முரசொலி நில வழக்கு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

பட மூலாதாரம், Getty Images
தி.மு.க. நாளேடான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலமா என்ற சர்ச்சை தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆஜராகத் தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலமா என்பது குறித்து ஆராய வேண்டுமென பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரை விசாரித்த தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன், இது தொடர்பாக விளக்கமளிக்க மு.க. ஸ்டாலின் ஜனவரி 7ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராக வேண்டுமென கூறப்பட்டிருந்தது.
இதற்குத் தடை விதிக்க வேண்டுமென்று கோரி தி.மு.கவின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, சி.வி. கார்த்திகேயன், மு.க. ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டியதில்லையென உத்தரவிட்டார். மேலும், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் இந்த விவகாரத்தை விசாரிப்பதிலிருந்து அதன் துணைத் தலைவர் முருகன் விலகியிருக்க வேண்டுமென்றும் கூறினார்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, "முதலில் தில்லியில் ஆஜராக வேண்டுமென அனுப்பியிருந்தார். பிறகு திடீரென சென்னையில் ஆஜராக வேண்டுமென கேட்டார். முரசொலி அறங்காவலர் என்ற முறையில் நான் ஆஜராகி, இதனை விசாரிக்க உங்களுக்கு உரிமை இல்லை என்று சொன்னேன். அரசாங்கத் தரப்பில் வாய்தா வாங்கினார்கள். ஸ்ரீநிவாசனும் வாய்தா வாங்கினார்," என்று சொன்னார்.

பட மூலாதாரம், TWITTER/UDHAYSTALIN
"முரசொலியில் நான் அறங்காவலர், மு.க. ஸ்டாலின் நிர்வாக அறங்காவலர். ஆனால், இவர்கள் முதலில் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள். அவர் முரசொலியின் சிஇஓ. அதைச் சொன்னவுடன் மீண்டும் நிர்வாக அறங்காவலருக்கு அனுப்பினார்கள். இப்போது நீதிமன்றத்தில் ஆவணங்களைத் தர வேண்டுமென்றும் ஆவணங்கள் வேண்டும் என்பவர்கள் நீதிமன்றத்தில் மனுச் செய்து பார்த்துக்கொள்ளலாம் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது நீதிமன்றம்," என்றும் ஆர்.எஸ். பாரதி கூறினார்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில் அந்தப் படத்தைப் பாராட்டியிருந்தார். இதைப் பார்த்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக குற்றம்சாட்டினார். இதற்குப் பிறகு, பா.ஜ.கவும் இந்த விவகாரத்தில் தி.மு.கவை குற்றம்சாட்டியது. முரசொலி அமைந்திருக்கும் நிலம், பஞ்சமி நிலம் என்றும் அதனால் அதனை கையகப்படுத்தி உரியவர்களுக்குத் தர வேண்டுமென்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












