கருணா அம்மான்: “ஒரே இரவில் 2000 - 3000 படையினரை கொலை செய்தேன்” - காவல்துறை விசாரணை ஆரம்பம்

தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) வெளியிட்ட கருத்து தற்போது இலங்கையில் பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
ஆணையிறவு பகுதியில் தான் 2000 முதல் 3000 வரையான இலங்கை இராணுவத்தினரை ஒரே இரவில் கொலை செய்ததாக விநாயகமூர்த்தி முரளிதரன் அண்மையில் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
அம்பாறை - நாவிதன்வெளி பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றிலேயே அவர் இந்த கருத்தை கூறியிருந்தார்.
இவ்வாறு வெளியிடப்பட்ட கருத்தே இலங்கை அரசியலில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
''காரைத்தீவு தலைவர் என்னை பற்றி ஒரு அறிக்கை விடுத்துள்ளார். கருணா அம்மான் கொரோனாவை விட கொடிய நபர் என்று கூறியுள்ளார். இலங்கையில் கொரோனா வந்தே 9 பேர்தான் இறந்துள்ளனர். நான் ஒரே இரவில் 2000 - 3000 ராணுவ வீரர்களை கொலை செய்தேன்’’ என கருணா அம்மான் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கருணா அம்மான் வெளியிட்ட இந்த கருத்து தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக விசாரணையை ஆரம்பிக்குமாறு பதில் போலீஸ் மாஅதிபர் விடுத்த உத்தரவிற்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Sajith
எனினும், விசாரணைகள் நிறைவடைய எவ்வளவு காலம் செல்லும் என உறுதியாக கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கருணா அம்மானிடம் வாக்குமூலம் பெற்றுகொள்ளப்பட்ட பிறகு விசாரணை ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
’’ராஜபக்ஷ குடும்பத்தினர் இனம் மற்றும் தேசியம் தொடர்பில் கருத்து வெளியிட்டு கொண்டிருக்கும் தருணத்தில், அவர்களுடன் உள்ளவர் இராணுவத்தை கொலை செய்த விதத்தை கூறுகின்றார்’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவும் கருத்து தெரிவித்திருந்தார்.
’’மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக இருந்த காலத்தில், கருணா அம்மான் அந்த கட்சியின் உபத் தலைவராக செயற்பட்டுள்ளார்’’ என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் கருணா அம்மான் பிரதி அமைச்சராக செயற்பட்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷ சார்பில் உள்ளவர்களே இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புறத்தில் தமிழ் வாக்குகளை பெற்றுகொள்வதற்காகவும், மறுபுறத்தில் சிங்கள வாக்குகளை பெற்றுகொள்வதற்காகவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜித்த சேனாரத்ன ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியமைக்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், இன்று கருணா அம்மான் 3000 இராணுவத்தினரை கொலை செய்ததாக கூறும் கருத்து தொடர்பில் என்ன செய்ய போகின்றார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணா அம்மான் உடனடியாக கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், கருணா அம்மான் தமது கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியிலேயே கருணா அம்மான் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












