பிரபல சிங்கள நடிகரும், ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி-யுமான ரஞ்ஜன் ராமநாயக்க கைது - யார் இவர்?

ரஞ்ஜன் ராமநாயக்க

பட மூலாதாரம், RANJAN RAMANAYAKE / FACEBOOK

படக்குறிப்பு, ரஞ்ஜன் ராமநாயக்க

இலங்கையின் பிரபல சிங்கள நடிகரும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்ஜன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட பாதுகாப்பிற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிக்கான அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பிக்காத குற்றச்சாட்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த துப்பாக்கிக்கான அனுமதிப் பத்திரம் 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் புதுப்பிக்கப்படாமை மற்றும் துப்பாக்கி ரவைகள் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஆசு மாரசிங்க தெரிவிக்கின்றார்.

கைது செய்யப்பட்ட ரஞ்ஜன் ராமநாயக்கவின் வீட்டிலிருந்து பெருந்தொகையான இருவெட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் வீடு நேற்று மாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

ரஞ்ஜன் ராமநாயக்க

பட மூலாதாரம், RANJAN RAMANAYAKE / FACEBOOK

வீட்டில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் பின்னரே அவர் கைது செய்யப்பட்டார்.

வீட்டை சோதனை செய்வதற்காக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவில், சோதனை செய்வதற்கான காரணம் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்திருந்தார்.

Presentational grey line
Presentational grey line

'நான் எந்தவித தவறையும் செய்யவில்லை. எனினும், ஏதேனும் சந்தர்ப்பத்தில் நான் கைது செய்யப்படும் பட்சத்தில் சிறைச்சாலைக்கு செல்வேனே தவிர, வைத்தியசாலைக்கு செல்ல மாட்டேன். நான் சிறந்த உடல் அரோக்கியத்துடன் உள்ளேன். உண்மையைப் பேசியமைக்கான எந்தவொரு எதிரொலிகளையும் சந்திக்கத் தயார்," என ரஞ்ஜன் ராமநாயக்க தனது ட்விட்டர் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

'எமது தனிப்பட்ட கணினி, எனது வீட்டில் இருந்த சீ.டி. மற்றும் டீ.வி.டி ஆகியவற்றை அவர்களின் பொறுப்புக்கு எடுத்துள்ளனர். வசிம் தாஜுடீனின் கொலை தொடர்பில் என்னிடமிருந்த ஆவணங்களையும் அவர்கள் பொறுப்பேற்றுள்ளனர்"" எனவும் ரஞ்ஜன் ராமநாயக்க ட்விட்டர் ஊடாக அறிவித்துள்ளார்.

ரஞ்ஜன் ராமநாயக்க

பட மூலாதாரம், TWITTER / RANJAN RAMANAYAKE

இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக, நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சர்களான பட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித்த சேனாரத்ன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் பின்னர் பிணையில் செல்ல நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தை ரஞ்ஜன் ராமநாயக்க தொடர்ச்சியாக விமர்சித்திருந்தார்.

குறித்த அரசாங்கம் தொடர்பில் நிதி மோசடியை விசாரணை செய்யும் பொலிஸாரிடம் ரஞ்ஜன் ராமநாயக்க பல்வேறு சந்தர்ப்பங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: