொரோனா அல்ல, பொது முடக்கம்தான்"
- PUBG தந்த வருமானம் என்ன? நிறுத்தப்படுமா போட்டிகள் - அடுத்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












