இலங்கை அங்கொட லொக்கா தங்கிய வீட்டில் ஆயுதங்களா? மதுரையில் சிபிசிஐடி முகாமிட்டு விசாரணை

மதுரையில் இலங்கை குற்றச்செயல் கும்பல் தலைவன் அங்கொட லொக்கா மற்றும் அவரது நண்பர்கள் தங்கியிருந்த வீடுகளில் ஆயுதங்கள் ஏதேனும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
இலங்கையைச் சேர்ந்த குற்றச்செயல்கள் கும்பல் தலைவன் அங்கொட லொக்கா கோவையில், பிரதீப் சிங் என்ற பெயரில், 2018 முதல் வசித்து வந்தார். ஜூலை 3ஆம் தேதி, மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இலங்கையைச் சேர்ந்த அம்மானி தான்ஜி, மதுரையைச் சேர்ந்த பெண் வக்கீல் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் கைது செய்யப்பட்டு மாநில குற்றப்புலனாய்வு சிஐடி காவல்துறையினர் வசம் மேல் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, அங்கொட லொக்கா தமிழகத்தில் தங்கியிருந்தபோது கள்ளத்துப்பாக்கி பயன்படுத்தியது தெரிய வந்தயடுத்து.
மேலும், மதுரையில் அங்கொட லொக்கா மற்றும் அவரது நண்பர்கள் தங்கியிருந்த வீடுகளில் ஆயுதங்கள் ஏதேனும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என காவல்துறையினர் கடந்த இரண்டு தினங்களாக சோதனை நடத்தினர்.
இது குறித்து சிபிசிஐடி அதிகாரி பிபிசி தமிழிடம் பேசுகையில், அங்கொட லொக்காவின் இறப்பிற்கு முன் மதுரை கூடல்நகர் பகுதியில் இரண்டு மாதங்கள் அவர் தங்கியதாக தெரிய வந்தது.
இதனால் அந்த வீட்டில் ஆயுதம் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து கடந்த இரு தினங்களாக வீட்டின் தரை மற்றும் பாதாளசாக்கடை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தோண்டி சோதனை செய்தோம்.
அதே போல் அங்கொட லொக்காவின் நண்பரான பெண் வழக்கறிஞர் சிவகாமிசுந்தரி மற்றும் அவரது நண்பர்கள் மதுரை ரயிலார் நகரில் தங்கியதாக கூறப்படும் வீடுகளிலும் சோதனை செய்தோம். ஆனால் எந்த ஆயுதங்களோ தடயங்களோ கிடைக்கவில்லை என கூறினார்.
இதற்கிடையே, அங்கொட லொக்காவின் கூட்டாளி ஒருவர் மதுரையில் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகி நிலையில் சிபிசிஐடி போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
பிற செய்திகள்:
- சுஷாந்த் சிங் மரணம்: சிபிஐ விசாரணைக்கு முன்பாக மனம் திறக்கும் ரியா சக்ரபர்த்தி - காரணம் என்ன?
- ஐ.பி.எல் 2020: முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதலா? போட்டியில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்?
- கிரைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு: குற்றவாளிக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை
- நீட் தேர்வு, இ-பாஸ் நடைமுறை தொடருமா? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












