ஒரே நாடு, ஒரே சட்டம் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு - நாடாளுமன்றத்தில் அறிவித்தார் ஜனாதிபதி கோட்டாபய

பட மூலாதாரம், NurPhoto / Getty
இலங்கையர்களின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தில் இன்று மாலை அக்ராசன உரையை நிகழ்த்திய ஜனாதிபதி, தமது அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டார்.
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை முழுமையாக ரத்து செய்து, அதற்கு பதிலாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.
ஒரு நாடு, ஒரு சட்டம் என்ற அடிப்படையில் இந்த அரசியலமைப்பு உருவாக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, புதிதாக கொண்டு வரப்படும் அரசியலமைப்பின் ஊடாக தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1978ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பில் இதுவரை 19ஆவது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் (19) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 19ஆவது திருத்தம் ரத்து செய்யப்பட்டு, 20ஆவது திருத்தத்தை கொண்டு வர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
எனினும், 19ஆவது திருத்தத்தை ரத்து செய்து, புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தல்
உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்தி உள்நாட்டு ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

பட மூலாதாரம், FACEBOOK
இதன்படி, தேயிலை, இறப்பர், தென்னை போன்ற செய்கைகளின் மூலம் கிடைக்கும் வருமானம் நாட்டிற்கு போதுமானதாக இல்லை என கூறிய ஜனாதிபதி, அவற்றை ஊக்குவித்து வருமானத்தை அதிகரித்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
இதன்படி, மூடப்பட்டுள்ள தேயிலை தொழிற்சாலைகளை மீண்டும் திறந்து தேயிலை தொழிற்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையின் தேயிலை தொழிற்துறையை மீள வலுப்படுத்தி, 'சிலோன் டீ" நாமத்தை மீள உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
அது மட்டுமின்றி, இறப்பர் மற்றும் தென்னை ஆகிய செய்கைகளையும் மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து சமயங்களுக்கும் சமவுரிமை
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய சமயங்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஏனைய சமயத்தவர்கள் தமது சமயங்களை தடையின்றி பின்பற்றுவதற்கு தடைகள் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டின் பாதுகாப்பை தமது அரசாங்கம் உறுதி செய்துள்ளதாக கூறிய அவர், மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, பாதுகாப்பு துறைகள் மறுசீரமைக்கப்பட்டு, மக்கள் மத்தியிலுள்ள அச்ச நிலைமை இல்லாது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், நிழலுலக குழுவினரின் செயற்பாடுகள், போதைப்பொருள் வர்த்தகர்களின் செயற்பாடுகளை நிறுத்தி, மக்களை பாதுகாப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ஒழுக்கமான மற்றும் சட்டங்களை மதிக்கும் சமூகமொன்றை உருவாக்குவதே தமது நோக்கம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கடல் தொழில் பாதுகாப்பு
சர்வதேச நாடுகளில் இருந்து இலங்கை எல்லைக்குள் பிரவேசித்து, சட்ட விரோத கடல் தொழிலில் ஈடுபடும் நடவடிக்கை முழுமையாக இல்லாது செய்யப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை கடல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் தொழில்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கு தடை விதிக்கப்பட்டு, உள்நாட்டு மீன்களை சந்தைக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, வெளிநாட்டு மருந்துகளை இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டு, உள்நாட்டில் மருந்து வகைகளை உற்பத்தி செய்ய தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோன்று, மருந்து வகைகளின் ஊடாக நடத்தப்படும் மாபியாக்களை நிறுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- பிரசாந்த் பூஷண்: மன்னிப்பு கேட்க மறுப்பு, அவகாசம் கொடுத்த நீதிமன்றம் - என்ன நடந்தது?
- கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் களமிறங்கியது கியூபா
- ஆத்திகம் முதல் நாத்திகம் வரை: கொள்கைகள் ஒன்றாகப் பயணிக்கும் தமிழகம்
- இந்திய வம்சாவளி மருத்துவருக்கு பிரிட்டனில் கோவிட்-19 சேவைக்கான விருது
- இந்திய பெண்ணியத்தின் வலுவான தூண் "ருகியா"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












