இலங்கை பல்கலைக்கழகத்தில் ராகிங் என்ற பெயரில் பாலியல் தொந்தரவு - நடந்தது என்ன? #GroundReport

இலங்கை பல்கலைக்கழகத்தில் ராகிங் என்ற பெயரில் பாலியல் தொந்தரவு

பட மூலாதாரம், Getty Images

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பெண் மாணவிகளுக்கு ராகிங் என்னும் பெயரில் சில ஆண் மாணவர்களினால் பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அண்மையில் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினால் 3 முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

News image

மாணவர் நலச்சேவை உதவிப் பதிவாளர், மாணவர்கள் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், மாணவர் ஆலோசகர்கள், மூத்த மாணவர் ஆலோசகர்கள் அடங்கிய குழு அமைத்து சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்துதல், மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குறுந்தகவல்கள் வட்ஸ்அப் தகவல்கள், தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய தரவுகளை பொலிஸாரின் இணையவழிக் குற்றங்கள் ஊடாக விசாரணை நடத்தல், மற்றும் மாணவர் ஒன்றியம் உடனடியாக புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வை நடத்த ஒழுங்கு செய்தல் ஆகிய முக்கிய 3 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி, உயர் கல்வி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் மட்டத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

இலங்கை பல்கலைக்கழகத்தில் ராகிங் என்ற பெயரில் பாலியல் தொந்தரவு

பட மூலாதாரம், Getty Images

அந்த முறைப்பாடு தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் ஆராய்ந்தது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்படி மூன்று தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் மாணவி ஒருவர் ராகிங் காரணமாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பிலும் அங்கு மாணவிகளுக்கு தொலைபேசி மூலமான பாலியல் தொந்தரவுகள் இடம்பெற்றமை தொடர்பிலும் ஜனாதிபதி மட்டத்துக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ள போதும் கிளிநொச்சி வளாக விடுதிக் காப்பாளர் உள்ளிட்டோருக்கு மாணவிகளோ அவர்களது பெற்றோரோ முறைப்பாடு வழங்கவில்லை என்று பல்கலைக்கழகம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் ஊக்கங்களை வழங்குவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கை பல்கலைக்கழகத்தில் ராகிங் என்ற பெயரில் பாலியல் தொந்தரவு

பட மூலாதாரம், Getty Images

இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ராகிங் குறித்து வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம் .சார்ல்ஸ் தனிப்பட்ட முறையில் விசாரணைகளை முன்னெடுத்த்துள்ளதாக ஆளுநர் அலுவகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கென உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் அதிகாரிகள் குழு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு வருகை தரவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி தொழிநுட்ப பீடத்தில் இடம்பெறும் ராகிங் என்னும் பெயரில் பாலியல் துன்புறுத்தல்கள்' ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை கோரியுள்ளது

இதுதொடர்பில் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜினால் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி தொழிநுட்ப பீடத்தில் இடம்பெறும் ராக்கிங் பாலியல் துன்புறுத்தல்கள்' என்பது தொடர்பான செய்தியால் தங்களது கவனம் ஈர்க்கப்படுகிறது. அத்துடன் மேலும் பல இணையத்தளங்களில் ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்களின் ஒளிப்படங்கள் மற்றும் அவர்கள் அனுப்பிய தொலைபேசி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி அதில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளரால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: