இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சியோன் தேவாலய குண்டுத் தாக்குதலின் பிரதான சந்தேகநபர் கைது

சியோன் தேவாலய குண்டுத் தாக்குதலின் பிரதான சந்தேகநபர் கைது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாக்குதலுக்கு உள்ளான நீர்க்கொழும்பில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் எடுக்கப்பட்ட படம்.

மட்டக்களப்பு - சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு உதவி வழங்கிய பிரதான சந்தேகநபரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கொழும்பு புறநகர் பகுதியான கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய செனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர், மட்டக்களப்பு - சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு உதவிகளை புரிந்தவர் என விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த சந்தேகநபரை வழிநடத்தியவர் யார் என்பது தொடர்பிலும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தற்போது விசாரணைகளை நடத்தி வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றியவர், விசாரணைகளை வேறு கோணத்தில் கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொண்டுள்ளாரா என்பது தொடர்பிலும், சாட்சியங்களை மறைக்க முயற்சித்துள்ளாரா என்பது தொடர்பிலும் இருவேறு குழுக்களை நியமித்து விசாரணைகளை நடத்த பதில் போலீஸ் மாஅதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விசாரணைகள் போலீஸ் விசேட கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 31 சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், பயங்கரவாத தடுப்பு பிரிவின் கீழ் 60 சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

குறித்த சந்தேகநபர்களின் தொலைபேசி அறிக்கைகளை அடிப்படையாக வைத்து, இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய சந்தேகநபரையும் வழிநடத்தியுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக ஜாலிய செனாரத்ன கூறினார்.

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

அத்துடன், ஈஸ்டர் தாக்குதலில் நடத்தப்பட்ட ஏனைய குண்டுத் தாக்குதல்களுடனும் குறித்த நபர் தொடர்புப்பட்டுள்ளாரா என்பது தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் போலீஸ் அதிகாரி ஜாலிய செனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்

இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 277 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த குண்டுத் தாக்குதல்களில் சுமார் 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்ததாக பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கையிலுள்ள மூன்று பிரதான கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று பிரதான ஹோட்டல்களை இலக்கு வைத்து இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

தாக்குதலில் சுமார் 40 வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்திருந்ததுடன், 45திற்கும் அதிகமான சிறுவர்களும் உயிரிழந்திருந்தனர்.

இந்த தாக்குதல் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் முன்னாள் தலைவர் சஹரான் ஹசிம் தலைமையில் நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது,

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: