தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்: பெயர் குழப்பத்தால் மாற்றி அறிவிக்கப்பட்ட வெற்றி வேட்பாளர்

நடந்து முடிந்துள்ள தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில், வெற்றி பெற்ற வேட்பாளருக்கு பதிலாக, பெயர் ஒன்று போல் இருந்த குழப்பத்தால் வேறு ஒரு வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள குமளங்குளம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஜெயலட்சுமி என்பவர் ஆட்டோ சின்னத்திலும், விஜயலட்சுமி என்பவர் பூட்டு - சாவி சின்னத்திலும் போட்டியிட்டனர்.
அந்த ஊராட்சியில் மொத்தம் 4,139 வாக்குகள் உள்ளன.
ஜெயலட்சுமி 2,860 வாக்குகள் பெற்று 1,681 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தல் அதிகாரிகள் ஜெயலட்சுமி என்ற பெயரை விஜயலட்சுமி என்று எழுதி, வெற்றி பெற்றதாக அறிவித்து விஜயலட்சுமி என்பவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழும் வழங்கினர் என்று ஜெயலட்சுமியின் தரப்பில் கூறுகின்றனர்.
பெயர் குழப்பத்தினால் உண்மையாகவே வெற்றி பெற்ற ஜெயலட்சுமிக்கு பதில் விஜயலட்சுமிக்கு சான்றிதழ் வாங்கியதால், ஜெயலட்சுமி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டார்.

பட மூலாதாரம், BBC
இதை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்காத காரணத்தினால் தனக்கு வாக்களித்த மக்களுடன் சென்று நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனிடையே வாக்கு எண்ணும் மையத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் காணொளி ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் தேர்தல் அதிகாரி சுப்பிரமணியம், குமளங்குளத்தில் வெற்றிபெற்ற வேட்பாளர் விஜயலட்சுமி என்றும், அவரது சின்னம் ஆட்டோ ரிக்சா என்றும் கூறுகிறார். ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளரே வெற்றி பெற்றவர் என்று அதில் அவர் தெரிவிப்பதாக பதிவாகியுள்ளது. ஆனால் உண்மையில் ஜெயலட்சுமிதான் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டவர்.

வேட்பாளர் பெயரையும், வேட்பாளர் போட்டியிட்ட சின்னத்தையும் மாற்றிசொல்வது குறித்து அவரிடம் சிலர் வாதம் செய்வது போல அந்தக் காணொளி உள்ளது.
அவரை தொடர்ந்து, அங்கிருந்த உதவி தேர்தல் அதிகாரி கவிதை இதுபற்றி கூறும்போது, "நான் சரியாக ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலட்சுமி என்பவரே வெற்றி பெற்றதாக நான் தெரிவித்து இருந்தேன். ஆனால் வெற்றி வேட்பாளரை அறிவிக்கும்போது தேர்தல் அதிகாரி ஜெயலட்சுமி என்பதற்கு பதில் விஜயலட்சுமி என தவறுதலாக அறிவித்துவிட்டார். இவர்கள் அறிவித்ததற்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை" என தெரிவிக்கிறார்.

இதுகுறித்து அதிக வாக்குகள் பெற்ற ஜெயலட்சுமி கூறுகையில், "1,681 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றது நான்தான், தேர்தல் முடிவு குறித்து அறிவிக்கும்போது ஆட்டோ ரிக்சா சின்னத்தில் போட்டியிட்ட விஜயலட்சுமி வெற்றிபெற்றதாக அறிவித்தனர். என் பெயரை தவறுதலாக அறிவித்ததால் விஜயலட்சுமி என்பவர் சான்றிதழை வாங்கிக்கொண்டார். தேர்தல் அதிகாரிகளும் இதை கண்டுகொள்ளவில்லை. இதுதொடர்பாக கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்ததையில் உடன்பாடு ஏற்படவில்லை. அவர் தங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்றும், நீங்கள் போராட்டத்தை நிறுத்திகொண்டு நீதிமன்றத்தை நாடுங்கள் என்று கூறினார். ஆகவே இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இருக்கிறோம்" என தெரிவித்தார்.
நடந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பிபிசி தமிழிடம் கூறுகையில், "இந்தப் பிரச்சனை எனது கவனத்திற்கு வந்துள்ளது. ஆனால் தேர்தல் விதிப்படி இதுகுறித்து தேர்தல் அதிகாரி மட்டுமே இறுதி முடிவு எடுக்க முடியும். வெற்றி வேட்பாளரை தேர்தல் அதிகாரி அறிவித்து, வேட்பாளருக்கு சான்றிதழை வழங்கிவிட்டால் அதுவே இறுதியானது. இதை மாற்றுவதற்கு மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் இல்லை. இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












