தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - அதிக இடங்களில் திமுக வெற்றி - மாவட்டங்களில் முந்துவது யார்?

கோப்புப்படம்

பட மூலாதாரம், Jaison G/The India Today Group via Getty Images

டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில், 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று (வியாழக்கிழமை) முதல் வெளியாகி வருகின்றன.

வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பல இடங்களிலும் இன்னமும் முடியவில்லை.

ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் முடிவுகளில் இதுவரை மொத்தமுள்ள 5067 இடங்களில், திமுக கூட்டணி 2263 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும், அதிமுக கூட்டணி 2049 இடங்களில் வென்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

திமுக, அதிமுக வெற்றி நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Facebook

அதேபோல் மாவட்ட கவுன்சிலர் தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 515 இடங்களில், இதுவரை முடிவுகள் வெளியான 478 இடங்களில், அதிமுக கூட்டணி 225 இடங்களையும், திமுக கூட்டணி 251 இடங்களையும் வென்றுள்ளன.

Presentational grey line
Presentational grey line

மீதமுள்ள இடங்களுக்கு நடந்த தேர்தலின் முடிவுகள் தொடர்ந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்டங்களில் யாருக்கு வெற்றி?

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை வெளிவந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில், ராமநாதபுரம், மண்டபம், ஆர்.எஸ்.மங்களம், திருவாடானை ஆகிய பல ஒன்றியங்களில் திமுக கூட்டணி கூடுதல் இடங்களில் வென்றுள்ளன.

இந்த மாவட்டத்தில் இதுவரை வெளிவந்துள்ள 14 மாவட்ட கவுன்சிலர்கள் தேர்தல் முடிவுகளில், திமுக 10 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக 3 இடங்களையும், 1 இடத்தை பாஜகவும் வென்றுள்ளன.

கொங்கு மண்டலத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் கோவையில் அதிமுக 10 இடங்களிலும் திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

திருப்பூரில் அதிமுக 12 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும், ஈரோட்டில் அதிமுக 14 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும் வென்றுள்ளன.

அதே வேளையில், நீலகிரியில் திமுக 5 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் வென்றுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட 29 மாவட்ட கவுன்சிலர் தேர்தல் முடிவுகளில், திமுக 13 இடங்களிலும், அதிமுக 12 இடங்களிலும் தேமுதிக 1 இடத்திலும் சுயேட்சை வேட்பாளர்கள் மூவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோல் இம்மாவட்டத்தில் முடிவுகள் வெளிவந்த 287 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களில், அதிமுக 110 இடங்களிலும் திமுக 82 இடங்களிலும் தேமுதிக 17 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் பாஜக 2 இடங்களிலும் சுயேட்சை வேட்பாளர்கள் 74 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

திமுக குற்றச்சாட்டு - நீதிமன்ற உத்தரவு

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, 'உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இரவு முழுவதும் வெளியாகும். நாளைக்குள் (இன்று) ஒட்டுமொத்த முடிவுகளும் வெளியிட முயற்சி செய்யப்படும்' என்று தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கை

முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் என நேற்று பகலில் திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு தேர்தல் தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று முக ஸ்டாலின் இது தொடர்பாக புகார் அளித்தார்.

புகார் மனு அளித்ததை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஸ்டாலின், "திமுக கூட்டணி முன்னணியில் இருக்கிறது. ஆனால், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக முன்னிலை வகித்தும், முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஆக்குகின்றனர். திமுகவின் வெற்றியை முறியடிக்க சதி நடக்கிறது. அதிமுகவினர் பல முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள். இது தொடர்பாக அந்தந்த இடங்களில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. அதனால்தான் நேரில் தலைமை அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தோம். எங்கள் முன்பாகவே தலைமை ஆணையர், சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் உறுதி அளித்தார்" என தெரிவித்தார்.

இதேபோல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை திட்டமிட்டு திமுக தாமதப்படுத்துவதாக, அதிமுக நிர்வாகிகளும் புகார் செய்தனர்.

உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவந்த நிலையில், முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் இருப்பதாகவும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றம் சாட்டிய திமுக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது.

ஸ்டாலின்

பட மூலாதாரம், FACEBOOK

இதனை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, திமுக தொடர்ந்த வழக்கை, அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.

"வாக்கு எண்ணிக்கை குறித்த முழுமையான விவரங்களை ஜனவரி 3ஆம் தேதி (இன்று) அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்" என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திமுக தொடர்ந்த வழக்கில் வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து திமுகவின் முன்னணி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நள்ளிரவில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: