தலித், மாற்றுத் திறனாளி - 21 வயது தமிழ் மாணவியின் தமிழக உள்ளாட்சி தேர்தல் வெற்றி

- எழுதியவர், விக்னேஷ்.அ
- பதவி, பிபிசி தமிழ்
தினக்கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர். சிறு வயதில் உண்டான உடல்நலக் கோளாறால் ஏற்பட்ட மாற்றுத்திறன். கடினமான பொருளாதார சூழலுக்கு நடுவே கல்லூரிப் படிப்பு. கல்விக்கு இடையில் கிடைக்கும் நேரத்தில் சமூக செயல்பாடு. அடிப்படை உள்கட்டமைப்பும் சுகாதார வசதிகளும் இல்லாத தலித் குடியிருப்பு.
இவை அனைத்தையும் மீறி தமிழக உள்ளாட்சித் தேர்தலில், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஆதரவையும் பெற்ற வேட்பாளர்களை எதிர்த்து வெற்றியைப் பதிவு செய்துள்ளார் 21 வயதாகும் முதுகலை தமிழ் மாணவியான சரண்யா குமாரி.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்து பொள்ளாச்சி ஊராட்சியின் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வென்றுள்ளார் சரண்யா. தற்போது உடுமலை அரசு கலை கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவி இவர்.
"தேர்தலில் போட்டியிடுவது என்பது நான் எடுத்த முடிவல்ல. நான் வசிக்கும் எம்.ஜி.ஆர் காலனி மக்கள், எங்கள் குடியிருப்பு அமைந்துள்ள, தலித் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்ட 8வது வார்டுக்கு யாரை வேட்பாளராக்கலாம் என்று ஆலோசித்து, என்னை களமிறக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். முடிவெடுத்தபின்தான் நான் போட்டியிட வேண்டும் என்றே அவர்கள் தெரிவித்தனர்," என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய சரண்யா.
தந்தை, கணவர் அல்லது மகன் என குடும்பத்தில் ஏற்கனவே ஓர் ஆண் உறுப்பினர் அரசியல் பதவிகளில் இருந்து, உள்ளாட்சிப் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அவர்கள் ஆதரவுடன் போட்டியிட்டு கல்லூரி மாணவி, மூதாட்டி போன்றவர்கள் தேர்தலில் வெல்லும் சூழல் மிகவும் இயல்பானதாகிவிட்டது.
ஆனால் சரண்யாவுக்கு அப்படி அரசியல் பின்புலம் எதுவும் இல்லை. அவரது தந்தை கிட்டான் தினக் கூலிக்கு வேலை செய்யும் ஒரு 'சென்டரிங்' தொழிலாளி. தாய் சரஸ்வதி வேலை கிடைக்கும் நாட்களில் மட்டுமே பணிபுரியும் ஒரு விவசாயத் தொழிலாளி.

கூலி வேலை செய்துதான் சரண்யா மற்றும் அவரது தம்பி ஆகியோரை அவர்கள் படிக்க வைத்துள்ளனர்.
மருத்துவ முகாம்களுக்கு மக்களை அழைத்துச் செல்லுதல், தங்கள் பகுதியில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லுதல், தொண்டு நிறுவனங்கள் வழங்கும் உதவிகளை தங்கள் பகுதி மக்களுக்கு கொண்டு சேர்த்தல் போன்ற சமூக செயல்பாடுகளே அவரது பொது வாழ்க்கையின் அடித்தளமாக இருந்துள்ளது.
"தேர்தலுக்கு முன்பு வந்த செமஸ்டர் விடுமுறை எனக்கு தேர்தல் பணிகள் செய்ய உதவியாக இருந்தது. எனக்கு கல்லூரி நேரம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை. எனவே படித்துக்கொண்டே உள்ளாட்சிப் பணியைத் தொடர்வது எனக்கு சிக்கலாக இருக்காது," என்றார் சரண்யா.

பட மூலாதாரம், Getty Images
தண்ணீர் வராத பொது கழிவறைகள், கான்கிரீட் தளம், சாக்கடைகள் மற்றும் தெருவிளக்கு இல்லாத தலித் குடியிருப்பின் வீதிகள் ஆகியவற்றை நிவர்த்தி செய்வதே தனது முதல் குறிக்கோள் என்று கூறிய சரண்யாவின் வெற்றியில் இன்னொரு முக்கியத்துவமும் உள்ளது.
ஆத்து பொள்ளாச்சி ஊராட்சியில் உள்ள ஒன்பது வார்டுகளில் நான்கில் திமுக ஆதரவு பெற்றவர்களும், நான்கில் அதிமுக ஆதரவு பெற்றவர்களும் வென்றுள்ளனர். ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவர் பதவிக்கு தேர்வாக, கட்சிகளைச் சேராமல் வென்ற ஒன்பதாவது உறுப்பினரான சரண்யாவின் ஆதரவு தேவை.
"சரண்யாவை காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்துடன் துணைத் தலைவராக்க வேண்டும் என்று எங்கள் பகுதி பொதுமக்கள் அனைவரும் இரு கட்சிகளிடமும் கோரிக்கை வைத்துள்ளோம். இரு தரப்பிலும் வாய்மொழியாக உறுதிமொழி அளித்துள்ளனர். இனிமேல்தான் என்ன செய்வார்கள் என்று தெரியும்," என்கிறார் சரண்யாவுக்காக தேர்தல் பணிகளில் ஈடுபட்ட, அதே பகுதி இளைஞரான சரவண குமார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












