இலங்கை நாடாளுமன்றத்தில் இறுதி நாள்: 66 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது - ஏன்?

இலங்கை நாடாளுமன்றத்தில் இறுதி நாள்

பட மூலாதாரம், PARLIAMENT.LK

இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தின் இறுதி நாள் அமர்வுகள் இன்று (பிப்ரவரி 20) நடைபெற்றன.

News image

நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் தேதி கலைக்கப்படவுள்ள நிலையில், நாடாளுமன்ற இறுதி நாள் அமர்வுகள் இன்று இடம்பெற்றன.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்றைய அமர்வுகள் ஆரம்பமாகின.

இந்த நிலையில், நாடாளுமன்ற இறுதி நாள் அமர்வுகள் இன்றைய தினம் இடம்பெறுவதை சபாநாயகர் கரு ஜயசூரிய தனது டுவிட்டர் தளத்தில் வெளிப்படுத்தியிருந்தார். இந்த காலத்தில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால நாடாளுமன்றங்கள், குழுக்கள் மூலம் வெளிக் கொணரப்பட்ட விடயங்கள் தொடர்பில் பக்கச் சார்பின்றி செயற்பட வேண்டும் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு நான்கரை வருடங்கள் நிறைவடையும் வரை நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது.

அதற்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தை கலைக்க புதிதாக ஜனாதிபதியாக தெரிவான கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருந்த போதிலும், அதற்கு ஆதரவு வழங்க எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், 8ஆவது நாடாளுமன்றத்தின் நான்கரை ஆண்டு காலம் எதிர்வரும் முதலாம் தேதியுடன் நிறைவடைகின்றது.

அரசியலமைப்பின் ஊடாக நான்கரை வருடம் நிறைவடையும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே நாடாளுமன்றத்தை கலைக்க கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் இறுதி நாள்

பட மூலாதாரம், PARLIAMENT.LK (NUWAN Duminda)

இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் தேதி 8ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமையவே நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது.

7ஆவது நாடாளுமன்றம் 2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26ஆம் தேதி கலைக்கப்பட்டதுடன், 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டியதுடன், பிரதமராக ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.

இதன்படி, 8ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் தேதி நடைபெற்றது.

பதவி காலம் நிறைவடையும் முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில், நாடாளுமன்றத்தை ஐந்து வருடங்கள் பூர்த்தி செய்யாத எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படாது என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இட்டவல பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதன்படி, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த முறை 66 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் கிடைக்காது போகும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாடாளுமன்றம் எதிர்வரும் 2ஆம் தேதி கலைக்கப்படும் பட்சத்தில், எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் பொதுத் தேர்தல் இலங்கையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: