தமிழக அரசியல்: தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வு; பொருளாளர் டி.ஆர். பாலு

தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். பொருளாளராக டி.ஆர். பாலு தேர்வாகியுள்ளார். துணைப் பொதுச் செயலாளர்களாக க. பொன்முடியும் ஆ. ராசாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.கவின் பொதுக்குழுக்கூட்டம் சென்னையில் அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமையன்று காலை 10 மணிக்கு துவங்கியது.
இந்தப் பொதுக் குழுக் கூட்டத்தில் சிலர் மட்டும் நேரில் கலந்துகொண்டனர். பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டிய மற்றவர்கள் தமிழ்நாடு முழுவதும் 67 இடங்களில் இருந்து காணொளிக் காட்சி மூலம் பங்கேற்றனர்.
பொதுக் குழுவில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், "பொதுச்செயலாளர் பொறுப்புக்கு துரைமுருகனின் மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரது மனுவினை 218 பேர் முன்மொழிந்தும் வழிமொழிந்தும் உள்ளனர். அந்தப் பொறுப்புக்கு அவரைத் தவிர வேறு யாரும் போட்டியிடாததால் துரைமுருகன் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து மேடைக்கு அழைத்துவரப்பட்ட துரைமுருகனுக்கு மு.க. ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அடுத்ததாக "பொருளாளர் பொறுப்புக்கு டி.ஆர். பாலு மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளனர். அவரது மனுவை 125 பேர் முன்மொழிந்தும் வழிமொழிந்தும் உள்ளனர். அவருக்கு போட்டியேதும் இல்லாததால், டி.ஆர். பாலுவே பொருளாளர் பொறுப்புக்கு தேர்வுசெய்யப்படுகிறார்" எனத் தெரிவித்தார். இதையடுத்து மேடைக்கு வந்த டி.ஆர். பாலுவுக்கு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதற்குப் பிறகு துணைப் பொதுச் செயலாளர்களாக க. பொன்முடியும் ஆ. ராசாவும் நியமிக்கப்படுவதாக மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இதற்குப் பிறகு 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் குறிப்பிடத்தக்க தீர்மானங்களாக, இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வில் 'முன்னேறிய உயர் வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டால்' பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தினரின் உரிமைகள் பறிபோயிருப்பதாகவும் இது குறித்து நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும், தேசிய கல்விக் கொள்கைக்குக் கண்டனம், சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2020ஐக் கைவிட வேண்டும், பா.ஜ.க. அரசுக்கு கண்டனம், ஸ்டெர்லைத் துப்பாக்கிச் சூடு பலிகளுக்கு நீதி வேண்டும், கொரோனா பேரிடர் நிர்வாகத்தில் தோல்வியடைந்த தமிழக அரசுக்குக் கண்டனம், விவசாய விரோதக் கொள்கைகளை மத்திய - மாநில அரசுகள் கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்குப் பிறகு பொதுக் குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












