கொரோனா வைரஸ்: இலங்கையில் உயரும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - Corona virus in Srilanka

கொரோனா வைரஸ்: இலங்கையில் உயரும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை?

பட மூலாதாரம், Getty Images

கோவிட் - 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை இலங்கையில் மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் (மார்ச் 13) மூன்று நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றது.

மேலும் இரண்டு பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் சமீபத்தில் இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டு வந்தவர் என்பது தெரியவந்தது. மற்றொருவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உறவினர் என்று இலங்கை சுகாதார துறை பொது இயக்குனர் தெரிவித்தார். எனவே தற்போது இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டோரின் விபரங்கள்

  • 41 வயதான குறித்த நபர், ஜெர்மனிக்கு அண்மையில் விஜயம் செய்துள்ள நிலையில் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. குறித்த நபர் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கொரோனா வைரஸ்: உயரும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - இலங்கையின் நிலை என்ன?

பட மூலாதாரம், Army.lk

  • 37 வயதான குறித்த நபர் இத்தாலியிலிருந்து அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த நிலையில், அவர் பொலன்னறுவை - கந்தகாடு பகுதியில் அமைக்கப்பட்ட கொரோனா தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையத்தில் கண்காணிக்கப்பட்ட நிலையில் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் பொலன்னறுவை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
  • 43 வயதான குறித்த நபர் இத்தாலியிலிருந்து அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த நிலையில், அவர் பொலன்னறுவை - கந்தகாடு பகுதியில் அமைக்கப்பட்ட கொரோனா தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையத்தில் கண்காணிக்கப்பட்ட நிலையில் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதற்கு முன்னர் இரண்டு இலங்கையர்களும், ஒரு வெளிநாட்டுப் பிரஜையும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருந்தனர்.

Banner image reading 'more about coronavirus'
பேனர்
கொரோனா வைரஸ்: உயரும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - இலங்கையின் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

  • ஜனவரி மாதம் 27ஆம் தேதி சீன நாட்டு பிரஜையொருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருந்தமை முதல் முறையாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், பெப்ரவரி மாதம் 19ஆம் தேதி பூரண குணமடைந்து சீனா நோக்கிப் பயணித்திருந்தார்.
  • 52 வயதான இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளமை கடந்த 10ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இத்தாலியிலிருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா வழிக்காட்டியாக செயற்பட்ட இலங்கையர் ஒருவரே இந்த தொற்றுக்கு இலக்காகியிருந்தார். அவர் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கொரோனா வைரஸ்: உயரும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - இலங்கையின் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

  • 44 வயதான மற்றுமொரு இலங்கையர் இந்த தொற்றுக்கு இலக்காகியுள்ளமை நேற்று முன்தினம் (வியாழன்) அடையாளம் காணப்பட்டிருந்தார். சுற்றுலா வழிக்காட்டியாக செயற்பட்ட ஒருவரே இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார். கொரோனா தொற்றுக்கு இலக்காகிய சுற்றுலா வழிகாட்டியுடன் தங்கியிருந்த மற்றுமொரு வழிகாட்டியே இவராவார். இந்த இருவரும் ஒரே இடத்தில் தங்கியிருந்த நிலையிலேயே இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

64 பேர் கண்காணிக்கப்படுகின்றனர்

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் 64 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கொரோனா வைரஸ்: உயரும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - இலங்கையின் நிலை என்ன?

பட மூலாதாரம், SL Army

அத்துடன், தென்கொரியா, இத்தாலி மற்றும் இரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் பல தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையங்களில் 14 நாட்கள் தங்க வைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், இலங்கைக்குள் வைரஸ் தொற்றுக்கு இலக்கானோர் பயணித்த மற்றும் அவர்களுடன் சந்திப்புக்களை நடத்திய நபர்கள் குறித்து ஆராயும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவத்தினர் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 6 கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் பூரண குணமடைந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: