பற்றி எரியும் ஆஸ்திரேலியா:“ஒரு லட்சம் மக்கள், 1300 வீடுகள், 3000 வீரர்கள்” - நடப்பது என்ன? மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
'பற்றி எரியும் ஆஸ்திரேலியா'
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனை அணைக்க ஏறத்தாழ 3000 தீயணைப்பு வீரர்கள் களத்தில் உள்ளனர். தென் கிழக்கு ஆஸ்திரேலியாவில் பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று (சனிக்கிழமை) 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என வானிலை மையம் கூறி உள்ளது.இதன் காரணமாக சனிக்கிழமையை 'ஆபத்தான நாள்' என்றும் கூறி உள்ளனர். காட்டுத்தீ பற்றி எரியும் பகுதிகள் அருகே இருக்கும் மக்களை வெளியேற நியூ சவூத் வேல்ஸ் பிரிமீயர் கிளாடிஸ் வலியுறுத்தி உள்ளார். செப்டம்பரில் பரவ தொடங்கிய காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர், டஜன் கணக்கான மக்கள் காணாமல் போய் உள்ளனர், 1300 வீடுகள் தீக்கிரையாகி உள்ளது. ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
புவிவெப்பமயமாதல்தான் இந்த காட்டுத்தீக்கு முக்கிய காரணமென சொல்லப்படுகிறது. ஆனால் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், "காட்டுத்தீக்கும் காலநிலை மாற்றத்துக்கும் நேரடி தொடர்பில்லை" என்று முன்னர் தெரிவித்து இருந்தார்.
40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பம், குறைவான ஈரப்பதம், பலத்த காற்று, இவைதான் இப்போதைய சூழலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்:

காசெம் சுலேமானீ: அமெரிக்கா - இரான் இடையே இனி என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images
இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டது, அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கியுள்ளது. இதன் விளைவுகள் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கும்.
இந்த பிரச்சனையில் இரான் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு நடக்கும் தாக்குதலும் அதற்கு நடத்தப்படும் எதிர்தாக்குதலும் இரு நாடுகளுக்கு இடையில் வெளிப்படையான மோதலை ஏற்படுத்தும்.
விரிவாகப் படிக்க:இரான் தளபதியை கொன்ற அமெரிக்கா: அடுத்து என்ன நடக்கும்?

கோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு பாகிஸ்தான் தொடர்பா?

பட மூலாதாரம், FACEBOOK
சென்னையில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதியன்று பெசன்ட் நகர் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்திய பெண் ஒருவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பது குறித்து விசாரிக்கப்படும் என காவல்துறை ஆணையர் தெரிவித்ததற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை பெசன்ட் நகர் பகுதியில் டிசம்பர் 29ஆம் தேதியன்று சிலர் தெருக்களில் கோலமிட்டு, அந்தக் கோலத்திற்கு முன்பாக 'No CAA, No NRC' என எழுதி தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.
விரிவாகப் படிக்க:கோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு பாகிஸ்தான் தொடர்பா?

பெயர் குழப்பத்தால் மாற்றி அறிவிக்கப்பட்ட வெற்றி வேட்பாளர்

நடந்து முடிந்துள்ள தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில், வெற்றி பெற்ற வேட்பாளருக்கு பதிலாக, பெயர் ஒன்று போல் இருந்த குழப்பத்தால் வேறு ஒரு வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள குமளங்குளம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஜெயலட்சுமி என்பவர் ஆட்டோ சின்னத்திலும், விஜயலட்சுமி என்பவர் பூட்டு - சாவி சின்னத்திலும் போட்டியிட்டனர்.
விரிவாகப் படிக்க:பெயர் குழப்பத்தால் மாற்றி அறிவிக்கப்பட்ட வெற்றி வேட்பாளர்

காசெம் சுலேமானீ: அமெரிக்காவால் கொல்லப்பட்ட இரான் ராணுவ தளபதி யார்?

பட மூலாதாரம், AFP
இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவருமான ஜெனரல் காசெம் சுலேமானீ அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டுள்ளது சர்வதேசஅளவில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
இராக்கில் உள்ள அமெரிக்க படைகள், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் காசெம் சுலேமானீயை கொன்றதை அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமை அலுவலகமான பென்டகன் உறுதிபடுத்தியது.
விரிவாகப் படிக்க:அமெரிக்காவால் கொல்லப்பட்ட இரான் ராணுவ தளபதி காசெம் சுலேமானீ யார்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












