உள்ளாட்சி தேர்தல் வெற்றி விவரம் இறுதி பட்டியல்: திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜக வென்ற இடங்கள் எத்தனை?

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: உள்ளாட்சி தேர்தல் கட்சிகள் நிலவரம்
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மொத்தம் உள்ள 515 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவியிடங்களில் திருவாரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா ஒரு பஞ்சாயத்து கவுன்சிலர் என இரு பதவியிடங்களை தவிர்த்து, மீதல் உள்ள 513 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவியிடங்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதேபோல் 5,090 ஊராட்சி ஒன்றிய பதவியிடங்களில், 3 இடங்களை தவிர்த்து மீதம் உள்ள 5087 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள் பின் வருமாறு,
மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் தேர்தலில் திமுக 243 இடங்களையும், அதிமுக 214 இடங்களையும், காங்கிரஸ் 15 இடங்களையும், பா.ஜ.க 7 இடங்களையும், தே.மு.தி.க 3 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 7 இடங்களையும், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களையும், பா.ம.க தா.ம.க உள்ளிட்ட பிறர் 22 இடங்களையும் கைப்பற்றி உள்ளனர்.
அது போல ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் திமுக 2100 இடங்களையும், அதிமுக 1781 இடங்களையும், காங்கிரஸ் 132 இடங்களையும், பா.ஜ.க 85 இடங்களையும், தே.மு.தி.க 99 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 62 இடங்களையும், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 33 இடங்களையும், பா.ம.க தா.ம.க உள்ளிட்ட பிறர் 795 இடங்களையும் கைப்பற்றிஉள்ளனர்.

பட மூலாதாரம், தினத்தந்தி

தினமணி: "நீட் தேர்வு: உச்சநீதிமன்றத்தில் தமிழகம் புதிய மனு"

பட மூலாதாரம், Getty Images
எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்குத் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை (நீட்) கட்டாயமாக்கும் சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு "ரிட்' மனுவை சனிக்கிழமை தாக்கல் செய்தது.
நீட் தேர்வை கட்டாயமாக்கி, கடந்த 2017 மற்றும் 2018-இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக இந்த மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், எம்டிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் அரசாணையை மத்திய அரசு 2016-இல் பிறப்பித்தது.
எனினும், தமிழகத்துக்கு அந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்க்கப்படுகின்றனர்.
நிகழாண்டுக்கான நீட் தேர்வு மே 3-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நடை
முறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான கடைசி தேதி ஜனவரி 6 ஆகும்.
இந்நிலையில், நீட் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை தமிழக சுகாதாரத் துறை சார்பில் புதிதாக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017 மற்றும் 2018-இல் கொண்டுவரப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சில் சட்டத் திருத்தத்துக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு, மத்திய சுகாதார- குடும்ப நல அமைச்சகம், இந்திய மருத்துவ கவுன்சில், இந்தியப் பல் மருத்துவ கவுன்சில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் உள்ளிட்டவை பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் மனுவில், "நீட் தேர்வை கட்டாயமாக்கும் வகையில், இந்திய மருத்துவ கவுன்சில், இந்தியப் பல் மருத்துவ கவுன்சில் சட்டங்களில் முறையே 2017, 2018-ஆம் ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மாநிலத்தின் உரிமையைப் பறிப்பதாகவும் உள்ளது. சமூகத்துக்கு மாநில அரசு செய்யும் கடமைகளைத் தடுக்கும் வகையில் உள்ளது. கிராமப்புற மாணவர்கள் பள்ளித் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்ற நிலையிலும் நீட் தேர்வு காரணமாக அவர்களால் மருத்துவ சேர்க்கை பெற முடியவில்லை. இதனால், மருத்துவக் கல்லூரிகளில் சேரும் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்திய மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அரசியல் அமைப்புச்சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது. ஆகவே, அந்த திருத்தங்களைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா: 107 குழந்தைகள் மரணம் - பன்றிகள் உலவும் ராஜஸ்தான் மருத்துவமனை
ராஜஸ்தான் கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஏழு குழந்தைகள் உயிரிழந்திருக்கிறார்கள். இதுவரை மரணித்த குழந்தைகளின் எண்ணிக்கை 107ஆக உயர்ந்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடுமையான குளிர், உயிர் காக்கும் கருவிகள் ஏதும் வேலை செய்யாதது, சுகாதாரமற்ற சூழல் ஆகியவையே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
"கைக்குழந்தைகள் வைக்கப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போதுதான் எலி நுழையும் ஓட்டைகள் அடைக்கப்பட்டன" என்கிறார் தன் குழந்தையை அந்த மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் மனிஷ் குமார்.
போதிய பணியாளர்கள் இல்லாதது, கட்டமைப்பு குறைபாடு போன்ற காரணங்களால் ஒரே படுக்கையில் மூன்று குழந்தைகளை வைக்கும் சூழல் உள்ளது. எந்த ஜன்னல்களும் சரியாக மூடாததோடு பன்றிகளும் அந்த மருத்துவமனையில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் என அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












